ஷீலா அழகு கலை நிபுணர். வயது 29, தன்னுடைய அழகையும் உடல் கட்டையும் பராமரிப்பதில் மிகுந்த கவனம் செலுத்துவார். தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களுக்கு தான் ஒரு முன்னுதாரணமாக விளங்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வமுடன் இருப்பார். தன்னம்பிக்கை வாய்ந்தவர். தன்னுடைய சொந்த அழகு நிலையத்தை நடத்தி வருகிறார். திருமணம் செய்து கொண்டு ஆறு மாதங்கள் தான் ஆகிறது. அன்று மருத்துவமனைக்கு வந்திருந்தார்.
அவருடைய பிரச்சினை சற்று வித்தியாசமானது. உடற்பயிற்சி செய்வதற்கு , அதில் ஆர்வத்தை ஏற்படுத்துவது மிகக்கடினம். ஆனால் ஷீலாவோ மணி அடித்தார் போல காலை 5 மணிக்கு தன்னுடைய உடற்பயிற்சியை தொடங்கி விடுவார். ஒரு மணி நேரத்திற்குள் தினமும் யோகா ,நடை பயிற்சி போன்றவற்றை மேற்கொள்கிறார். அதை தவிர உணவிலும் மிகுந்த கவனத்துடன் இருப்பார். இது அவருடைய புகுந்த வீட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் வித்தியாசமாகப்படுகிறது.
ஆறு மாதங்கள் ஆகியும் கருத்தரிக்கவில்லை . "நீ நிறைய உடற்பயிற்சி செய்கிறாய்!, அதனால் தான் கருத்தரிக்கவில்லை. பயிற்சி செய்வதை நிறுத்து" என்று கூறுகின்றனர்.
ஷீலா எவ்வளவு எடுத்து குறையும் அவர்கள் அதை ஏற்கவில்லை. ஷீலாவுக்குமே சில சந்தேகங்கள் இருந்தன.
அதனால் மருத்துவ ஆலோசனைக்காக வந்திருந்தார்.
ஷீலாவிடம் பேசிக் கொண்டிருந்ததில் அவருக்கு மாதவிடாய் சுழற்சி சீராக இருந்தது மற்றும் கணவன் மனைவி இருவருக்குமே வேறு மருத்துவ பிரச்சினைகள் இல்லை.
இருவருக்கும் அடிப்படை ரத்தப் பரிசோதனைகள் செய்ததில் எல்லாம் சரியாக இருந்தது. ஸ்கேன் செய்து பார்த்ததில், ஷீலாவிற்கு கர்ப்பப்பை முட்டைப்பை போன்றவையும் ஆரோக்கியமாக இருந்தன.
பொதுவாக உடல் எடை அதிகரிப்பது, கூடுதலான பிஎம்ஐ( BMI) இருப்பது குறிப்பாக பி எம் ஐ 27 விட அதிகமாகும் போது, ஒருவருக்கு ஹார்மோன்களில் மாறுதல்கள் ஏற்படவும் அதனால் மாதவிடாய் ஒழுங்கற்று இருப்பதற்கும் அதனுடைய தொடர்ச்சியாக கருத்தரிப்பதில் தாமதம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. அது போலவே பிஎம்ஐ 20-க்கும் குறைவாக இருந்தாலும் ஹார்மோன்கள் குறைவால் மாதவிடாய் ஒழுங்கின்மையும் கருத்தரிப்பதில் தாமதமும் ஏற்படலாம்.
உடற்பயிற்சியை பொறுத்தவரை மிகவும் அதிதீவிரமான ,கடுமையான உடற்பயிற்சி குறிப்பாக விளையாட்டு வீரர்கள், தடகள வீரர்கள், போன்றோர்க்கு ஹார்மோன் குறைபாடுகளை ஏற்படுத்தலாம். அதனால் மாதவிடாய் வராமல் இருப்பதற்கும், கருத்தரிப்பதில் தாமதம் ஏற்படவும் வாய்ப்புண்டு. ஆனால் மிதமான உடற்பயிற்சி தினமும் ஒரு மணி நேரம் அதுவும் ஷீலா போல, யோகா ,நடை பயிற்சி போன்றவற்றையும் சேர்த்து செய்வது எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்த வாய்ப்பு இல்லை.
கணவரின் சிகரெட் பழக்கம் கருவையும் பாதிக்குமா..? Passive Smoking பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை...
அவருடைய மாதவிடாய் சீராக வருவதிலிருந்து ஹார்மோன்கள் சரியாக வேலை செய்கின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஷீலாவிடம் உறவினர்களையும் அழைத்து வருமாறு கூறினேன். "ஷீலாவுக்கும் கணவருக்கும் எடுத்த எல்லா பரிசோதனைகளும் நார்மலாக இருக்கின்றன. அவருடைய பிஎம்ஐ 25. கருத்தரிப்பதற்கு மிகவும் தகுந்ததாகும். மேலும் இது போன்ற மிதமான உடற்பயிற்சி அவருக்கு கர்ப்பமாகும் வாய்ப்பை அதிகப்படுத்துமே தவிர குறைக்கும் வாய்ப்பு இல்லை " அவர்களிடமும் எடுத்துக் கூறினேன்.
மேலும் பல பெண்களும் தன்னுடைய உடல் எடையை குறித்து எந்த விதமான முக்கியத்துவம் இல்லாமல் இருக்கிறார்கள். குழந்தை வேண்டுமென்று சிலர் மிகுந்த ஓய்வெடுத்துக் கொண்டு குண்டாகி விடுவதையும் பார்க்கிறேன்..
தன்னை சரியாக வைத்துக் கொள்ள நினைக்கும் பெண்களை காண்பதே மிகவும் அரிதாகும் என்று கூறினேன்.
கணவன்- மனைவி ஐடி துறையில் இரவு நேரப்பணி... இதனால் கருத்தரிப்பதில் தாமதமாகுமா..?
மேலும்,ஷீலாவிற்கு இயல்பாகவே கருத்தரிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. அடுத்த ஆறு மாதங்கள் முயற்சி செய்யலாம். கருத்தரிக்கவில்லை என்றால் சிகிச்சையை தொடங்கலாம் என்று கூறினேன். அனைவரும் ஒப்புக்கொண்டனர்.
விரைவில் மகிழ்ச்சியான செய்தியை எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கையுடன் பணிகளை தொடர்ந்தேன்.
மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மாவை தொடர்பு கொள்ள : doctorjsharma@gmail.com
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.