பயமா? எனக்கா? என டயலாக்குகளை தெரிக்க விட்டாலும் நம்மை அறியாமலேயே ஒரு சில விஷயங்களுக்கு பயப்படுவோம். சில பேர் எதற்கு பயப்படுகிறோம் என்று தெரியாமலேயே பயப்படுவார்கள். பார்ப்பதற்கு கம்பீரமாக இருப்பவர் கூட ஏதாவது ஒரு விஷயத்துக்கு பயப்படுவார். இப்படி நமக்குள் இருக்கும் பயத்தை ஜோதிட ரீதியில் பார்க்கும்போது, ஒருவரின் ராசியை வைத்து அவர் எதற்கெல்லாம் பயப்படுவார் என்பதை யூகமாக சொல்லவிடமுடியும். எந்தெந்த ராசிக்காரர்கள் எதற்கெல்லாம் பயப்படுவார்கள் என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள், நெருங்கி பழகிய உறவுகளை இழப்பதற்கு மிகவும் பயப்படுவார்கள். அவர்கள் நண்பர் அல்லது காதலியாகக் கூட இருக்கலாம். நெருங்கிப் பழகிய ஒருவரை இழக்க விரும்பாத மேஷ ராசிக்காரர்கள், அவர்கள் மீது கூடுதல் அக்கறை செலுத்துவார்கள். ஒவ்வொரு செயலையும் பார்த்து பார்த்து செய்வார்கள். இதுவே, மேஷ ராசிக்காரர்களுக்கு நெகடிவ்வாகவும் அமைகிறது. காரணம், கூடுதல் அன்பு மற்றும் அக்கறை நெருங்கிப் பழகுபவர்களுக்கு ஒருவித சலிப்பை ஏற்படுத்தி மேஷ ராசிக்காரர்களை விட்டு பிரிந்தும் சென்றுவிடுகிறார்கள்.
ரிஷபம்
திருப்தியான வாழ்க்கையை வாழ வேண்டும் என எண்ணுபவர்கள் ரிஷப ராசிக்காரர்கள். அப்படியான வாழ்க்கை வேண்டுமானால் பணம் இருக்க வேண்டும் என்பதை தெளிவாக உணர்ந்த அவர்கள், பணத்தை சேமித்து வைப்பதில் கவனமாக இருப்பார்கள். நிதிச்சிக்கல் குறித்தும் எப்போதும் அச்சம் கொள்வார்கள். பணம் சேர்ப்பதற்கு கடிமான உழைக்கும் அவர்கள், கிடைத்த பணத்தை பத்திரப்படுத்தி வைத்து நிலையான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதிலும் உறுதியாக இருப்பார்கள். கடன் வாங்குதற்கும் அவர்கள் அச்சப்படுவார்கள்.
மிதுனம்
கடினமான சூழல் அல்லது ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் முடிவெடுப்பதில் மிதுன ராசிக்காரர்களுக்கு சிரமமாக இருக்கும். எடுக்கும் முடிவு என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது அவர்களுக்குள் ஒருவித பயத்தை ஏற்படுத்திவிடும். சிக்கலான சூழலில் பரஸ்பர முடிவெடுப்பதில் திணறும் மிதுன ராசிக்காரர்கள், குழப்பமான நிலையிலேயே இருப்பார்கள். எந்தவொரு சூழல் குறித்து பல்வேறு கோணங்களில் யோசிப்பதால், அதுவே அவர்களுக்குள் பயம் ஏற்பட காரணமாக அமைகிறது.
கடகம்
தங்களுக்கு சாதகமான இடத்தில் இருக்க வேண்டும் என்பதை கடக ராசிக்காரர்கள் விரும்புவார்கள். இதற்காக, தங்களுக்கு நெருக்கமான வட்டத்தில் மட்டுமே பழகுவார்கள். புதிய நபர்களுடன் பழகுவதற்கும், புதிய இடங்களுக்கு செல்வதற்கும் அவர்களுக்கு எப்போதும் பயம் இருந்துகொண்டே இருக்கும். இதனால், கட்டாயமாக புதிய இடங்களுக்கு செல்ல வேண்டிய சூழல் வரும்போது, தேவையற்ற பயத்தை உருவாக்கிக்கொள்வதுடன், அந்த சூழலுக்கு ஏற்ப இருக்கவும் பழக்கப்படுத்திக்கொள்ள மாட்டார்கள்
சிம்மம்
மற்றவர்களுடன் ஒப்பிடும்போது தாங்கள் மிகவும் சிறந்தவர்கள் என்ற நினைப்பில் இருப்பார்கள். ஏதாவது, ஒரு இடத்தில் புறக்கணிக்கப்படும்போது, அதனை தங்களுக்கு விழுந்த மிகப்பெரிய அடியாக எண்ணுவார்கள். இதனால், எந்தவொரு இடத்திலும் தனித்து இருப்பதற்காக கடினமாக உழைக்கிறார்கள். அதற்கேற்ற பலன் நல்ல முறையில் அமையாவிட்டால் மனம் உடைந்துபோகிறார்கள். இதனால், சமுதாயத்தில் மிகவும் கீழான நிலையில் இருப்பதாக நினைத்து அச்சமடைவார்கள்.
கன்னி
தங்களுக்கென ஒருவித கட்டுபாடுகளை ஏற்படுத்தி, அதன்படி நடப்பார்கள். அந்த நடைமுறையில் ஏதேனும் ஒரு சிறு சிக்கல் எழுந்தால் உச்சகட்ட விரக்திக்கு சென்றுவிடுவார்கள். இதனால், எப்போதும், எந்த விஷயத்திலும் சரியாக இருக்க வேண்டும் என்பதற்காக தேவையற்றவை எல்லாம் மனதில் வைத்து குழப்பிக்கொள்வார்கள். இது அவர்களை எதிர்மறையான சிந்தனைகளை கொண்ட நபராக மாற்றிவிடுகிறது. இயல்பாகவே பயமும், விரக்தியும் அவர்களின் குணாதியமாகவும் மாறிவிடுகிறது.
துலாம்
தனியாக நேரத்தை செலவிடுவது துலாம் ராசிக்காரர்களுக்கு மிகவும் கடினம். தனிமையில் இருக்கும்போது உச்சக்கட்ட அச்சத்தில் இருப்பார்கள். இதற்காக, தங்களுடன் ஒரு கூட்டத்தை எப்போதும் வைத்துக்கொண்டே இருப்பார்கள். எங்கு சென்றாலும், தனக்கு உடந்தையாக இன்னொருவரை அழைத்துச்செல்லும் அவர்கள், தனியாக இருப்பதை முடிந்தளவுக்கு தவிர்க்க முயற்சி செய்வார்கள். கூட்டாளிகளும் நம்பிக்கைக்குரியவர்களாக இருக்க வேண்டும் என நினைப்பதால், துலாம் ராசிக்காரர்கள் விரைவாக காதலில் விழுந்துவிடுவார்கள்.
விருச்சிகம்
யாருடனும் நெருங்கிப் பழக விருச்சிக ராசிக்காரர்கள் பயப்படுவார்கள். ஒருவர் மீது நம்பிக்கை கொள்வது அல்லது எந்தமாதிரியான நபர் என மற்றவர்களை கணிப்பது அவர்களுக்கு பிரச்சனையாக இருக்கும். எப்படி பழகினாலும், தங்களைப் பற்றிய முழு விவரத்தையும் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளமாட்டார்கள். நெருங்கிப் பழகினால் தங்களைப் பற்றி அறிந்துகொண்டு, மதிப்பு மரியாதையுடன் நடத்த மாட்டார்களோ என்ற அச்சத்துடன் இருப்பார்கள்
தனுசு
மூடிய அறைக்குள் இருப்பது தனுசு ராசிக்காரர்களுக்கு பிடிக்காது. பயணத்தை விரும்பக்கூடிய அவர்கள், எப்போதும் வெளியுலக தொடர்புடன் இருந்துகொண்டு இருப்பார்கள். ஒரு குறிப்பிட்ட இடத்துக்குள், அல்லது சந்தர்ப்பங்களுக்குள் சிக்கவைக்கப்படுகிறோம் என நினைக்கு விஷயங்களுக்குள் செல்ல மாட்டார்கள். எப்போதும் சுதந்திரக் காற்றுடன் இருக்க வேண்டும் என தனுசு ராசிக்காரர்கள் எண்ணுவார்கள். இதனால், எந்த ஒரு பொறுப்புக்கும் தலைமையேற்க மாட்டார்கள்.
மகரம்
ராசி அடிப்படையிலேயே வேலையில் மட்டுமே கவனம் செலுத்தக்கூடியவர்கள். வணிகம் சார்ந்து சிந்திக்கக்கூடிய மகர ராசிக்காரர்கள், கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை செலுத்துவார்கள். தோல்வியை எதிர்கொள்வதற்கு தேவையான மனோதிடம் இவர்களிடம் இல்லாததால், வெற்றி மட்டுமே வேண்டும் என்பதற்காக கடினமாக உழைப்பார்கள். ஏதேனும் ஒரு சூழலில் தோல்வியடைந்துவிட்டால், அதில் இருந்து அவர்கள் மீண்டு வருவது மிகவும் கடினம். போதுமான காலம், நேரம் ஆகியவை மட்டுமே அவர்களை மீட்கும் சாதனங்கள். தோல்வி அவர்களுக்குள் மிகப்பெரிய பயத்தை ஏற்படுத்திவிடும்.
சிறந்த கணவர் என பெயர் எடுக்க வேண்டுமா..? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணா நீங்கதான் பெஸ்ட் கணவர்
கும்பம்
கருத்துக்களையும், தங்களின் எண்ணங்களையும் வெளிப்படுத்துவதற்கு அஞ்சுவார்கள். ஏனென்றால், தங்களுடைய கருத்துகளால் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டுவிடுமோ என்கிற பயம் அவர்களுக்குள் இருக்கும். மற்றவர்களுக்கு எதிராக எப்போதும் பேசமாட்டார்கள். அச்சம் காரணமாக, அனைவருடனும் எளிதில் ஒத்துப்போவார்கள். படைப்பாற்றல் கும்ப ராசிக்காரர்களுக்கு நிறைந்திருக்கும்.
மீனம்
கற்பனை உலகில் கொடி கட்டிப்பறக்கும் ராசிக்காரர்கள். நடக்காத ஒரு சந்தர்ப்பத்தை தாங்களாகவே கற்பனை செய்துகொண்டு அதற்கேற்ப தங்களின் முடிவுகளையும் அமைத்துக்கொள்வார்கள். அவர்களுக்குள் இருக்கும் தேவையற்ற அச்சத்தால், எந்த ஒரு பொறுப்பையும் ஏற்று வழிநடத்துவதற்கு அச்சப்படுவார்கள். மீன்களால் எப்படி சுமைகளை தாங்க முடியாதோ, அதைப்போலவே மீன ராசிக்கார ர்களாலும் சுமைகளை தாங்க முடியாது. ஒரு விஷயத்தில் முடிவெடுத்தால், அதிலும் இறுதிவரை நிற்காமல் பாதியிலேயே ஓடிவிடுவார்கள்.