• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • தீபாவளி கொண்டாட்டம் ஏன் அவசியம்..? சத்குரு விளக்கம்

தீபாவளி கொண்டாட்டம் ஏன் அவசியம்..? சத்குரு விளக்கம்

தீபாவளி கொண்டாட்டம் ஏன் அவசியம்..?

தீபாவளி கொண்டாட்டம் ஏன் அவசியம்..?

மனித இயல்பு இப்படியொரு நிலையில் இருக்கையில், தெளிவு என்பது உச்சகட்ட முக்கியத்துவம் பெறுகிறது. இதனால்தான், வெளிச்சம் அவசியம்.

  • Share this:
புத்தாடை, வெடிச் சத்தம், இனிப்புகள் என கலகலக்கும் தீபாவளியைப் பற்றி சத்குருவின் இந்த ஆழமான பார்வை அதற்குள் ஒளிந்திருக்கும் ஆன்மீக சாத்தியத்தை அறியச் செய்கிறது!

சத்குரு:

தீபாவளி சீசன் வந்துவிட்டது. உங்கள் அனைவருக்கும் என் தீபாவளி வாழ்த்துகள். தீபாவளி என்றால், ‘ஒளிகளின் திருவிழா’ என்று அர்த்தம். மனித வாழ்வில் வெளிச்சத்திற்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்? வேறு சில உயிர்களைப்போல நாம் படைக்கப்பட்டிருந்தால், வெளிச்சம் அத்தனை முக்கிய அம்சமாய் இருந்திருக்காது. பல உயிர்களுக்கு உயிர் வாழத் தேவையான ஒரு அம்சமாய் மட்டுமே வெளிச்சம் இருக்கிறது. ஆனால், நாம் மனிதனாய் பிறந்துவிட்ட பிறகு, நாம் என்ன பார்க்கிறோம், பார்க்கவில்லை என்பதைப் பற்றியதாய் மட்டும் வெளிச்சம் இல்லை. நம் வாழ்வில் வெளிச்சம் உதிக்கிறது என்று நாம் சொல்லும்போது, புதுத் தொடக்கத்தைக் குறிக்கிறோம். எல்லாவற்றிற்கும் மேல், தெளிவு பிறக்கிறது என்று அதற்கு அர்த்தம்.

மனிதனுடைய மூளையில் பாதியினை வெட்டிவிட்டால் அவன் அமைதியாக இருப்பான் எனச் சொல்லலாம். அறிவுத்திறன் இன்று அபரிமிதமான சாத்தியமாய் இருப்பதற்குப் பதிலாய், தீவிரமான சிக்கலாய் பலபேருக்கு இருக்கிறது. தாங்கள் படும் அல்லல்களுக்கு மனஅழுத்தம், பதற்றம், கிறுக்குத்தனம், வேதனை எனப் பல பெயர்கள் கொடுத்தாலும், அடிப்படையில் பார்த்தால், அவர்களுடைய அறிவே அவர்களுக்கு எதிராய் திரும்பிவிடுகிறது.

நீங்கள் ஓரிடத்தில் அமர்ந்திருக்கும்போது, யாரும் உங்களைச் சீண்டாமல் நீங்கள் வேதனைக்கு உள்ளானால், உங்கள் அறிவு உங்களுக்கு எதிராய் செயல் புரிகிறது என்று அர்த்தம்.



மனித இயல்பு இப்படியொரு நிலையில் இருக்கையில், தெளிவு என்பது உச்சகட்ட முக்கியத்துவம் பெறுகிறது. இதனால்தான், வெளிச்சம் அவசியம். ஏனெனில், நாம் ‘வெளிச்சம்’ என்று சொல்கையில் தெளிவு என்று பொருள்படும்படி சொல்கிறோம். உங்களுக்குள் இருக்கும் இருளை ஒடுக்கி, தெளிவு ஏற்படுத்தும் விழா என்பதால் தீபாவளி முக்கியத்துவம் பெறுகிறது.

‘கிருஷ்ணன் நரகாசுரனைக் கொன்ற நாள்’ என்று வரலாறு இதனைச் சொல்கிறது. நரகாசுரன் என்பது அவனுடைய உண்மையான பெயர் அல்ல, ஆனால், அவன் அனைவருக்கும் நரகத்தை அனுபவமாய் வழங்கியதால் நரகாசுரன் என்று அழைக்கப்பட்டான். நரக அனுபவத்தை கிருஷ்ணன் முடிவுக்குக் கொண்டு வந்ததால், மக்கள் தங்கள் இல்லங்களில் விளக்கு ஏற்றிக் கொண்டாடினர். வெடிகள் வெடித்தனர்.

நரகாசுரன் சம்பவம் புதிதுதான் என்கிறார்கள். ஆனால், வருடத்தின் இப்பகுதியில் விளக்கேற்றும் கலாச்சாரம் 12, 15 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. வருடத்தின் இந்தச் சமயத்தில் வாழ்வில் ஒருவித மந்தத்தன்மை ஏற்படுவதை மக்கள் உணர்ந்திருந்தார்கள். நீங்களே ஒரு பட்டாசு போல வெடிப்பாய், துடிப்பாய் வாழாவிட்டால், குறைந்தது உங்களைச் சுற்றி வெடிக்கும் பட்டாசுகளாவது உங்களைச் சற்று விழிக்கச் செய்யட்டும். இந்த வழக்கத்திற்குப் பின்னுள்ள நோக்கம் இதுதான். இந்தியாவில், நரக சதுர்தசி வரும் காலத்தில், காலை 4 மணியில் இருந்தே பட்டாசுகள் வெடிக்கத் துவங்கும். யாரும் வெடிக்கும் பட்டாசுகளிடம் இருந்து தூங்கி தப்பிக்க முடியாது. அனைவரும் எழுகின்றனர்.



தீபாவளிப் பண்டிகையின் இயல்பு இது. ஆனால், இதன் முக்கிய அம்சம், மந்தத்தன்மையை விரட்டுவதுதான்.
வாழ்வென்பது நேரம் மற்றும் சக்தியின் விளையாட்டுதான். உங்களிடம் குறிப்பிட்ட அளவு நேரமும் குறிப்பிட்ட அளவு சக்தியும் இருக்கிறது. நேரத்தைப் பொருத்தவரை, நீங்கள் பிஸியாக இருந்தால் அது கடந்தோடிவிடும். நீங்கள் சோம்பேறியாக இருந்தால் அது கடந்தோடிவிடும். நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால், அது கடந்தோடிவிடும். நீங்கள் நோயுற்று இருந்தால் அது கடந்தோடிவிடும்.

நம் அனைவருக்கும் நேரம் ஒரே வேகத்தில்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. யாரும் அதன் வேகத்தை மட்டுப்படுத்த முடியாது, யாரும் அதனை வேகப்படுத்த முடியாது. நீங்கள் பேரானந்தமாய் இருந்தால், 24 மணிநேரம் ஒரு கணம்போல் கடந்துபோகும். நீங்கள் மனச்சோர்வில் இருந்தால், 24 மணி நேரம் ஒரு யுகம்போல் கடக்கும்.

சந்தோஷமாய் இருந்தால் வாழ்க்கை சுருக்கமாய் இருக்கும். மனிதனுக்குள் இருக்கும் ஆற்றலைத் திறமையாய் செயல்படுத்தினால், அவன் நூறு ஆண்டுகள் வாழ்ந்தாலும் அது கணப்பொழுதில் ஓடிவிடும். ஆனால், உங்களுக்குள் மந்தத்தன்மை புகுந்துவிட்டால், நீங்கள் நொந்துபோன மனிதராய் இருந்தால், நேரம் மெல்லவே நகரும். வேதனையான மனிதர்கள் வாழும் சமூகத்தில், கேளிக்கைகளுக்கான தேவை பல்கிப் பெருகும்.

"தீபாவளியின் போது பட்டாசு வெடிக்க தடை விதிக்க கூடாது" - சத்குரு

சந்தோஷமாய் வாழும் மக்கள் இருந்தால், பொழுதுபோக்குகளுக்கான தேவை இருக்காது. உங்களுடைய எல்லா நேரத்தையும் சந்தோஷம் எடுத்துக்கொள்ளும். நீங்கள் சந்தோஷமாய் இருந்தால், உங்களால் இயன்ற அனைத்தையும் நீங்கள் செய்வீர்கள். எதையும் தவிர்க்க மாட்டீர்கள். நீங்கள் சோகமாய் இருந்தால், அனைத்தையும் தவிர்ப்பது எப்படி என்பதிலேயே உங்கள் கவனம் இருக்கும்.

“வெள்ளிக்கிழமை வந்துவிட்டதா! நன்றி கடவுளே” என வேண்டும் கலாச்சாரம் வேகமாய் வளர்ந்து வருகிறது. அதற்கு என்ன அர்த்தம்? 5 நாட்கள் வேதனை. இரண்டு நாட்கள் சந்தோஷம் அல்ல, போதைப் பொருட்கள். ஆடிப்பாடி, சிரித்து, சந்தோஷமாய் ஏதோ ஒன்றைச் செய்ய மக்களை போதையில் வைத்திருக்க வேண்டி இருக்கிறது. குறைந்தபட்சம், ஒரு டம்ளர் மதுபானம் தேவையிருக்கிறது. பல்வேறு விதங்களில் நமக்குள் மந்தத்தன்மையை ஏற்படுத்திக் கொண்டதால்தான் இப்படி ஆகிவிட்டது. நமக்குள் மந்தத்தன்மை புகுந்துவிட்டால், நேரம் கடந்து செல்லாது. வாழ்க்கை நீளும்.



தீபாவளி, மந்தத்தன்மையை வீழ்த்தும் ஒரு நாள். மந்தத்தன்மைதான் நரகத்தின் மூலம். நமக்குள் மந்தத்தன்மை புகுந்துவிட்டால் நீங்கள் நரகத்திற்குச் செல்லமாட்டீர்கள், நரகத்தில் வாழ்வீர்கள். நீங்கள் தனிமையில் இருக்கும்போதுகூட, யாரும் உங்களுக்கு ஏதும் செய்யாத நிலையிலும் அப்படித்தான் இருப்பீர்கள். எதுவும் நடக்காவிட்டால் துன்பம் மிகுதியாகிவிடும். மனிதனுக்குள் ஏற்பட்டிருக்கும் மிகப் பெரிய துன்பமே, எதுவும் நடக்காமல் இருப்பதுதான்.

இதனால், தீபாவளி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: