உலக யானைகள் நாள்; ’தாமதம் என்றாலும் பரவாயில்லை’ யானைகளை பாதுகாக்க 5 வழிகள்!

யானைகள்

யானைகளை பாதுகாக்கும் பொருட்டு ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி உலக யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

  • Share this:
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பூமியில் இருக்கும் யானை இனங்களில் இப்போது ஆப்பிரிக்க வன யானைகள், ஆப்பிரிக்க புதர்வெளி யானைகள் மற்றும் ஆசிய யானைகள் என 3 இனங்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. துர்திஷ்டவஷமாக அவையும் ஆபத்தின் விளிம்பிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றன. வேட்டைக்காரர்களுக்கும், தந்த கொள்ளையர்களுக்கும் முதல் இலக்காக இருக்கும் யானைகள், கூடுதலாக வன அழிப்பு ஆகிய வாழ்விடப் பிரச்சனைகளையும் எதிர்கொண்டு வருகின்றன.

இந்தப் பிரச்சனைகளில் இருந்து யானைகளை பாதுகாக்கும் பொருட்டு ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி உலக யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் யானைகளின் பாதுகாப்பு அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அந்தவகையில் யானைகளை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய 5 வழிமுறைகள் என்ன என்பதை பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தந்தத்திற்கு ‘நோ’ சொல்லுங்கள்

யானைகள் கொல்லப்படுவதற்கு முக்கிய காரணம் தந்தம் (ivory). விலையுயர்ந்த ஆபரணங்கள், சிற்பங்கள் மற்றும் அழகிய வேலைபாடுகள் கொண்ட மேஜை ஆகியவை தந்தம் கொண்டு உருவாக்கப்படுவதால், உலகளவில் பல்வேறு நாடுகளில் தந்தத்திற்கு மிகப்பெரிய மார்க்கெட் உள்ளது. இதனை குறிவைத்து வேட்டைக்காரர்கள், கண்மூடித்தனமாக யானைகளைக் வேட்டையாடுகின்றனர். இதற்கு முதலில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பல்வேறு நாடுகளில் தந்தம் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்றாலும், இன்னும் சில நாடுகளில் சட்டப்படி அனுமதி உண்டு. தந்தம் சார்ந்த பொருட்களை நிராகரிக்கும்போது யானைகள் வேட்டையாடுவது குறையும்.

யானைச் சுற்றுலா

வனப்பகுதிகளில் யானைகள் மற்றும் அதன் வாழ்விடங்களை கண்டுகளிக்க சுற்றுலா வசதியை ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு, வனப் பாதுகாவலர்களை நியமித்து யானைகள் வேட்டையை தடுக்க முயற்சி செய்ய வேண்டும். அதேநேரத்தில், காட்டு யானைக் கூட்டத்தில் இருந்து ஒரு யானையை சிறைபிடித்து, அதன் வாழ்வியலுக்கு மாறாக பழக்க வழக்கங்களை கற்றுக்கொடுத்து, சுற்றுலாவுக்கு பயன்படுத்தும் முறையை எதிர்க்க வேண்டும்.

ட்ராபி ஹண்டிங் தடை

பொழுதுபோக்கிற்காக விலங்குகள் கொல்லப்படுவதற்கு கடுமையான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். வன விலங்குகளை வேட்டையாடுவது நம் நாட்டில் சட்டவிரோதம். ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ட்ராபி ஹண்டிங் (Trophy hunting) என்ற பெயரில், அரசு அனுமதியுடன் வன விலங்குகள் பொழுதுபோக்கிற்காக வேட்டையாட அனுமதிக்கப்படுகின்றன. இந்த விளையாட்டில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சிங்கம், புலி மற்றும் யானைகள் கொல்லப்படுகின்றன. இதனை தடை செய்ய கடுமையான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

Also read... இன்று உலக சிங்கங்கள் தினம்: அழிவின் விளிம்பில் இருக்கும் வனராஜாக்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நாள்!

WWF -க்கு நன்கொடை

உலகளவில் வன விலங்குகளை பாதுகாக்க WWF பெரும் முயற்சியை எடுத்து வருகிறது. குறிப்பாக, ஆபத்தின் விளிம்பில் இருக்கும் யானைகளை பாதுகாக்க வேர்ல்டு வைட்லைஃப் பண்ட் அமைப்பு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. நேரடியாக களத்தில் இறங்கி உதவி செய்யாவிட்டாலும், வனவிலங்குகளை பாதுகாக்க ஏற்கனவே களப்பணியாற்றி வரும் இத்தகைய தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பணிக்கு, தங்களால் இயன்ற நிதியுதவிகளை அளிக்கலாம்.

விழிப்புணர்வு

வன விலங்குகள் குறித்து அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. யானை, புலி, சிங்கம் ஆகிய ஒவ்வொன்றும் பல்லுயிர் பெருக்கத்திற்கு செய்யும் பங்களிப்பு, அந்த விலங்குகளில் இழப்பால் ஏற்பட்டுள்ள பருவ நிலை மாற்றங்களின் விளைவுகள் குறித்து பள்ளி கல்லூரிகளிலேயே கற்பிக்கப்பட வேண்டும்.
Published by:Vinothini Aandisamy
First published: