அருண் ஜேட்லிக்கு சிலை வைப்பதாக இருந்தால்.. என் பெயரை எடுத்து விடுங்கள், உறுப்பினராகவும் வெளியேறுகிறேன்: பிஷன் சிங் பேடி காட்டம்

பிஷன் சிங் பேடி, அருன் ஜேட்லி.

டெல்லி, பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு சிலை எழுப்புவதாக இருந்தால் பார்வையாளர்கள் ஸ்டாண்டில் உள்ள என் பெயரை நீக்குங்கள், மேலும் உறுப்பினராகவும் நீடிக்க விரும்பவில்லை என்று முன்னாள் இந்திய கேப்டனும் இடது கை சுழற்பந்து வீச்சாளருமான பிஷன் சிங் பேடி டெல்லி கிரிக்கெட் சங்கத்துக்குக் காட்டமாக மின்னஞ்சல் செய்துள்ளார்.

  • Share this:
டெல்லி, பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு சிலை எழுப்புவதாக இருந்தால் பார்வையாளர்கள் ஸ்டாண்டில் உள்ள என் பெயரை நீக்குங்கள், மேலும் உறுப்பினராகவும் நீடிக்க விரும்பவில்லை என்று முன்னாள் இந்திய கேப்டனும் இடது கை சுழற்பந்து வீச்சாளருமான பிஷன் சிங் பேடி டெல்லி கிரிக்கெட் சங்கத்துக்குக் காட்டமாக மின்னஞ்சல் செய்துள்ளார்.

2017-ல் பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் ஒரு ஸ்டாண்டுக்கு பிஷன் பேடி பெயர் சூட்டப்பட்டது. ஜேட்லியின் 14 ஆண்டுகால டெல்லி கிரிக்கெட் சங்க தலைவர் பதவி அவரைச் சார்ந்தவர்களுக்கே பதவி வழங்கப்பட்டு அவர்களைச் சார்ந்தவர்களுக்காகச் சாதகம் செய்வதற்காகவே கிரிக்கெட் சங்கம் பயன்படுத்தப்பட்டது என்று பிஷன் பேடி தன் கடிதத்தில் சாடியுள்ளார்.

டிடிசிஏ தலைவருக்கு பிஷன் சிங் பேடி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

நான் இந்தக் கடிதத்தை கனத்த இதயத்துடனும் ஆழமான தர்மசங்கட உணர்வுடனும் எழுதுகிறேன்.

இறந்து போனவரைப் பற்றி தவறாகப் பேசக்கூடாது என்கிற அளவுக்கு எனக்கு வயதும் நாகரீகமும் உள்ளது. அதே போல் எனக்கும் மறைந்த அருண் ஜேட்லிக்குமான உறவு என்பதும் மேம்பட்டதாக இல்லை. அவர் டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக இருந்த போது கிரிக்கெட் சங்கத்தை நடத்த அவர் தேர்வு செய்த நபர்கள் பற்றி எனக்கு நிறையவே பிரச்சினைகள் உள்ளன.

அருண் ஜேட்லி வீட்டில் நடந்த ஒரு கூட்டத்தின் போது நான் வெளியேறினேன், மிக மோசமாக கெட்ட வார்த்தைகளால் வசை பாடிய ஒரு ரவுடி நபரை அவரால் வெளியே போ என்று கூற முடியாத நிலையைப் பார்த்தேன். நானுன் முரண்டு பிடிப்பவன் தான். பழைய சிந்தனையைச் சேர்ந்தவன், ஒரு இந்திய கிரிக்கெட் வீரனாக எனக்கு இருக்கும் கர்வத்தினால் அருண் ஜேட்லியைச் சதா புகழ்ந்து கொண்டிருக்கும் ஊழல்வாதிகளான அவரது ஜால்ராக்களுடன் என்னால் ஒத்துப்போக முடியவில்லை.

இவ்வாறாக அருண் ஜேட்லியின் டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைமைப் பொறுப்பு தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு சாதகம் செய்வதாக அமைந்தது. நான் அடுத்த தலைமுறைக்கும் இந்தச் சண்டையை கொண்டு செல்ல விரும்பவில்லை, அதே வேளையில் ஒரு நிலைப்பாடு எடுத்தால் அதில் உறுதியாக நிற்பதையும் கற்றுக் கொண்டவன் நான்...

...பெரோஸ் ஷா கோட்லா மைதானத்துக்கு அருண் ஜேட்லியின் பெயரை அவசரம் அவசரமாக, அதற்கான தகுதி ஏதுமில்லாது சூட்டும்போது, எனது எதிர்வினையானது கோட்லா மைதானத்தின் புனிதப்பெயர் கெடாமல் இருந்தால் சரி என்ற நல்லுணர்வின் அடிப்படையில் இருந்தது. ஆனால் நான் எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டேன்! இப்போது கோட்லாவின் ஜேட்லியின் சிலை வைக்கப் போகிறார்கள் என்று அறிகிறேன். ஜேட்லியின் சிலை கோட்லா மைதானத்துக்குள் வருவது பற்றிய செய்தி என்னை ஈர்க்கவில்லை.

ஒரு பொறுமை மிக்க, சகிப்புத்தன்மை மிக்க மனிதனாக என் மீது எனக்கு பெருமை உண்டு. ஆனால் இப்போது அவை எல்லாம் போய்விடும் என்ற அச்சம் எனக்கு ஏற்படுகிறது. டெல்லி கிரிக்கெட் சங்கம் என்னை சோதித்து விட்டது, நான் இப்படிப்பட்ட ஒரு கறாரான ஒரு நடவடிக்கையை எடுக்க என்னை டிடிசிஏ தள்ளி விட்டது.

ஆகவே டிடிசிஏ தலைவரே, என் பெயரில் உள்ள ஸ்டாண்டிலிருந்து உடனடியாக என் பெயரை நீக்க வேண்டும் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். இதோடு உறுப்பினர் பதவியையும் உதறுகிறேன்...

...அருண் ஜேட்லி டிடிசிஏ தலைவராக இருந்த போது வாரியம் ஊழல்களால் நிரம்பியிருந்தது. இது குறித்த வழக்குகள் இன்னமும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன என்பதையும் தாங்கள் அறிவீர்கள். மறைந்த அருண் ஜேட்லி ஒரு திறமை வாய்ந்த அரசியல் தலைவர். எனவே அவருக்கு சிலை வைப்பதென்றால் நாடாளுமன்றத்தில் வைக்க வேண்டும். கிரிக்கெட் ஸ்டேடியத்தில் அல்ல. அவர் ஒரு நல்ல கிரிக்கெட் ரசிகராக இருக்கலாம் ஆனால் டிடிசிஏ தலைவராக அவரது காலம் விரும்பத்தக்கதல்ல...

... டெல்லி கிரிக்கெட் சங்கம் உலகளாவிய கிரிக்கெட் பண்பாட்டை புரிந்து கொள்ளவில்லை. ஆகவே நான் அதிலிருந்து வெளியேற விரும்புகிறேன். கிரிக்கெட் வீரர்களைக் காட்டிலும் நிர்வாகிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு இடத்தில் நான் நீடிக்க விரும்பவில்லை. ஆகவே ஸ்டாண்டிலிருந்து என் பெயரை உடனடியாக நீக்கி விடுங்கள். என்னைப் பற்றியோ என் கிரிக்கெட் பாரம்பரியம் பற்றியோ நீங்கள் கவலைப்பட வேண்டாம். எனது கிரிக்கெட் உறுதிப்பாடுகளுடன் எல்லாம் வல்ல இறைவன் என்னை வைத்திருக்கிறான். என்னுடைய மவுனத்தினாலும் உணர்வற்ற இத்தகையச் செயல்களுக்கு ஆதரவளிப்பதினாலும் என் கேரக்டரின் வலுவுக்கு களங்கம் கற்பித்துக் கொள்ள விரும்பவில்லை.

இவ்வாறு அந்த மின்னஞ்சலில் பிஷன் சிங் பேடி கூறியுள்ளார்.
Published by:Muthukumar
First published: