முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / International Women’s Day 2021: பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பொருளாதார சேமிப்புகள் , நிதி ஆலோசனைகள்

International Women’s Day 2021: பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பொருளாதார சேமிப்புகள் , நிதி ஆலோசனைகள்

மாதிரி படம்

மாதிரி படம்

பெண்கள் உங்களுக்கு தேவைக்கு ஏற்ப சேமிப்பை பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள். அது உங்களுக்கும், குடும்பத்துக்கும் அவசர காலங்களில் உதவியாக இருக்கும்.

  • Last Updated :

பெண்கள் பெரும்பாலானோர் வேலைக்கு செல்ல தொடங்கியிருந்தாலும், நிதி மேலாண்மை அல்லது நிதி சுதந்திரம் குறித்த தெளிவு போதுமான அளவுக்கு இருப்பதாக தெரியவில்லை. நிதி சுதந்திரம் என்பது நீங்கள் முற்றிலும் உங்கள் கடன்களில் இருந்து மீண்டு இருப்பதாக அர்த்தமில்லை. உங்கள் வருமானத்துக்கு ஏற்ப சேமிப்பு மற்றும் குடும்ப தேவைகளை நீங்களாக பூர்த்தி செய்துகொள்வதாகும்.

இத்தகைய சுதந்திரத்தை பெண்கள் குறிப்பாக திருமணமான பிறகு முற்றிலும் இழக்க நேரிடும். அதாவது, வேலையை விட்டுவிடுவது அல்லது தன்னுடைய சேமிப்புகள் மற்றும் சொத்துகளை கணவரிடம் ஒப்படைப்பது அல்லது நிதி தேவைகள் முழுவதையும் கணவர் பார்த்துக்கொள்வார் என இருந்துவிடுவது. இதனால், தன்னுடைய நிதி தேவைக்கு முழுவதுமாக கணவரை அல்லது பெற்றோரை சார்ந்திருக்க வேண்டிய இக்கட்டான சூழலுக்கு தள்ளப்படுவீர்கள். அப்போது குடும்பத்துக்குள் கணவன் - மனைவி இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு விவாகரத்தில் முடியவும் வாய்ப்புள்ளது.

இதக்கைய கடினமான சூழல்களை முன்கூட்டியே கணித்து பெண்கள் நிதி சுதந்திரத்தில் தெளிவாக இருந்தால், தங்களுக்கு ஏற்படும் நிதி சார்ந்த பிரச்சனைகளில் கணவரை அல்லது பெற்றோரை எதிர்பார்க்க வேண்டிய நிலை இருக்காது. மகளிர் தினமான இன்று, நிதி சுதந்திரம் மற்றும் நிதி மேலாண்மை குறித்து நீங்கள் தெரிந்து கொள்வது சரியாக இருக்கும்.

வங்கி கணக்குளை இணைப்பு

நீங்கள் வைத்திருக்கும் வங்கிக் கணக்குகளை திருமணமான பிறகு கணவருடைய வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டாம். கணவன் - மனைவிக்கு இடையே பொதுவான வங்கிக் கணக்கு (Joint Account) இருந்தாலும் உங்களுக்கு என்று தனியாக ஒரு வங்கிக் கணக்கை வைத்துக்கொள்ளுங்கள். ஒருவேளை இருவருக்குள்ளும் பிரச்சனை ஏற்பட்டால், பொதுவான வங்கிக் கணக்கில் இருந்து அனைத்து நிதியையும் கணவர் எடுத்துக்கொள்ள வாய்ப்புகள் உள்ளது. திருமணத்துக்கு முன் உங்களுக்கு இருக்கும் சொத்துகள் அனைத்தும் தனியாக இருப்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள். சிக்கலான நேரங்களில் உங்களின் சொந்தக் கால்களில் நிற்பதற்கு அந்த சொத்துகள் உதவியாக இருக்கும்.

வேலையை விடக்கூடாது

திருமணத்துக்கு பிறகு பெண்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில் ஒன்று, தாங்கள் பார்த்துகொண்டிருக்கும் வேலையை விட நேரிடும். வேறொரு நகரத்துக்கு செல்ல வேண்டியிருக்கும் சூழலை தவிர்த்து மற்ற நேரங்களில் உங்கள் வேலையை ஒருபோதும் விட்டுவிட வேண்டாம். ஒருவேளை வேலையை விடவேண்டிய சூழல் இருந்தாலும், புதிய வேலை அல்லது சொந்த தொழில் அமைத்துக் கொள்ள வேண்டும்.

பெற்றோர்கள் பார்த்து நிச்சயத்து அமைத்துகொடுக்கும் திருமணம் உங்களுக்கு ஒத்துவரவில்லை என்றால், உங்களுக்கு ஒரு தொழில் கைவசம் இருக்கும்போது அதற்கேற்ப உங்களால் சரியாக முடிவெடுக்க முடியும். உங்களின் அனைத்து நிதி தேவைகளையும் உங்களால் பூர்த்தி செய்துகொள்ள முடியும். மேலும், ஏற்கனவே பணிபுரிந்த நிறுவனங்களில் இருந்த சக ஊழியர்களுடன் தொடர்பில் இருங்கள். கடினமான காலங்களில் அவர்களின் உதவி உங்களுக்கு நிச்சயம் கைகொடுக்கும்.

சொத்தில் பங்கு

கணவன் - மனைவி என இருவரும் உழைத்தாலும், புதிதாக சொத்து வாங்கும்போது பெரும்பாலும் அவை கணவரின் பெயரில் பதிவு செய்வது வழக்கமாக உள்ளது. அத்தகைய சூழல்களில் இருவருக்கும் பங்கு இருப்பதுபோல் பத்திரம் பதிவு செய்துகொள்ள வேண்டும். ஒருவேளை லோன் செலுத்த வேண்டிய நிலை இருந்தாலும், அதிலும் CO - OWNER-ஆக உங்கள் பெயரையும் இணைத்துக்கொள்ளுங்கள். இருவருக்கும் இடையே ஏற்படும் பிரச்சனையின்போது, சட்டத்தின்படி சொத்தில் சரிபாதி உங்களுக்கு கிடைக்கும்.

International Women’s Day 2021: சர்வதேச மகளிர் தினம் ஏன் மார்ச் 8-இல் கொண்டாடப்படுகிறது? இதற்கு யார் காரணம் தெரியுமா.?

நிதி மேலாண்மை

உங்கள் கணவன் கொடுக்கும் அனைத்து டாக்குமென்டுகளையும் நன்கு படித்து பார்க்காமல் கையெழுத்து போடக்கூடாது. தொழில் அல்லது முதலீடுகளை செய்ய விரும்பும் கணவர்கள் வரிச்சலுகை அல்லது கூடுதல் வருவாய்க்காக மனைவியின் பெயர் மற்றும் டாக்குமென்ட்டுகளை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அப்போது, டாக்குமென்டுகள் சரியாக இல்லையென்றால், நீங்கள் கையெழுத்திட மறுத்துவிடுங்கள். அந்த இடத்தில் உணர்ச்சிகளுக்கு இடம்கொடுத்தால், சிக்கலான நேரங்களில் பிரச்சனைகள் முழுவதும் உங்கள் தலையில் விடிந்துவிடும்.

மேலும், நிதி மேலாண்மை, சொத்துகள் வாங்குவது, முதலீடு செய்வது என கணவர் செய்யும் அனைத்து விஷயங்களிலும் உங்களின் பங்கு இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். உங்களுக்கான நிதி ஆதாரம் இல்லை என்கிறபோது, தொடக்கத்தில் இருந்து குறைந்தபட்சம் சேமிக்கும் பழக்கத்தையாவது கடைபிடித்து வந்திருக்க வேண்டும். வேலைக்கு செல்லும் கணவருக்கு லைப் இன்சூரன்ஸ் இருக்கிறதா என்பதை தெரிந்துகொண்டு, அதற்கு நாமினிக்களாக நீங்களும் உங்கள் குழந்தைகளும் இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். கணவன் மனைவி பிரிந்திருந்தாலும், மருத்துவத் தேவைக்களுக்கு அந்த இன்சூரன்ஸ் பாலிசி உங்களுக்கு உதவியாக இருக்கும்.

திருமணத்துக்கு முன்...

திருமணத்துக்கு முன், உங்கள் வருங்கால கணவரின் அனைத்து நிதி ஆதாரங்கள் மற்றும் கடன்கள் குறித்து தெளிவான தகவல்களை கேட்டுப்பெற்றுக் கொள்ளுங்கள். தேவைக்கு அதிகமான கடன் இருந்தால், கல்யாணத்துக்குப் பிறகு நீங்கள் சம்பாதிக்கும் நிதியும் அதற்காக செலவிட வேண்டியிருக்கும். அப்போது இருவருக்கும் இடையில் பிரச்சனைகள் எழ வாய்ப்புகள் உள்ளது என்பதால், அது குறித்து திருமணத்துக்கு முன்பே தெளிவாக விவாதித்துக் கொள்வது நல்லது.

கணவர் அவரின் தாய், தந்தை மற்றும் உடன்பிறந்தவர்களை பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தால், அதுவும் உங்கள் சம்பாதியத்தை பாதிக்கும். பெண்களாகிய நீங்கள், திருமணமாகி செல்வதற்கு முன்பு உணர்ச்சிகளுக்கு இடம்கொடுக்காமல், நிதி குறித்து விரிவாக அலசி ஆராய்ந்து தெளிவான முடிவை எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், வரும் காலங்களில் உங்களின் எதிர்பார்ப்புகளை உங்கள் கணவரால் பூர்த்தி செய்து கொடுக்க முடியாமல் கூட போகும். அதனை முன்கூட்டியே பேசி முடிவெடுத்துக்கொள்ளும்போது, புரிதலின் அடிப்படையில் இருவருக்கும் இடையில் பிரச்சனைகள் உருவாக வாய்ப்புகள் இல்லை.

top videos

    கடைசியாக, நிதி மேலாண்மையில் மிக மிக முக்கியமானது என்றால், சேமிப்பை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். பெண்கள் உங்களுக்கு தேவைக்கு ஏற்ப சேமிப்பை பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள். அது உங்களுக்கும், குடும்பத்துக்கும் அவசர காலங்களில் உதவியாக இருக்கும்.

    First published:

    Tags: International Women's Day, Personal Finance, Women's Day