Home /News /lifestyle /

Sadhguru Tamil : நெருக்கமானவர்கள் மீது குறைகாணும் மனநிலை ஏன் வருகிறது?

Sadhguru Tamil : நெருக்கமானவர்கள் மீது குறைகாணும் மனநிலை ஏன் வருகிறது?

 சத்குரு விளக்கம்

சத்குரு விளக்கம்

Sadhguru Tamil : “என் அப்பா குடிகாரர்”, “என் கணவன் கோபமானவன்”, “என் மகன் மோசக்காரன்”, “என் மாமியார் கொடுமைக்காரி” என்று குடும்பத்தில் யாரையாவது குறை சொல்லிக் கொண்டிருப்பவர்கள் உண்டு.

படித்துமுடித்து நல்ல சம்பாத்தியம் பெறும் இளைஞர்கள் பலர் தங்கள் பெற்றோர்களை முட்டாள்களாக பார்க்கும் மனநிலையை கொண்டுள்ளனர். இந்த பதிவில், 3 சங்கரன்பிள்ளை கதைகளை ஆங்காங்கே கூறும் சத்குரு, நெருக்கமானவர்களிடம் குறைகாணும் மனப்போக்கின் அபத்தத்தை சுட்டிக்காட்டுகிறார்! சுற்றியுள்ளவர்களில் யாரையாவது மோசமானவராகப் பார்ப்பது எளிது. “என் அப்பா குடிகாரர்”, “என் கணவன் கோபமானவன்”, “என் மகன் மோசக்காரன்”, “என் மாமியார் கொடுமைக்காரி” என்று குடும்பத்தில் யாரையாவது குறை சொல்லிக் கொண்டிருப்பவர்கள் உண்டு.

உங்கள் மனதைத் தொட்டுச் சொல்லுங்கள். நீங்கள் நாளின் இருபத்து நான்கு மணிநேரமும் முற்றிலும் ஒழுங்கானவராகத்தான் நடந்துகொள்கிறீர்களா? உங்கள் சந்தோஷம் ஒன்றில் இருக்கிறது. அவருடைய சந்தோஷம் வேறொன்றில் இருக்கிறது, அவ்வளவுதான்.
அவர் பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டாம் என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால், அவருடைய பழக்க வழக்கங்களை வைத்துத்தான் அவர் உறவையே நீங்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று நினைப்பது கேவலம் என்றுதான் சொல்கிறேன்.

சங்கரன் பிள்ளை, தன்னிடம் கையேந்தி நின்ற பிச்சைக்காரனை பார்த்து, “பணம் கொடுத்தால், நீ போய்க் குடிப்பாய்” என்று கூறினார்
“ஐயோ, சத்தியமாய் நான் குடிப்பதில்லை”
“அப்படியானால், சூதாடித் தோற்பாய்”
“என் வாழ்வில் நான் சூதாடியதே இல்லை, அய்யா”
“ஓ, பெண்களிடம் சபலம் கொண்டவனா நீ?”
“என் தாய் மேல் ஆணையாக நான் பெண்களிடம் போனதில்லை”
சங்கரன்பிள்ளை யோசித்தார். “உனக்கு நூறு ரூபாயே தருகிறேன். என் வீட்டுக்கு வா. எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லாதவன் வாழ்க்கையில் என்னவாகிறான் என்று என் மனைவியிடம் காட்ட வேண்டும்” என்றார்.இந்த வேடிக்கைக் கதையில் பார்த்தவரைப் போல், எத்தனையோ ஆண்கள் அவர்களுடைய குடும்பத்தின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றமாதிரி நடந்து கொள்வதில்லை.

அவர்களுடைய இயலாமையோ, திறமையின்மையோ, தேர்ந்தெடுத்த தொழிலோ, சூழ்நிலைகளின் நிர்ப்பந்தங்களோ, எது வேண்டுமானாலும் அதற்குக் காரணமாக அமையலாம்.
பயன் இருந்தால், ஒருவரை ஏற்றுக்கொள்வதும், இல்லையென்றால் நிராகரிப்பதும் குடும்பமாக ஆகாது. அது வணிகம். கொடுத்து வாங்கும் வியாபாரம். குடும்பம் என்றால் என்ன?

இதையும் படியுங்கள் :  ஏன் சிவன் பாதி பெண்ணாக மாறினார்?

நெருக்கமான சிலரை உங்களுடையவராக ஏற்றுக்கொள்வது தான் உண்மையான குடும்பம். அவர்களுடைய வெற்றி, தோல்விகளைத் தாண்டி, அவர்கள் ஆரோக்கியமானவர்களா, நோயாளிகளா என்பதைத் தாண்டி, உங்களை அவர்களுடன் ஈடுபடுத்திக்கொள்வதுதான் குடும்பத்தின் உண்மையான அர்த்தம்.
ஒருவேளை, உங்கள் குடும்ப உறுப்பினர் தவறான பாதையில் சென்று கொண்டிருந்தால், அவரை அதிலிருந்து மீட்பது உங்கள் பொறுப்பு அல்லவா?

பவளங்களைப் பார்ப்பதற்காக, நீர்மூழ்கி உடைகள் அணிந்து கடலுக்குள் இறங்கினார், சங்கரன்பிள்ளை. இருபதடி ஆழத்தில், எந்தப் பாதுகாப்பு உடைகளும் அணியாமல் வேறு ஒருவன் தனக்கு சமமாக வருவது கண்டு ஆச்சரியமானார். நாற்பதடி ஆழத்திற்குப் போனால், அங்கேயும் அவன் வந்து சேர்ந்தான். அறுபதடி ஆழத்திலும் அவன் பாதுகாப்பு உடைகளோ, ஆக்ஸிஜன் முகமூடியோ இல்லாமல் கூடவே வருவது கண்டு சங்கரன்பிள்ளை திகைத்தார்.
தண்ணீரில் கரையாத மையில் “எப்படி இது சாத்தியம்?” என்று எழுதிக் கேட்டார். அடுத்தவன் பேனாவைப் பிடுங்கி பதில் எழுதினான்:“நான் மூழ்கிக் கொண்டிருக்கிறேனடா, முட்டாள்.. காப்பாற்றப் பார்க்காமல் கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கிறாயே?”
சங்கரன்பிள்ளையைப் போல்தான் நீங்களும் மூழ்குபவரை வேடிக்கை பார்க்கிறீர்கள். குடும்பத்திலிருந்து விலகிப் போக நினைக்கிறீர்கள். அல்லது அவரை விலக்கி வைக்கப் பார்க்கிறீர்கள்.
நகரத்தில் பெரும் சம்பாத்தியம் ஈட்டிக்கொண்டிருக்கும் ஓர் இளைஞர் என்னிடம் வந்தார். “என் அப்பா படிக்காத விவசாயி. அவருக்கு சபை நாகரீகம் இல்லை. என் நண்பர்களிடத்தில் அவர் உளறிக்கொட்டுவது எனக்குப் பெருத்த அவமானமாக இருக்கிறது” என்று அவரைப் பற்றிக் கேவலமாகப் பேசினார்.

நான் கேட்டேன்: “உங்கள் பெற்றோரின் முட்டாள்தனத்தால் தயாரிக்கப்பட்டவர்தான் நீங்கள் என்பதை முதலில் மறந்துவிட்டீர்களே? ‘இந்த மூலத்திலிருந்துதான் வந்தேன்’ என்பதைப் புரிந்துகொள்ளும் புத்திசாலித்தனம்கூட உங்களிடம் இல்லையே? நீங்கள் முட்டாளா? அவர் முட்டாளா? இப்படிப்பட்டவருக்கு உயிர் கொடுத்ததை வேண்டுமானால், முட்டாள்தனம் என்று சொல்லலாமா?”
நமக்கு எப்பொழுதுமே, நம் எதிர்பார்ப்போடு ஒத்துப் போகாதவர்கள் முட்டாள்களாகத் தென்படுவார்கள். உங்களையும் இதே காரணத்துக்காக முட்டாளாகப் பார்ப்பதற்கு நூறு பேர் இருக்கிறார்கள் என்பதை மறக்காதீர்கள்.
தேர்வில் தோற்றுப்போன மகனை சங்கரன்பிள்ளை திட்ட விரும்பினார்.

இதையும் படியுங்கள் :  பிரம்மா, விஷ்ணு, சிவன் - மூவரும் ஒருவரா? - சத்குரு விளக்கம்

“உன் மூளை ஒரு பாலைவனம் போலிருக்கிறது” என்றார், கோபமாக.
“அப்பா, ஒவ்வொரு பாலைவனத்திலும் சின்னதாகவாவது ஒரு பசுஞ்சோலை இருக்கிறது. ஆனால், எல்லா ஒட்டகத்தாலும் அதைக் கண்டுபிடிக்க முடிவதில்லை” என்றான் மகன், முகத்திலடித்தது போல். நீங்கள் நகரத்தில் வளர்ந்துவிட்டீர்கள். சரளமாக இங்கிலீஷ் பேசுகிறீர்கள். கம்ப்யூட்டர் போன்ற சில இயந்திரங்களை இயக்கும் வித்தையைத் தெரிந்துகொண்டு விட்டீர்கள். இதனாலெல்லாம் நீங்கள் புத்திசாலியாகிவிட்டதாகக் கருதுகிறீர்களா?
பசுமாட்டின் மடியிலிருந்து அவர்களைப் போல் அநாயாசமாக உங்களால் பால் கறக்க முடியுமா? காலில் காயப்பட்டுக் கொள்ளாமல், கலப்பையை ஓரடியாவது உங்களால் ஓட்ட முடியுமா? முடியாதென்றால், உங்களை முட்டாள் என்று முத்திரை குத்திவிடலாமா?நீங்கள் விவசாயத்தை அதிகபட்சம் புத்தகத்தில் படித்திருப்பீர்கள். அவர்கள் நிலத்தில் படித்தார்கள். அவர்களுடைய அனுபவம் அல்லவா நேரடியானது, ஆழமானது.
தங்களைவிட தங்கள் மகனை மேல்நிலைக்குக் கொண்டு வரவேண்டும் என்று உங்களுக்கு நகரத்துக் கல்வியையும், மற்ற வசதிகளையும் வழங்கிய அவர்கள் புத்திசாலிகளா, நீங்கள் புத்திசாலியா?

பதிலுக்கு அவர்களை மேல்நிலைக்குக் கொண்டு வரவேண்டும் என்று நீங்கள் உண்மையில் விரும்பினால், அவர்களை முட்டாள்களாகப் பார்க்காமல், அவர்களிடம் அன்புடன் உங்களுக்குத் தெரிந்திருப்பதையும் பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் ஒருநிலையில் இருக்கிறீர்கள். அடுத்தவர் வேறு நிலையில் இருக்கிறார், அவ்வளவுதான். இதில் எதுவும் புத்திசாலித்தனம் இல்லை. எதுவும் முட்டாள்தனம் இல்லை. இன்னும் சிலர் இருக்கிறார்கள். “அவனுடன் எப்படி நட்பு பாராட்ட முடியும்? மரியாதை தெரியாதவன். சமூகத்தில் எனக்குள்ள அந்தஸ்தைப் புரிந்து கொள்ளாதவன்” என்றெல்லாம் யாரைப் பற்றியாவது புலம்புவார்கள்.

இதையும் படியுங்கள் :  சிவனின் பெற்றோர்கள் யார்? சத்குரு விளக்கம்

உங்களுக்குக் கீழே பணிபுரிபவரோ, உங்கள் குடும்பத்தில் உள்ள இளவயது உறுப்பினர்களோ உங்களுக்கு உரிய மரியாதை தருவதில்லை என்று வருத்தம் கொள்பவரா நீங்கள்?
திருத்த வேண்டியது அவர்களை அல்ல, உங்களை. ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் சுயம் எந்த மரியாதையையும் எதிர்பார்க்கவில்லை. சுயமரியாதை என்று ஒன்று கிடையவே கிடையாது. அது கற்பனை உணர்வு. நீங்கள் மற்றவரிடம் எதற்காக மரியாதையை எதிர்பார்க்கிறீர்கள்? மற்றவர்களின் கவனம் உங்கள் பக்கம் திரும்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்புதானே?
உண்மை என்னவென்றால்..

இன்றைய கட்டத்தில், நீங்கள் உள்ளுக்குள் முழுமையாகிவிட்டதாக உணரவில்லை. அரைகுறையாக இருப்பதாக நினைக்கிறீர்கள். காலியிடத்தை இட்டு நிரப்புவதற்கு, உங்களுக்கு மற்றவர்கள் கவனம் தேவைப்படுகிறது. சங்கரன்பிள்ளை தன் நண்பருடன் டென்னிஸ் ஆடிக் கொண்டிருந்தார். தாரை தம்பட்டத்துடன் ஒரு பிண ஊர்வலம் அவர்களைக் கடந்தது. நண்பர் சட்டென்று நின்றுவிட்டார். கண்களை மூடி கைகளைக் கூப்பி அந்த ஊர்வலம் கடந்து போகும்வரை காத்திருந்து விட்டுத்தான் ஆட்டத்தைத் தொடர்ந்தார்.
சங்கரன்பிள்ளை சொன்னார்: “மற்றவர்களிடம் என்னவொரு மரியாதை! உன் செயல் கண்டு நெகிழ்ந்து போகிறேன்”
நண்பர் சொன்னார்: “முப்பது வருடம் கூட வாழ்ந்தவளுக்கு இதுகூட செய்யாவிட்டால் எப்படி?”இப்படிப்பட்ட மரியாதையையா நீங்கள் விரும்புகிறீர்கள்?

மரியாதையை அதிகாரத்தினாலோ, பாசத்தினாலோ, கேட்டுப் பெறுவது பிச்சை எடுப்பது போல. உணவுக்காகக் கையேந்தலாம், உணர்வுக்காகக் கையேந்தக் கூடாது. இன்றைக்கு உங்களுக்கு அளவுக்கதிகமான மரியாதை தருபவர்கள் நாளைக்கு உங்களைத் திரும்பிப் பார்க்காமல் போக நேரலாம். ஒவ்வொரு முறையும் அது உங்களுக்கு வலி கொண்டு தருமேயானால், தவறு உங்களிடத்தில்தான் இருக்கிறது.

இதையும் படியுங்கள் :  ஏன் கெட்டவர்கள் நன்றாக வாழ்கிறார்கள்? - சத்குரு விளக்கம்

எப்போதெல்லாம் நீங்கள் அரைகுறையாக உணர்கிறீர்களோ, அப்போதெல்லாம், மற்றவர்களிடம் எதையாவது எதிர்பார்ப்பீர்கள். அது நிறைவேறாதபோது, உடைந்து போவீர்கள்.
உங்களை முழுமையாக்கிக் கொள்வது எப்படி என்று பார்ப்பதை விடுத்து, அடுத்தவர்களிடம் மரியாதைக்காக கையேந்துவது கேவலம் அல்லவா? என்னைக் கேட்டால், நீங்கள் கசப்பாக உணரும் மோசமான அனுபவங்கள் எல்லாம் அடுத்தடுத்து உடனே நேர்ந்து விடுவதுகூட உங்களுக்கு நல்லதுதான். வாழ்க்கையின் சின்னச் சின்ன படிப்பினைகளை அறிவதற்குத் தாமதமாக தாமதமாக, உங்கள் வாழ்க்கை அல்லவா வீணாகிக் கொண்டிருக்கிறது?

உங்கள் அனுபவங்களுக்கு விதி, தன்மானம், சுயகௌரவம், ரோஷம் என்று எதன் மீதாவது பழி சுமத்தும் வரை, ஒரு நாளும் ஆனந்தத்தின் ருசியை நீங்கள் உணர மாட்டீர்கள். எல்லாவற்றுக்கும் முழுமுதற்காரணம் நீங்கள், நீங்கள், நீங்கள், நீங்களேதான்.
இதை உணர்ந்து விட்டால், மிச்சமிருக்கும் வாழ்க்கையையாவது அற்புதமாக, ஆனந்தமாக நடத்திக் கொள்வது எப்படி என்று பார்க்க ஆரம்பிப்பீர்கள்.

இதையும் படியுங்கள் :  ‘விழிப்புணர்வு’ என்று நாம் சொல்வது எது? - சத்குரு விளக்கம்

எதிரியை சமாளிப்பது எப்படி?

சத்குரு: ஒரு இரும்புத் துண்டத்தை வளைக்கப் பார்க்கிறீர்கள், இயலவில்லை. அதை வலுவானது என்று சொல்கிறீர்கள்.
உங்களைவிட வலுவுள்ள வேறு யாராவது அந்த இரும்பை வளைக்க முடியும். இயந்திரத்தில் கொடுத்தால் அதைத் துண்டம் துண்டமாக உடைக்கக்கூட முடியும். எதிர்ப்பால் பலம் காட்டுகிற எல்லா விஷயங்களுக்கும் இப்படித்தான் அதற்கும் மேலே இன்னொரு பலம் இருக்கும். ஆனால் எதிர்க்காத ஒன்றை எப்பேர்ப்பட்ட சூப்பர்மேன் வந்தாலும் எப்படி வளைக்க முடியும்? எப்படி உடைக்க முடியும்?
எனவே எதிரி என்று நினைப்பவரைவிட நீங்கள் சக்தி மிகுந்தவராக வேண்டுமென்றால்...அவரையும் அன்போடு ஏற்றுக்கொள்ளப் பழகுங்கள். அது மேன்மையானது, உன்னதமானது, எதிர்ப்பதைவிட சக்தி மிகுந்தது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Sadhguru

அடுத்த செய்தி