மதுரையில் தண்ணீருக்காக எந்த பெண்ணும் குடத்துடன் அலையவில்லை : அ.தி.மு.க எம்.எல்.ஏ எஸ்.எஸ்.சரவணன்

மதுரையில் தண்ணீருக்காக எந்த பெண்ணும் குடத்துடன் அலையவில்லை : அ.தி.மு.க எம்.எல்.ஏ எஸ்.எஸ்.சரவணன்

மக்களுடைய குறைகளை மட்டும் சட்டமன்றத்தில் பேசி பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன். வாய்ப்பு கொடுத்தால் மீண்டும் அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வேன்.

  • Share this:
மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் எஸ்.எஸ்.சரவணன் நிறுத்தப்பட்டுள்ளார். கடந்த 2016 தேர்தலிலும் இதே தொகுதியில் வெற்றி பெற்றவர் அவர் மீண்டும் தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து தி.மு.க கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் ம.தி.மு.க வேட்பாளர் பூமிநாதன் களம் காண்கிறார். கடந்த தேர்தலில் மக்கள் நல கூட்டணி சார்பில் போட்டியிட்டு சரவணனிடம் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்து இருந்தார் பூமிநாதன். எனவே இம்முறை போட்டி கடுமையாக இருக்கும் என கருதப்படும் நிலையில், சரவணன் நியூஸ் 18 க்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டி.

கேள்வி: இரண்டாவது முறையாக தெற்கு தொகுதியில் களம் காண்கிறீர்கள்.. வெற்றி பெறுவதற்கான நம்பிக்கை எந்தளவில் உள்ளது?

2016-ல் ஜெயலலிதா அளித்த வாய்ப்பால் வெற்றி பெற்று, கடந்த 5 ஆண்டுகளாக பல திட்டங்களை செய்து இருக்கிறேன். மாரியம்மன் தெப்பக்குளம் 48 ஆண்டுகளுக்கு பிறகு முழு கொள்ளளவை எட்டியுள்ளது. சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் அளவு உயர்ந்துள்ளது.  வைகை ஆற்றின் குறுக்கே இரண்டு தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.மக்கள் ஆதரவு ஜெயலலிதாவுக்கு உள்ளது. ஜெயலலிதாவின் ஆசி அ.தி.மு.க தொண்டர்களுக்கு உள்ளது. மக்களுக்கான திட்டங்கள், எங்களை வெற்றிபெற வைக்கும்  நம்பிக்கை முழுமையாக உள்ளது.

கேள்வி: மீண்டும் வெற்றி பெற்று வந்தால் தொகுதிக்கு என்ன திட்டங்கள் வைத்துள்ளீர்கள்?

பதவியை துஷ்பிரயோகம் செய்ய மாட்டேன். மக்களுடைய குறைகளை மட்டும் சட்டமன்றத்தில் பேசி பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன். வாய்ப்பு கொடுத்தால் மீண்டும் அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வேன்.

கேள்வி: தேர்தல் அறிக்கையில் அறிவித்த பல திட்டங்களை நீங்கள் முக்கியம் என்று கருதினால் அதை ஆட்சியில் இருந்த போதே செய்திருக்க வேண்டியது தானே என்று திமுகவினர் எழுப்புகின்றனரே?

காலத்திற்கு ஏற்ப திட்டங்கள் மாறிக்கொண்டே இருக்கும். நாளைக்கு என்ன தேவை என்பதை நேற்று முடிவு செய்ய முடியாது.தி.மு.க ஆட்சியில் மின்வெட்டு பிரச்சனை இருந்தது, தண்ணீர் பிரச்சனை இருந்தது. அனைத்தையும் இப்போது சரி செய்துள்ளோம்.குறை சொல்பவர்கள் குறை சொல்லிக் கொண்டே தான் இருப்பார்கள். ஆனால் மக்கள் சந்தோஷமாக தான் இருக்கிறார்கள்.

கேள்வி: குடிப்பதற்கே தண்ணீர் முழுமையாக எல்லா மக்களுக்கும் கிடைக்காத நிலையில் வாஷிங் மெஷினை வைத்து என்ன செய்வது என்ற கேள்வியையும் திமுகவினர் முன்வைக்கின்றனரே..?

மதுரையில் தண்ணீர் தட்டுப்பாடு என்பது முழுமையான பொய். குளம் குட்டை கண்மாய் எல்லாம் நிரம்பி இருக்கிறது. இரண்டு ஆண்டுகளில் எந்த பெண்களும் குடத்தை எடுத்துக்கொண்டு வெளியே வரவில்லை. நல்ல மழை பெய்து மதுரையில் தண்ணீர் பிரச்சனை கிடையாது. இனிமேலும் வராது என்றார்.
Published by:Ramprasath H
First published: