உலக மக்கள்தொகை நாள் 2022 : உலக மக்கள் தொகை இந்த ஆண்டு இறுதிக்குள் 8 பில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள்தொகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அதற்கான வளர்ச்சியுடன் சேர்த்து உருவாகும் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே தான் மக்கள் தொகை பெருக்கத்தால் உருவாகும் பிரச்சனைகளின் வேகத்தையும், அதற்கான முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கும் விதமாக ஜூலை 11ஆம் தேதி உலக மக்கள் தொகை தினம் அனுசரிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, மக்கள் தொகை 2050 இல் 9.7 பில்லியனை எட்டும் மற்றும் 2100 இல் 11 பில்லியனாக உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மக்கள்தொகை வளர்ச்சியானது மக்களின் நிலையில் சீரான வளர்ச்சியைக் குறிக்கவில்லை. காலநிலை மாற்றம், பாகுபாடு மற்றும் வன்முறை போன்ற பிரச்சினைகளை மக்கள் தொடர்ந்து எதிர்கொள்ள வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலக மக்கள்தொகை தினம் கடந்த ஆண்டுகளில் பேரழிவு தரும் COVID-19 தொற்றுநோயால் உலகம் பாதிக்கப்பட்டதிலிருந்து அதிக முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. இதன் மூலம் மக்கள் தொகை பெருக்கம் என்பது தொற்று நோய் நேரத்தில் எவ்வளவு ஆபத்தானது மற்றும் தொற்று நோயை எதிர்த்து போராட உலகம் முழுவதும் என்னென்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்தியுள்ளது.
இத்தகைய பேரழிவுகரமான சுகாதார அவசரநிலைகளுக்கு மத்தியில், சமூகத்தின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய உறுப்பினர்களான பெண்கள், பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர். ஏனெனில் கொரோனா காலத்தில் வீட்டிலிருந்து பணியாற்றிய அல்லது இல்லத்தரசிகளாக இருந்த ஏராளமான பெண்கள் பல்வேறு விதமான அழுத்தத்திற்கு ஆளாகினர்.
வீட்டு வேலைகள், சமையல், அலுவலக வேலை, குழந்தைகள் பராமரிப்பு, குழந்தைகளுக்கான ஆன்லைன் கல்வி, வீட்டில் உள்ள முதியவர்கள் பராமரிப்பு போன்ற பல்வேறு விஷயங்களை பெண்கள் சமாளிக்க வேண்டி இருந்தது. இதனால் பெண்களின் மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.
எனவே தான் இந்த ஆண்டு அனுசரிக்கப்படும் உலக மக்கள் தொகை தினமானது, கொரோனா பெருந்தொற்று காலத்தில் மோசமடைந்த பெண்களின் ஆரோக்கியம் மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வாய்ப்பளிக்கிறது.
மாதவிடாய் வலியை சாதாரணமாக நினைத்து அலசியப்படுத்தாதீர்கள் : இந்த தீவிர பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம்..!
கொரோனா கால இறப்பு விகிதம்:
கொரோனா காலக்கட்டத்தில் பெண்களை விட அதிக அளவிலான ஆண்களே உயிரிழந்தனர். இருப்பினும் பெரும்பாலான குடும்பங்களில் ஆண்களின் வருமானம் பிரதானமாக இருந்ததால் அவர்களின் திடீர் மரணம், பெரும்பாலான பெண்களை தொற்று நோய் காலத்தில் பொருளாதார ரீதியாகவும், ஆரோக்கிய ரீதியாகவும் பல்வேறு சமூக சிக்கல்களை எதிர்கொள்ள வைத்தது.
கொரோனா லாக்டவுன் காலத்தில் மக்கள் வீடுகளுக்கு முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இது பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை வழக்குகள் அதிகரிக்க காரணமானதை நாம் கண்கூடாக பார்த்தோம். கூடுதலாக, தொற்றுநோய்களுக்கு மத்தியில் வீட்டில் உள்ள முதியவர்கள், குழந்தைகள் அல்லது நோயாளிகளைப் பராமரிப்பதில் பெண்களே அதிக பங்களிப்பை வழங்க வேண்டியும் இருந்தது.
இந்த உலக மக்கள்தொகை தினம் பெண்களுக்கு சரியான சுகாதார வசதிகளை உறுதி செய்வதற்கும், பாலின சமத்துவமின்மையைக் குறைப்பதற்கும் அழைப்பு விடுக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.