தேர்தலுக்கு முன்னர் கட்சி மாறிய பிரபல அரசியல்வாதிகள்!

தேர்தலுக்கு முன்னர் கட்சி மாறிய பிரபல அரசியல்வாதிகள்!

மத்திய பிரதேசம், மணிப்பூர், கோவா, அருணாச்சல் பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ந்ததற்கு காரணம் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அணி மாறியதால் தான் எனவும் ADR அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
தேர்தல் நெருங்கும் நேரத்தில் சீட் கிடைக்காத விரக்தியிலோ அல்லது பிற காரணங்களுக்காகவோ அரசியல்வாதிகள் கட்சி மாறுவது என்பது வாடிக்கையான ஒன்று தான். அதுவரை பயணித்து வந்த கட்சியிலிருந்து தேர்தல் நேரத்தில் ஒருவர் விலகும் போது அது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து 170 எம்.எல்.ஏக்களும், பாஜகவில் இருந்து 18 எம்.எல்.ஏக்களும் விலகி மாற்றுக்கட்சிகளில் இணைந்திருப்பதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் மத்திய பிரதேசம், மணிப்பூர், கோவா, அருணாச்சல் பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ந்ததற்கு காரணம் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அணி மாறியதால் தான் எனவும் ADR அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுவரை தேர்தல் நேரத்தில் கட்சி மாறிய டாப் 10 பிரபலங்கள் குறித்து தற்போது அறிந்து கொள்வோம்..

ஜோதிராதித்ய சிந்தியா:

காங்கிரஸின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த ஜோதிராதித்ய சிந்தியா கடந்த மார்ச் 2020-ல் இருந்து தனது 22 ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் பாஜகவில் இணைந்தார். இதன் காரணமாக மத்திய பிரதேசத்தில் கமல் நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. காங்கிரஸில் இருந்து கொண்டு நாட்டுக்கும், மாநிலத்திற்கும் சேவையாற்ற முடியவில்லை என அப்போது அவர் கூறினார்.

சுவேந்து அதிகாரி:

மேற்கு வங்கத்தின் செல்வாக்கான அரசியல் ஆளுமையாக விளங்கிய இவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததுடன் திரிணாமுல் காங்கிரசில் இருந்தும் விலகி கடந்த ஆண்டு டிசம்பர் 19ம் தேதி பாஜகவில் இணைந்தார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடர்பாக அவர் பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார்.

தினேஷ் திரிவேதி:

முன்னாள் ரயில்வே அமைச்சரான தினேஷ் திரிவேதி, மேற்குவங்கத்தில் அரங்கேறி வரும் வன்முறைகளால் அதிருப்திக்கு ஆளாகி கடந்த பிப்ரவரி 12ம் தேதி தனது மாநிலங்களவை எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். மேலும் திரிணாமுல் காங்கிரஸில் நீடிப்பது கடினமானது என குறிப்பிட்ட அவர் அக்கட்சியிலிருந்து விலகி இந்த மாதம் 6ம் தேதி பாஜகவில் இணைந்தார்.

ரமேஷ் ஜார்கிஹோளி:

கர்நாடக காங்கிரஸின் அதிருப்தியாளராக விளங்கிய இவர் 2019ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். சித்தராமைய அரசில் கேபினட் அமைச்சராக்கப்பட்டார். சில மாதங்களில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையிலும் மீண்டும் பாஜகவில் வேட்பாளராக களமிறங்கி எம்.எல்.ஏவானார்.

டாம் வடக்கன்:

சோனியா காந்தியிடம் நெருங்கிய தொடர்பில் இருந்தவராக அறியப்படும் அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் 20 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிய காங்கிரஸில் இருந்து விலகி 2019ல் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். பாலகோட் தாக்குதல் தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்த கருத்தில் உடன்பாடில்லை என்பதால் விலகியதாக கூறினார்.

சபிதா இந்திரா ரெட்டி:

ஒன்றுபட்ட ஆந்திராவின் உள்துறை அமைச்சராக இருந்தவர். 5 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுடன் இணைந்து அக்கட்சியிலிருந்து விலகி தெலங்கானா ராஷ்டிரிய சமிதியில் இணைந்தார்.

ரிது பகுகனா ஜோஷி:

உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் எம்.எல்.ஏ பொறுப்பில் இருந்து விலகி 2016ல் பாஜகவில் இணைந்தார். ராகுல் காந்தி உள்ளிட்ட மேல்மட்ட தலைவர்களின் செயல்பாட்டை அவர் அப்போது விமர்சித்திருந்தார்,

குஷ்பு சுந்தர்:

நடிகையாக இருந்து அரசியல் வாதியாக மாறிய குஷ்பு சமீபத்தில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். பிரதமர் மோடியின் தலைமையில் மட்டுமே நாடு முன்னேற்றமடையும் எனவும் காங்கிரஸ் தலைமை தொடர்பாகவும் கடும் விமர்சனங்களையும் முன்வைத்தார். முன்னதாக அவர் திமுகவில் இருந்தார்.

ஊர்மிளா மதோன்கர்:

பாலிவுட் நடிகையான ஊர்மிளா 2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 5 மாதங்கள் கழித்து மும்பை காங்கிரஸ் தலைவர்களை விமர்சித்த ஊர்மிளா சிவசேனாவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

பி.சி.சாக்கோ

கேரளாவின் காங்கிரஸ் மூத்த தலைவரும் தேசிய செய்தித்தொடர்பாளருமாக இருந்த பி.சி.சாக்கோ கேரளாவில் காங்கிரஸ் தலைவராக இருப்பது மிகவும் கடினம் என்ற குற்றச்சாட்டுடன் அக்கட்சியிலிருந்து விலகினார். மாநில சட்டமன்ற தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் கேரள காங்கிரஸில் ஜனநாயகமே இல்லை என கூறி அதிரவைத்தார்.

 
Published by:Arun
First published: