• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • உலக ஆசிரியர் தினம் 2021: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் இந்த ஆண்டிற்கான கருப்பொருள்!

உலக ஆசிரியர் தினம் 2021: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் இந்த ஆண்டிற்கான கருப்பொருள்!

உலக ஆசிரியர் தினம் 2021

உலக ஆசிரியர் தினம் 2021

கல்வி பணிகளில் ஆசிரியர்களின் பங்களிப்புகள், சாதனைகள் மற்றும் சமூகம் மீதான ஆசிரியர்களின் அக்கறை உள்ளிட்டவற்றை கவுரவிக்கும்.

  • Share this:
இந்தியாவில் ஆண்டுதோறும் செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்படும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5ம் தேதி (இன்று) "உலக ஆசிரியர்கள் தினம்" கொண்டாடப்படுகிறது. மற்றவர்களின் குழந்தைகள் முன்னேற உழைப்பவர்களாக இருக்கிறார்கள் ஆசிரியர்கள். ஊதியம் வாங்கி கொண்டு தான் வேலை பார்க்கிறோம் என்ற உணர்வையும் தாண்டி, பல தியாகங்களை செய்து அர்ப்பணிப்புடன் தங்கள் மாணவர்களின் உயர்வுக்கு காரணமாகவும் அமைகிறார்கள் பல ஆசிரியர்கள்.

எனவே ஆசிரியர்களின் பொறுப்புகள், உரிமைகள் மற்றும் மதிப்பை பெருமைப்படுத்தும் வகையில் உலக ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் முக்கிய காரணியாக இருக்கும் கல்வியை வழங்கி தங்கள் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றனர் உலகம் முழுவதும் உள்ள ஆசிரியர்கள். இந்தியா, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்ஸ் உட்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் சர்வதேச ஆசிரியர்கள் தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

வரலாறு :

கல்வி பணிகளில் ஆசிரியர்களின் பங்களிப்புகள், சாதனைகள் மற்றும் சமூகம் மீதான ஆசிரியர்களின் அக்கறை உள்ளிட்டவற்றை கவுரவிக்கும் வகையில் உலக ஆசிரியர் தினத்தை கொண்டாடுவதற்கான பரிந்துரையை அடுத்து கடந்த 1994ம் ஆண்டு உலக ஆசிரியர் தினம் அக்டோபர் 5ம் தேதி அனுசரிக்கப்படும் என்று ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) அறிவித்தது. அக்டோபர் 5ம் தேதி உலகம் முழுவதுமுள்ள ஆசிரியர்களை பெருமைப்படுத்த சர்வதேச தினமாக தேர்வு செய்யப்பட்டதற்கான காரணம் என்னவென்றால், 1966ம் ஆண்டில், ஒரு சிறப்பு அரசாங்கங்களுக்கிடையேயான மாநாட்டின் போது ஆசிரியர்களின் நிலை குறித்த யுனெஸ்கோ பரிந்துரையை அம்மாநாட்டில் ஏற்று கொள்ளப்பட்டதே.

World Teachers’ Day 2021

உலக ஆசிரியர் தினம் 2021


செப்டம்பர் 5ல் இந்தியாவில் ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்படுவதை போல சீனாவில் செப்டம்பர் 10, ஈராக்கில் மார்ச் 1, மலேசியாவில் மே 16, சிங்கப்பூரில் செப்டம்பர் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை, ஸ்பெயினில் நவம்பர் 27 ஆசிரியர்கள் தினம் தனிப்பட்ட முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இருப்பினும் பெரும்பாலான நாடுகள் 1994ல் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட அக்டோபர் 5ஐ உலக ஆசிரியர் தினமாக கொண்டாடுகின்றன.

முக்கியத்துவம்:

உலக ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்களின் சேவை மற்றும் கல்வி பணியில் அவர்களின் பங்களிப்பு அங்கீகரிக்கப்படுகிறது. போதுமான வகையில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல், பயிற்சி மற்றும் கல்வி உள்ளிட்டவற்றில் காணப்படும் ஆசிரியர் தொழில் தொடர்பான சவால்களை கருத்தில் கொள்ள இது ஒரு வாய்ப்பாகவும் இருக்கிறது. ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தீர்க்க மற்றும் அவர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகளை அங்கீகரிக்க இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் உலகெங்கிலும் உள்ள ஆசிரியர்களின் பணி நிலைமைகள் மற்றும் வேலை வாய்ப்புகளில் கவனம் செலுத்துகிறது.

இந்த ஆண்டிற்கான கருப்பொருள்:

2021 உலக ஆசிரியர் தினத்தின் கருப்பொருள், ‘கல்வி மீட்பின் இதயத்தில் ஆசிரியர்கள்’ (Teachers at the Heart of Education Recovery) என்பதாகும். இந்த கருப்பொருள் கோவிட் -19 தொற்று போன்ற இடர்பாடுகளின் போது கூட மாணவர்களுக்கு கற்பிக்க தொடர்ந்து உழைத்த மற்றும் உழைத்து வரும் ஆசிரியர்களை அங்கீகரிக்கிறது.தவிர இந்த ஆண்டு உலக ஆசிரியர் தினம் இந்த கருப்பொருளின் கீழ் COVID-19 தொற்றுநோயிலிருந்து மீட்பு செயல்முறைக்கு ஆசிரியர்கள் முழுமையாக பங்களிக்க வேண்டிய ஆதரவில் கவனம் செலுத்தும். இது தொடர்பாக குறிப்பிட்டுள்ள UNESCO அமைப்பு, 5 நாள் உலகளாவிய மற்றும் பிராந்திய தொடர் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும், இவை ஆசிரியர் தொழிலில் கோவிட் -19 ஏற்படுத்திய தாக்கத்தை வெளிப்படுத்தும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: