நீண்ட காலமாக அடிமைத்தனத்தால் கட்டுண்டு கிடந்த பெண்கள் இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து மெது மெதுவாக தங்களது கட்டுகளை உடைத்துக் கொண்டு, ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றனர். ஆண்களுக்கு சமமான உரிமை தங்களுக்கும் வேண்டும் என தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து பல்வேறு உரிமைகளையும் பெற்றுள்ளனர். இவை அனைத்தையும் போற்றும் வகையில் வருடா வருடம் மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
பெண்களுக்கான சமூக முன்னேற்றம், பொருளாதாரம், கலை, பண்பாடு, அரசியல் ஆகியவற்றில் அவர்கள் செய்துள்ள சாதனைகளை பறைசாற்றும் விதமாக இந்த தினத்தை கொண்டாடுகிறோம். இதற்கிடையே மருத்துவம், தொழில், சமூக நீதி, இலக்கியம் என ஆண்கள் மட்டுமே கொடி கட்டி பறந்த பல்வேறு துறைகளில் நமது தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்கள் பலரும் ஆண்களை விட மிகப் பெரிய சாதனைகளை செய்துள்ளனர். இப்படிப்பட்ட சாதனைகளைப் புரிந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து முக்கிய பெண்மணிகளை பற்றி இப்போது பார்ப்போம்.
தலைமை: இந்திரா நூயி
இந்திரா நோயி பெப்சிகோ நிறுவனத்தின் தலைவராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் 2019 வரை செயல்பட்டு வந்தார். கிட்டத்தட்ட 24 வருடங்களாக தன்னுடைய ஓய்வு காலம் வரை அவர் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்திய அமெரிக்க தம்பதிக்கு பிறந்த இந்திரா நூயி சென்னையில் தான் பிறந்து வளர்ந்தார். தன்னுடைய எம்பிஏ பட்டத்தை யேல் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்து, பிறகு ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திற்காக பணியாற்றியுள்ளார். அதன் பிறகு பியர்ட்செல் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கும், மோட்டோரோலா மற்றும் ஏசியா பிரவுன் பொவேரி என்ற நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளார்.
1994 ஆம் ஆண்டு பெப்சிகோ நிறுவனத்தில் சேர்ந்த அவர் அதன் பிறகு தன்னுடைய ஓய்வு காலம் வரை அந்த நிறுவனத்திலேயே பணியாற்றினார். 2017 – ஆம் ஆண்டு போர்ப்ஸ் பத்திரிகையின் உலக அளவில் அதிக சக்தி வாய்ந்த பட்டியலை வரிசையில் இந்திரா நூயி இரண்டாவது இடம் பிடித்துள்ளார். இதைத் தவிர தற்போது அமேசான் மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிங் உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.
மருத்துவம்: முத்துலட்சுமி ரெட்டி
இந்தியாவின் ஆரம்பக் காலங்களில் மருத்துவரான ஒரு சில பெண்மணிகளில் முத்துலட்சுமி ரெட்டியும் ஒருவர். தொழில் ரீதியாக மருத்துவராக இருந்தாலும் பல சமூக நல செயல்பாடுகளிலும், பெண்கள் முன்னேற்றத்திலும் ஆர்வமாக ஈடுபட்டு வந்தார். இதைத் தவிர அவர் ஒரு எழுத்தாளரும் கூட. ஜூலை 30, 1986 ஆம் ஆண்டு பிறந்த முத்துலட்சுமி ரெட்டி தன்னுடைய ஆணாதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தின் மூலம் பலரால் அறியப்பட்டார்.
ஆண்கள் கல்லூரியில் படித்த முதல் பெண் மாணவியும் அவரே. அரசு மகப்பேறு மற்றும் கண் மருத்துவமனையில் முதல் பெண் அறுவை சிகிச்சை நிபுணராகவும் அவர் தான் இருந்துள்ளார். அதைத் தவிர புற்று நோயாளிகளுக்காக நிதி திரட்டி லாப நோக்கற்ற புற்றுநோய் சிகிச்சை நிறுவனம் ஒன்றையும் சென்னை அடையாறில் துவங்கியுள்ளார். தற்போது ஆண்டுதோறும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புற்று நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சமூக நீதி: மூவலூர் ராமாமிர்தம்
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. இந்தியாவில் தேவதாசி முறையை ஒழிக்க போராடிய பல்வேறு பெண்களில் மூவலூர் ராமாமிர்தம் முக்கியமான ஒரு பெண்மணி ஆவார். சமூக நல ஆர்வலராகவும், எழுத்தாளராகவும் மற்றும் திராவிட இயக்கத்தின் அரசியலிலும் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தினால் கவரப்பட்ட மூவலூர் ராமாமிர்தம் தாசிகளின் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர் என்று நாவலை இயற்றினார். இவரின் தொடர்ச்சியான போராட்டங்கள் மற்றும் தன்னுடைய எழுத்துக்களின் மூலமாக கடைசியாக போராடி வந்த தேவதாசி முறையை ஒழிக உதவும் மெட்ராஸ் தேவதாசி சட்டம் இயற்றப்பட்டது.
பத்திரிக்கை: வி எம் கோதைநாயகி அம்மாள்
வை மு கோ என அழைக்கப்படும் வி எம் கோதை நாயகி அம்மாள் தமிழ் பத்திரிகை துறையின் ஆசிரியர் குழுவை அலங்கரித்த முதல் பெண்மணி ஆவார். ஜெகன் மோகினி என்ற பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவில் அவர் இடம் பெற்றிருந்தார். எழுத்தாளரான அவர் 115 புத்தகங்கள் எழுதியுள்ளார்.
1925 ஆம் ஆண்டு காந்திஜியை ஆதரித்ததற்காக அவர் சிறைவாசம் அனுபவித்தார். இப்படிப்பட்ட ஒரு போராட்டத்தின் போது காவல்துறையினர் இவர் மீது சாக்கடையை வாரி இறைத்தார்கள். ஆனாலும் தன்னுடைய எதிர்ப்பை பலமாக காட்டிய இவர் பிறகு வேலூர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
இப்படிப்பட்ட சோதனைகளுக்குப் பிறகும் தன்னுடைய எழுச்சிமிக்க எழுத்தை அவர் நிறுத்தவே இல்லை. சிறையிலிருந்து எழுதி எழுதி, அந்த தாள்களை தன்னுடைய கணவருக்கு அளித்து புத்தகத்தை வெளியிடச் செய்வார். பிரபலமான ஜெகன்மோகினி பத்திரிகையானது மலேசியா, ரங்கூன் மற்றும் தென் ஆப்பிரிக்காவிலும் அதிக அளவில் வாசிக்கப்படும் பத்திரிக்கையாக இருந்தது. இதைத் தவிர நூற்றுக்கணக்கான குடும்பத் தலைவிகளையும் அந்த பத்திரிகையில் எழுதுவதற்கு அவர் உதவி செய்துள்ளார்.
தகவல் தொழில்நுட்பம்: ரோஷினி நாடார்
ஹெச் சி எல் டெக்னாலஜிஸ் தலைவரான ரோஷினி நாடார் மல்கோத்ரா இந்தியாவில் முன்னிலையில் இருக்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை வழிநடத்தும் முதன்மையான பெண்மணிகளுள் ஒருவராவார். தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் ஹெச் சி எல் டெக்னாலஜிஸ் இன் நிறுவனருமான சிவ நாடாரின் மகள்தான் ரோஷினி நாடார் மல்கோத்ரா. போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலகின் சக்தி வாய்ந்த நூறு பெண்மணிகளுக்கான பட்டியலில் இவருக்கு 55வது இடம் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: International Women's Day, Women achievers, Women's Day