Home /News /lifestyle /

தற்கொலை செய்ய ரயில் தண்டவாளத்தில் நின்ற கர்ப்பிணி... மனதை மாற்றிய மனநல ஆலோசகர் ஹேமலதா

தற்கொலை செய்ய ரயில் தண்டவாளத்தில் நின்ற கர்ப்பிணி... மனதை மாற்றிய மனநல ஆலோசகர் ஹேமலதா

மனநல ஆலோசகர் ஹேமலதா

மனநல ஆலோசகர் ஹேமலதா

புரட்சிகள், ஆட்சி மாற்றங்கள் ஏற்பட ஒருவரின் பேச்சு காரணமாய் இருந்திருக்கிறது. ஆனால் இங்கே ஒரு பெண்ணின் அன்பு கலந்த தைரியமூட்டும் வார்த்தைகள் பல தற்கொலைகளை கண நேரத்தில் தவிர்த்திருக்கின்றன.

கையில் தூக்க மாத்திரையுடனும் ரயில்வே தண்டவாளத்தின் முன் நின்றும் கண்டிப்பாக தற்கொலை செய்து கொள்ளலாமா என மனது ஊசலாடும் அந்த சில நொடிகளை பயன்படுத்தி தனது வார்த்தைகளின் வலிமையால், அவை தரும் ஊக்கத்தால் பல உயிர்களை காப்பாற்றியுள்ளார் 50 வயதான மனநல ஆலோசகர் ஹேமலதா.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உளவியல் படித்த இவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இத்துறையில் உள்ளார். பலவிதமான வாழ்க்கை பிரச்னைகள், உறவுச் சிக்கல்கள், அலுவலக நெருக்கடிகள், பொருளாதார பிரச்னைகளை பகிர்ந்து கொள்ளும் பலருக்கு காது கொடுத்து கேட்கும் நண்பராக உள்ளார். தடையாகி போன சமூக விழுமியங்களை கடந்து வர உதவுகிறார்.

104 உதவி மையத்தில் தற்போது மனநல ஆலோசகராக பணியாற்றி வருகிறார் ஹேமலதா. தற்கொலையிலிருந்து காப்பாற்றிய அந்த இரவை விவரிக்கிறார். " நள்ளிரவு போல் இருக்கும். கடன் தொல்லையால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு குடும்பம் என்னை 104-ல் தொடர்பு கொண்டார்கள்.

பொருளாதார நெருக்கடி காரணமாக குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவு செய்து கணவன், மனைவி தயாராக இருந்தனர். அவர்களுக்கு 10, 12 வயதில் இரண்டு குழந்தைகள் இருந்தன. அவர்களுக்கும் சேர்த்து தண்ணீரில் தூக்க மாத்திரை கலந்து டம்ளரில் தயாராக வைத்திருந்தனர்.

தான் பெற்ற குழந்தைகள் சாக வேண்டாமே என யோசித்த அந்த தாய், 104-க்கு அழைத்தார். பணம் சம்பாதிக்க எத்தனையோ வழிகள் உள்ளன, எந்த பிரச்னைக்கும் தற்கொலை தீர்வல்ல என்று எடுத்து கூறினேன். அவர்கள் மனமாறினார்கள்.

தூக்க மாத்திரை கலந்த தண்ணீரை கீழே கொட்டும் சத்தம் எனக்கு கேட்க வேண்டும் என்றேன். தற்போது இட்லி தோசை மாவு அரைத்து விற்று வருகிறார்கள். தங்கள் கடனை சிறுக சிறுக அடைத்து வருகிறார்கள். இன்னும் முழுமையாக அடைத்து விடவில்லை. ஆனால் அடைக்க முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு வந்துவிட்டது. அந்த நம்பிக்கை தானே வாழ்க்கை" என்கிறார் ஹேமலதா.

ரயில் தண்டவாளத்தின் முன் நின்று கொண்டு எனக்கு அழைத்த கர்பிணி பெண்ணை காப்பாற்றிய அனுபவம் மறக்க முடியாதது என்கிறார் ஹேமலதா. 'தண்டவாளத்தின் முன் நிற்பதாக கூறியதும் அந்த பெண்ணிடம் பேசி அவரை அங்கேயே நிற்கும்படி கூறினேன். பிறகு சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு தகவல் தெரிவித்து அந்த பெண்ணை அங்கிருந்து காப்பாற்றினோம்' என்றார் அவர்.

"பிரச்னைகள் இல்லாத மனிதர்களே கிடையாது. தீர்வில்லாத பிரச்னையே கிடையாது" என்ற லேணா தமிழ்வாணன் வரிகள் தான் தனக்கு நினைவுக்கு வருவதாக கூறுகிறார்.

'என்னிடம் பேசும் யாரையும் குற்றவாளியாக பார்க்க மாட்டேன். எல்லோரும் அன்புக்கு ஏங்கும் குழந்தைகள் தான். வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் கூட அழைப்பார்கள்.

சில நேரம் அவர்கள் அடையாளத்தை சொல்லாமல் பேசுவார்கள். சினிமா துறையில் உதவி இயக்குநர்களாக இருப்பவர்கள் பலர் அழைத்திருக்கிறார்கள். தங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை, பல அவமானங்களை தாங்கிக் கொள்ள வேண்டியுள்ளது என்பதால் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்' என்கிறார் ஹேமலதா.

கல்லூரி மாணவர்கள்  மற்றும் இளம் வயதினர் பலர் சந்திக்கும் உறவுச் சிக்கல்களிலிருந்து மீள ஆலோசனை வழங்குகிறார். ' தான் தேர்ந்தெடுத்தவர் தவறு என்று தெரிந்த பிறகு, வெளியுலகத்துக்கு தெரிந்துவிட்டதே என்ற காரணத்தினாலேயே ஒருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிலையில் இருக்கும் இளைஞர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவிப்பார்கள்.

ஒரு உறவை முறித்துக் கொண்டு மற்றொரு உறவை தேடுபவர்களை குற்றவாளிகளாக பார்க்கும் நிலை சமூகத்தில் மாற வேண்டும்" என்கிறார் ஹேமலதா.

இந்த பிரச்னைகளுக்கு எல்லாம் அடிப்படை காரணமாக அவர் கூறுவது, " யாரும் யாரிடமும் மனம் விட்டு பேசுவதற்கான நேரம் செலவிடுவது இல்லை. எல்லாரும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறோம்.

யாரிடமாவது மனம் விட்டு பேசினால் மன உளைச்சல் ஏற்பட்டோரின் பாதி பிரச்னைகள் தீர்ந்து விடும். அந்த நேரத்தை நான் அவர்களுடன் செலவிடுகிறேன். அதனால் நான் கூறுவதை அவர்களும் காது கொடுத்து கேட்கிறார்கள்.

Also see...
Published by:Vinothini Aandisamy
First published:

அடுத்த செய்தி