International Women’s Day 2021: சோசியல் மீடியாக்களில் பெண்கள் பாதுகாப்புடன் இருக்க சில டிப்ஸ்கள்...

International Women’s Day 2021: சோசியல் மீடியாக்களில் பெண்கள் பாதுகாப்புடன் இருக்க சில டிப்ஸ்கள்...

மாதிரி படம்

இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்தும் 71 கோடி மக்கள்தொகையில் 25 கோடி பேர் பெண்கள். அதில் 80 சதவிகித மக்கள், குறிப்பாக பெண்கள் சைபர் குற்றங்களுக்கு ஆளாகின்றனர்.

  • Share this:
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் தேதி "சர்வதேச மகளிர் தினம்" கொண்டாடப்படுகிறது. மகளிர் தினம் கொண்டாட்டத்தில் தொடர்கிற கதை என்றாலும் அது வித்திடப்பட்டது போராட்டத்தில்தான். சமூக வாழ்வில் ஆண்களை மையப்படுத்தி பெண்களை அடிமைப்படுத்தும் சமூக அநீதியை எதிர்த்து போராடிய பெண்கள், தாங்கள் ஆணுக்கு இளைப்பில்லை என உலகறிய செய்துள்ளனர்.

பாலின சமத்துவம் எனும் சமூக நீதியை வலியுறுத்தும் நாளாகவும் மகளிர் தினம் கருதப்படுகிறது. இன்று பெண்கள் இல்லாத துறை என்று எதுவுமில்லை. அனைத்து துறைகளிலும் பெண்கள் கோலோச்சி வருகின்றனர். நம் சமூகத்தில் பெண்களுக்கு சுதந்திரம், பாதுகாப்பு, மரியாதை என பலவும் இருந்தாலும் ஒன்றை பற்றி மட்டும் ஊடகம் அதிகம் விவாதிக்கும். அதுதான் பெண்களின் இணைய பாதுகாப்பு. இந்த பதிவில் இதை பற்றித்தான் நாம் காண இருக்கிறோம்.

பெண்கள் சோஷியல் மீடியாக்களில் நேரத்தை செலவிடுவது தற்போது அதிகரித்து கொண்டே வருகிறது. சோஷியல் மீடியாக்களில் 95 சதவிகிதம் போலியானவை மற்றும் ஏமாற்றும் நோக்கம் கொண்டவை என்பதை பலரும் அறிந்திருப்பதில்லை. பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற பிளாட்பார்ம்களில் பெண்கள் நீண்ட நேரம் செலவழிப்பதால் அதில் பல்வேறு ஆபத்துகள் ஏற்படுகிறது. இதனால் இணையத்தில் சில கயவர்களிடம் பெண்கள் சிக்கிக் கொள்கிறார்கள். இதன் மூலம் அவர்களின் பேங்க் பற்றிய விவரங்கள், பாஸ்வேர்டு, பணம் என பலவும் இணையம் மூலமாகவே பறிக்கப்படுகிறது.

சமூக அழுத்தம், குடும்ப கவுரவம் போன்ற பல விஷயங்களை மனதில் கொண்டு பெண்கள் இதை பற்றி புகார் அளிப்பதில்லை. ஆன்லைனில் ஒரு நபரின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை தடுக்கும் உலகளாவிய நிகழ்வு இது. இதனை சைபர் தாக்குதல் என்று குறிப்பிடுவர். சைபர் தாக்குதல் பல்வேறு வகைகளில் இருந்தாலும் பெரும்பாலானவை வங்கி விவரங்கள், பணம், போட்டோ, வீடியோ போன்றவை மிகவும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் சில கயவர்கள் பெண்களிடம் தேவையானதை எதிர்பார்க்கின்றனர் அதை சரி செய்ய முடியாததால் பல பெண்கள் தங்கள் உயிருக்கே ஆபத்தை தேடிக் கொள்கின்றனர்.இன்று, சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் நாம், நம் சகோதரிகளுக்கு பரிசுகளையும் வாழ்த்துகளையும் கூறுவதை விட "சைபர் பாதுகாப்பு" பற்றிய புரிதலை வழங்குவதே ஒரு சரியான பரிசாக இருக்கும். இப்போது சைபர் பாதுகாப்பு பற்றிய முக்கிய கூறுகளை காண்போம்.

சைபர் குற்றங்கள்:

* ஸ்பாம் (Spam) எனப்படும் தேவையில்லாத அச்சுறுத்தும் மின்னஞ்சல்கள் அனுப்புதல்.
இணையத்தில் பணபரிமாற்றங்கள் நடக்கும்பொழுது, கடவுச்சொல் (Password - பாஸ்வேர்டு) போன்ற கணக்கு விவரங்களைத் திருடுவது.

* கணினி மற்றும் தகவல் தொழில்நுட்ப சாதனங்களிலிருந்து தகவல்களை திருடுவது.

* வேறு ஒருவருடைய தகவல்களைப் பயன்படுத்தி இணையத்தில் உலவுவது.

* பிறரது வலைத்தளங்களைத் திருடி, தடைசெய்யப்பட்ட பொருள்களை விற்பனை செய்வதற்குப் பயன்படுத்துதல். போன்றவை முக்கிய சைபர் குற்றங்கள் ஆகும்.

* மொபைல் கேம்களிலும் தீங்கு மறைந்துள்ளது. சில கேம்களை கொஞ்ச நாள் விளையாடிய பின் உங்கள் பேங்க் அக்கவுண்டில் இருக்கும் பணம் உங்களுக்கு தெரியாமலே காலியாகிவிடும். பின்னர் உங்களால் ஒன்றும் செய்யமுடியாது.போட்டோ மார்பிங் மற்றும் கசிவுகள்:

இண்டர்நெட்டில் பெண்கள் தங்களது புகைப்படங்களை அப்லோட் செய்வதன் மூலம் சில இணைய விரோதிகள் அந்த புகைப்படங்களை எடுத்து பெண்களின் முகத்தை கிராப் செய்து அதை வேறு ஒரு பெண்ணின் உடல் கட்டமைப்புடன் பொருத்தி அதை பல சட்டவிரோத வலைதளங்களிலும் ஆபாச வலைதளங்களிலும் பணத்திற்க்காகவும் விரோதம் காரணமாகவும் பயன்படுத்த வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு தெரிந்தவரோ, தெரியாதவரோ? யார்வேண்டுமென்றாலும் சமூக வலைதளங்களில் இருக்கும் போட்டோவை எடுத்து கத்தரித்து அதை மார்பிங் செய்வது மிகவும் சகஜமான ஒன்றாக இப்போது மாறி வருகிறது.

எனவே பெண்கள் சமூக வலைத்தளங்களில் உங்கள் புகைப்படங்களை பகிர்வதை முதலில் நிறுத்த வேண்டும். மார்பிங் பற்றி பல்வேறு ஆய்வுகள் விசாரணைகள் நடந்து கொண்டு வருகின்றது. ஒருமுறை இணையத்தில் உங்கள் போட்டோ வந்துவிட்டால் அதை நீக்குவது மிகவும் கடினம். பல பெண்கள் கவுரவம் காரணமாக தற்கொலை என்ற தவறான முடிவை எடுத்து வருகின்றனர். போட்டோவை சமூக ஊடங்களில் அப்லோட் செய்யாமல் இருந்தால் பல சிக்கல்கள் காணாமல் போய்விடும்.

அக்கவுண்ட் ஹேக்கிங்:

நாம் டிஜிட்டல் இந்தியாவை நோக்கி போகும் இந்த வேளையில், இணைய உலகில் உள்ள அனைவரும் அஞ்சும் ஒரு விஷயம் 'ஹேக்கிங்'. இ-மெயில் அக்கவுண்ட் தொடங்கி நம் மொபைல் போன்களில் பயன்படுத்தும் வாட்ஸ்அப் வரை நம்முடைய தனிப்பட்ட தகவல்களை தன்னுள் சேமித்து வைத்துள்ளது, இந்த தகவல்கள் ஹேக்கர்ஸ் எனப்படும் கணிப்பறியர், தங்கள் டெக்னாலஜி மூளையை கொண்டு திருடும் செயலே ஹேக்கிங். இப்படி திருடப்படும் தகவல்களை கொண்டு நமது வங்கி கணக்கில் இருந்து நம் அந்தரங்க விஷயங்கள் வரை அனைத்தையும் அவர்களால் பார்க்க முடியும். ஆன்லைனில் நடைபெறும் மோசடி என்பது வாடிக்கையான செயலாகி விட்டது. சமீபத்தில் ராகுல் காந்தி, விஜய் மல்லையா ஆகியோரின் ஆன்லைன் அக்கவுண்ட்கள் ஹேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த ஹேக்கிங் எனப்படும் இணைய அரக்கனின் பிடியில் இருந்து சாமனியன் முதல் பிரபலங்கள் வரை யாரும் தப்புவதில்லை. ஆனால் சாமர்த்தியமாக செயல்பட்டால் ஹேக்கிங்கில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.பாதுகாப்பு நடவடிக்கைகள்:

* இணையத்தில் முழு விவரங்களையும் கொடுக்க வேண்டாம். முக்கியமாக சமூக வலைதளங்களில் முக்கிய விவரங்களை பதியக் கூடாது.

* புகைப்படங்கள் பகிர்வதைத் தவிர்க்கலாம். தற்போது உள்ள தொழில்நுட்பங்கள் மூலம், அந்தப் புகைப்படங்களை எளிதாக மாற்ற முடியும்.

* Password--ஐ யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

* பணபரிமாற்றங்கள் செய்யும் பொழுது அந்த பக்கத்தின் முகவரியை பாருங்கள். http::// என இருந்தால் விவரங்களைக் கொடுக்கக் கூடாது. ஒரு s-உடன் https:// என்று இருந்தால் மட்டுமே மேற்கொண்டு தொடருங்கள். இங்கு S - Secure (செக்யூர்).

* பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ஜிமெயில் கணக்குகள் போன்ற சமூக ஊடக கணக்குகளில் இயக்கக்கூடிய இரண்டு காரணி அங்கீகாரங்களை எப்போதும் பயன்படுத்துங்கள்.

* உங்கள் மொபைல் போனை விற்கும்போதோ ரிப்பேர் செய்ய கொடுக்கும்போதோ, தரவு எதிர்ப்பு மீட்பு (Anti-data recovery) தீர்வைப் பயன்படுத்தவும்; இல்லையெனில், போனில் இருக்கும் உங்கள் போட்டோ வீடியோ மற்ற பல காண்டாக்ட் நம்பர்கள் என பலவும் சிக்கலுக்குளாகும்.* உங்கள் தனிப்பட்ட தகவல்களை யாரும் அறிந்து கொள்ளாதபடி நீங்கள் எப்போதும் எங்கள் மொபைல் போனை லாக் செய்து வைக்க வேண்டும். சிறந்த ஆப் லாக்கரை பயன்படுத்தலாம்.

* உங்கள் கடவுச்சொற்களை ஸ்ட்ராங்காக வைக்கவும். யாராலும் யூகிக்க முடியாதபடி அவற்றை மாற்ற வேண்டும். மேலும் மாதம் ஒருமுறை அவற்றை தவறாமல் மாற்றவும்.

* உங்களை சைபர் புல்லி அல்லது துன்புறுத்துபவர்களின் கணக்கைத் தடுக்க ஒருபோதும் தயங்க வேண்டாம்.

* முகம் தெரியாதவர்களை இணையத்தில் ஏற்றுக்கொள்ளவேண்டாம். தெரிந்தவர்களிடம் மட்டும் பழகுங்கள்.

* முடிந்த அளவு மொபைல் போனை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

தேசிய குற்ற பதிவு பணியகத்தின் (National Crime Records Bureau) தரவுகளின்படி, தோராயமாக 6,030 இணைய குற்றங்கள் மட்டுமே பெண்களால் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்தும் 71 கோடி மக்கள்தொகையில் 25 கோடி பேர் பெண்கள். அதில் 80 சதவிகித மக்கள், குறிப்பாக பெண்கள் சைபர் குற்றங்களுக்கு ஆளாகின்றனர்.

துரதிர்ஷ்டவசமாக, அவர்களில் 63 சதவிகிதத்தினர் எங்கு / எப்படி புகார்களைத் தாக்கல் செய்வது மற்றும் அதற்குப் பிறகான செயல்முறைகளை அறிந்திருக்கவில்லை. இது ஒரு பெரிய சமூக பிரச்சினை, இந்த குற்றங்கள் வெளியே தெரிந்தால் இருக்கும் மானம், மரியாதை போய்விடுமே என்ற அச்சத்தில் பெரும்பாலான குற்றங்கள் பதிவு செய்யப்படாமல் போகின்றன. சமூகத்தின் அங்கமாக உள்ள நாம் தான் இதை தீர்க்க வேண்டும்.

 
Published by:Sivaranjani E
First published: