பாலிவுட் நடிகர் அமீர் கான் நடித்து சமீபத்தில் வெளியான டயர் விளம்பரப் படத்துக்குக் கண்டனம் தெரிவித்த
பாஜக எம்.பி. ஆனந்த்குமார் ஹெக்டே, மசூதிகளில் பாங்கு ஓதுவது ஒலிமாசு என்பதை அறிவுறுத்தும் விளம்பரப்படத்தையும் நீங்கள் எடுக்க வேண்டுமென்று கூறியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.
பிரபல தனியார் டயர் நிறுவனத்தின் விளம்பரம் ஒன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. அந்த விளம்பரத்தில் தோன்றிய பாலிவுட் நடிகர் ஆமிர் கான், ‘சாலைகள் பட்டாசு வெடிப்பதற்காக அல்ல, சாலைகள் கார்களுக்காக’ என்று கூறுவார். இது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதங்களையும் சர்ச்சைகளையும் எழுப்பியுள்ளது. நெட்டிசன்கள் அமீர் கானுக்கும், அந்த டயர் நிறுவனத்துக்கும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்நிலையில் கர்நாடகா பாஜக எம்.பி. ஆனந்த் குமார் ஹெக்டே சியட் டயர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஆனந்த் வர்தன் கோயெங்காவுக்குக் கடிதம் எழுதியுள்ளார், அதில், “இந்த விளம்பரம் இந்துக்களிடையே சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. பட்டாசை சாலையில் வெடிக்காதீர்கள் என்று அமீர் கான் அந்த டயர் விளம்பரத்தில் நல்ல செய்தியைத்தான் கூறியுள்ளார், ஆனால் அதற்காக உங்களுக்கு கரகோஷம் செய்வேன்.
இதே போல் மக்கள் சாலையில் சந்திக்கும் இன்னொரு பிரச்சனையையும் நீங்கள் கண்டித்து விளம்பரம் எடுக்க வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் மற்றும் பிற பண்டிகை நாட்களில் முஸ்லிம்கள் நமாஸ் என்ற பெயரில் அவர்கள் சாலைகளை தடுக்கின்றனர். இந்திய சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி முஸ்லிம்கள் நமாஸ் செய்வது ஒரு வழக்கமான காட்சி. இதனால் ஆம்புலன்ஸ்களும் செல்ல முடியாமல் பெரிய சேதங்கள் ஏற்படுகின்றன. அதே போல் ஒலி மாசு ஏற்படுவது பற்றியும் உங்கள் நிறுவனம் விளம்பரம் எடுக்க வேண்டும்.
மசூதிகளில் பாங்கு ஓதுகின்றனர், அதனை ஒலிபெருக்கிகளில் மூலம் சப்தமாக வைக்கின்றனர். அந்த ஒலி அளவு அனுமதிக்கப்பட்ட அளவையும் கடந்தது. இதனால் வீடுகளில் நோய்வாய்ப்பட்டு இருக்கும் மனிதர்கள் உட்பட பலருக்கும் பெரிய தொந்தரவாக உள்ளது. ஆசிரியர்கள் பாடம் எடுக்க முடியவில்லை ஒலிபெருக்கி மூலம் பாங்கு ஓதுவதை ஒலிபரப்புவதனால் பாதிக்கப்படுபவர்கள் பட்டியல் நீளம் நான் கொஞ்சம்தான் சொல்கிறேன்.
நீங்களும் இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான், இந்துக்கள் நூற்றாண்டுகளாக ஒடுக்குமுறையை அனுபவித்து வருகின்றனர். இப்போது சில இந்து எதிர்ப்பு நடிகர்கள் இந்து உணர்வுகளைப் புண்படுத்துமாறு நடிக்கின்றனர். ஆனால் அவர்கள் தங்கள் மதத்தின் தவறுகளைக் கண்டிப்பதில்லை. உங்கள் நிறுவனத்தின் விளம்பரம் இந்துக்களிடையே அமைதியின்மையை உருவாக்கிய இந்தக் குறிப்பிட்ட சம்பவத்தை கவனத்தில் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு கூறியுள்ளார் பாஜக எம்.பி. ஆனந்த்குமார் ஹெக்டே.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.