ஹோம் /நியூஸ் /Breaking and Live Updates /

1 முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடம் சட்டம் - தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவு

1 முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடம் சட்டம் - தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவு

காட்சிப் படம்

காட்சிப் படம்

கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் மாநில மொழிகளை கட்டாயமாக்கிய சட்டத்தை அமல்படுத்தவில்லை என்றால் அதற்கு தண்டனை விதிக்கும் வகையில் பிரிவுகள் உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடம் சட்டம் அமல்படுத்தியது குறித்து அனைத்துப் பள்ளிகளிலும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிடக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழகத்தில் தமிழ் மொழியை கட்டாயமாக்கி 2006ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. 2007-08 ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வகுப்பாக படிப்படியாக அமல்படுத்தப்பட்டு, 2015- 16ம் ஆண்டில் பத்தாம் வகுப்பு வரை அமல்படுத்த முடிவெடுக்கப்பட்டது. இந்த சட்டத்தை முறையாக அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, சென்னையைச் சேர்ந்த ராகவன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், தமிழாசிரியர் பதவிகளுக்கு அரசு ஒப்புதல் வழங்காததால், தமிழாசிரியர்களை நியமிக்க முடியவில்லை என பல அரசு உதவி பெறும் பள்ளிகள் புகார் தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2015-16 ம் கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ, ஐ.சி.எஸ்.இ, உள்ளிட்ட பாட திட்ட பள்ளிகளில் 10ம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடச் சட்டம் படிப்படியாக அமல்படுத்தப்படும் என உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்த நிலையில் அதை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

Also Read : 'பருப்பு வேகாது.. தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்குங்கள்'- பழனிசாமிக்கு பன்னீர்செல்வம் சவால்!

கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் மாநில மொழிகளை கட்டாயமாக்கிய சட்டத்தை அமல்படுத்தவில்லை என்றால் அதற்கு தண்டனை விதிக்கும் வகையில் பிரிவுகள் உள்ளதாகவும், தமிழ் கட்டாய பாடச் சட்டத்தில் அதுபோல எந்த பிரிவுகளும் இல்லாததால், இச்சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்த முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தாததால், 2022ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 9 லட்சம் மாணவர்களில் 47 ஆயிரத்து 55 பேர் தமிழ் பாடத்தில் தோல்வியடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் கட்டாய பாட சட்டம் அனைத்து பள்ளிகளிலும் அமல்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, மனுவுக்கு இரு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

First published:

Tags: Chennai High court, Madras High court