சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை - வானிலை ஆய்வு மையம்

கோப்பு படம்

சென்னையில் கிண்டி, வடபழனி, கே.கே.நகர், சேப்பாக்கம், தியாகராய நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், காலை முதல் விட்டு விட்டு மழை பெய்கிறது.

 • Share this:
  குமரிக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக சென்னை, திருவள்ளூர்,உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதன் காரமாக, ஞாயிறு முதல் வரும் 18ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

  15 மற்றும்16ம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்கள், ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 48 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அந்த மையம் கூறியுள்ளது.  சென்னையில் கிண்டி, வடபழனி, கே.கே.நகர், சேப்பாக்கம், தியாகராய நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், காலை முதல் விட்டு விட்டு மழை பெய்கிறது.

  சென்னை மீனம்பாக்கம் விமானநிலையம் பகுதியில் அதிகாலை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. பலத்த சூறைக்காற்று மற்றும் மோசமான வானிலை காரணமாக துபாய்க்கு செல்வதற்காக தயாரான சிறப்பு விமானம் 30 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டது.  கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி ஏற்கனவே முன்கூட்டியே விமான நிலையம் வந்த பயணிகள், விமானம் தாமதத்தால் மேலும் சிரமத்திற்கு உள்ளாகினர். ஹாங்காங்கிற்கு செல்ல வேண்டிய லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் சரக்கு விமானமும் மழையால் 30 நிமிடம் தாமதமாக புறப்பட்டது.
  Published by:Vijay R
  First published: