அரசு நீட் மையத்தில் பயின்ற 19 ஆயிரம் மாணவர்களில் ஒருவருக்கு கூட மருத்துவ சீட் இல்லை!

அரசு நீட் மையத்தில் பயின்ற 19 ஆயிரம் மாணவர்களில் ஒருவருக்கு கூட மருத்துவ சீட் இல்லை!

கோப்புப்படம்

நீட் தேர்வை மீண்டும் மீண்டும் மாணவர்கள் எழுதுவதால் பல பிரிவுகளில் கட்ஆஃப் 100 மதிப்பெண்கள் வரை அதிகரித்துள்ளது. அதனால், எங்களுடைய மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றாலும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைப்பதில்லை.

 • News18
 • Last Updated :
 • Share this:
  தமிழக அரசு சார்பில் அளிக்கப்படும் நீட் பயிற்சி மையத்தில் பயின்ற 19,355 மாணவர்களில் ஒருவருக்கு கூட முதல்கட்ட மருத்துவக் கலந்தாய்வில் இடம் கிடைக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

  நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு கட்டாயப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு சார்பில் இலவசமாக அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பயிற்சி மையங்கள் மூலம் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

  பள்ளிக் கல்வித்துறை, ஸ்பீட் மருத்துவ நிறுவனம் தமிழகம் முழுவதும் 412 பயிற்சி மையங்கள் அமைத்து மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதில், 19,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர். அதில், தமிழ்நாடு முழுவதும் 14 பகுதிகளில் தேர்வு செய்யப்பட்ட 2,747 மாணவர்களுக்கு வீடு தேடிச் சென்று பயிற்சி அளிக்கப்படுகிறது.

  கடந்த ஆண்டு, அரசுப் பள்ளியைச் சேர்ந்த மூன்று மாணவர்களுக்கும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலிருந்து நான்கு மாணவர்களுக்கும் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இடம் கிடைத்தது. ஆனால், இந்தமுறை ஒரு மாணவர்களுக்குக் கூட இடம் கிடைக்கவில்லை. அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர் உமாசங்கர். அவருடைய மதிப்பெண் 440.

  இதுகுறித்து தெரிவித்த அவருடைய தந்தை, ‘அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இந்த ஆண்டு கட்ஆஃப் 474 மதிப்பெண்கள். அதனால், எனது மகனுக்கு இடம் கிடைக்கவில்லை. அதனால், எனது மகன் இன்னும் ஒரு வருடம் நீட் தேர்வு பயிற்சி செய்யவேண்டும்’என்று தெரிவித்தார்.

  ஆனால், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, நீட் தேர்வில் 300 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்தமுறை, 10 மாணவர்கள் மட்டுமே 300 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருந்தனர்.

  இந்தமுறை 32 மாணவர்கள் 300 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை, 1,333 மாணவர்களிலிருந்து, 2,000 மாணவர்களாக அதிகரித்துள்ளது.

  நீட் தேர்வை மீண்டும் மீண்டும் மாணவர்கள் எழுதுவதால் பல பிரிவுகளில் கட்ஆஃப் 100 மதிப்பெண்கள் வரை அதிகரித்துள்ளது. அதனால், எங்களுடைய மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றாலும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைப்பதில்லை. வரும் சுற்றுகளிலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசுக் கல்லூரியில் இடம் கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை’ என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

  2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நீட் பயிற்சி மையங்களைத் தொடங்கிவைத்தபோது பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ‘ஆண்டுக்கு 500 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்க வழிவகை செய்யப்படும்’ என்றார். ஆனால், ஒரு மாணவர்களுக்குக் கூட இதுவரையில் இடம் கிடைக்கவில்லை.

  அரசு நீட் பயிற்சி மையத்தின் செயல்பாடு குறித்து தெரிவித்த அதிகாரி, ‘கடந்த ஆண்டு, நீட் பயிற்சி மையத்தின் மீது மாநில அரசு ஆர்வம் காட்டியது. ஆனால், பயிற்சி மையங்களுக்கு தேவையான பணம் கொடுக்காததால், கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து நீட் பயிற்சி மையம் செயல்படவில்லை. தேர்தலுக்குப் பிறகு, மாநில அரசு நீட் பயிற்சி மையத்தில் ஆர்வம் காட்டவில்லை’ என்று தெரிவித்தார்.

  இதுகுறித்து தெரிவித்த நீட் பயிற்சியாளர், ‘நீட் போன்ற தேர்வுகளுக்கு, மாணவர்களுக்கு ஆண்டுக்கு 1,200 மணி நேரங்கள் பயிற்சி அளிக்கவேண்டும். ஆனால், அரசு நீட் பயிற்சி மையத்தில் 500 மணி நேரங்கள் மட்டுமே பயிற்சிஅளிக்கப்படுகிறது.

  அதேபோல, அவர்களுக்கு படிப்பதற்கான புத்தகங்கள்(study or test materials ) வழங்கப்படுவதில்லை. ஜூன் மாதத்திலேயே நீட் பயிற்சி தொடங்கியிருக்கவேண்டும். ஆனால், ஜூலை மாதம் தொடங்கிவிட்டது ஆனால், இதுவரையில் நீட் தேர்வுக்கான பயிற்சி இதுவரையில் தொடங்கவில்லை’ என்று தெரிவித்தார்.

  Also see:

  Published by:Karthick S
  First published: