கோகுலுக்கும், மீராவுக்கும் திருமணமாகி ஆறு மாதங்கள் தான் ஆகியிருந்தது. இருவரும் வங்கியில் பணிபுரிகிறார்கள். பணிமுடிந்து நேராக மருத்துவமனைக்கு வந்திருந்தனர்.
மீரா தான் தொடங்கினார். கடந்த பத்து நாட்களுக்கு முன்பு பீரியட்ஸ் வந்தது. அதற்குப் பிறகிலிருந்தே, உடலுறவு கொள்ளும் போதெல்லாம் பிறப்புறுப்பு பாதையில் வலியும் எரிச்சலும் அதிகமாக இருக்கிறது. வெள்ளைப்படுதலும் கடந்த 10 நாட்களாக எப்போதும் இருப்பதை விட அதிகமாக இருக்கிறது.
சில நேரங்களில் 'ஸ்மெல்' தாங்க முடியவில்லை. கடையிலிருந்து விளம்பரத்தில் வரும் ஒரு வாஷ் வாங்கி உபயோகித்தேன். ஆனால் எந்த பலனும் இல்லை. அவருக்கும் உடலுறவுக்கு பிறகு பிறப்புறுப்பில் எரிச்சல் ஏற்படுகிறது. சில சமயங்களில் எரிச்சல் சில மணி நேரம் வரை தொடர்கிறது.
இதனால் இருவருமே மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறோம். ஏதாவது பிரச்சினையா? என்று தெரியல? டாக்டர் !! ஆனா பயமா இருக்கு! . இது சரியாகுமா? இதுக்கு என்ன பண்றது டாக்டர்?
"வேறு ஏதாவது மாத்திரைகள் எடுக்கிறீர்களா? வேறு ஏதாவது பிரச்சினைகள் இருக்கிறதா? மருந்துகள் எதுவும் அலர்ஜி இருக்கிறதா?" என்று கேட்டேன்.
"வேறு எந்த பிரச்சனையும் இல்லை." என்றார் மீரா.
என் ஆலோசனை:
மீராவை பரிசோதித்தேன் அவருக்கு பிறப்பு பாதையில் தொற்று (இன்ஃபெக்ஷன்- infection) இருப்பதற்கான அறிகுறிகள் இருந்தன. வெள்ளைப்படுதல் அதிகமாக இருந்தது.
பிறப்பு பாதையில் உபயோகிக்கும் சிறு குமிழ் (vaginal pesseries) போன்ற மாத்திரைகளை மூன்று நாட்கள் பயன்படுத்தும்படி கூறினேன்.
மீராவுக்கும், அவர் கணவருக்கும் ஆயின்மென்ட் எழுதிக் கொடுத்தேன். இருவருமே பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறினேன்.
இருவருக்குமே சாப்பிடும் மாத்திரைகளைகளையும் கொடுத்தேன். மீராவிற்கு ஷூகர் மற்றும் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு சரியாக இருக்கிறதா? என்பதை பார்ப்பதற்கு மட்டும் ஒரு ரத்தப் பரிசோதனையை மேற்கொள்ளும்படி கூறினேன் ஒரு வாரம் கழித்து மீண்டும் சந்திப்பதாக கூறி அனுப்பி வைத்தேன்.
பிறப்பு பாதையில் தொற்று என்பது மிகவும் பொதுவான ஒரு பிரச்சனை. எந்த வயதிலும் வரலாம் என்றாலும் இனப்பெருக்க வயதில் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். கணவன் மனைவி இருவரில் ஒருவருக்கு உண்டாகக்கூடிய இந்த தொற்று மற்றவருக்கும் பரவலாம்.
இது பொதுவாக பூஞ்சைத் தொற்றாக அல்லது பூஞ்சையும் பாக்டீரியாவும் கலந்த தொற்றாக இருக்கலாம். எளிதில் குணப்படுத்த கூடியது மற்றும் நீண்ட கால பிரச்சனைகள் எதுவும் இதனால் வருவதற்கு வாய்ப்பு இல்லை.
ஒரு வாரம் சென்று இருவரும் பரிசோதனை முடிவுகளோடு வந்திருந்தனர். இருவர் முகமும் தெளிவாக இருந்தது
ரத்தத்தில் சர்க்கரை இல்லை. ஹீமோகுளோபின் அளவு மட்டும் சற்று குறைவாக இருந்தது. அதற்குரிய இரும்புச்சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ள கூறினேன்.
மீரா "மிக்க நன்றி! டாக்டர்! உங்களுக்கு. எவ்வளவு நிம்மதியாக இருக்கிறது என்று வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை. ஏதோ பெரிய பிரச்சனை இருக்கிறது என்று, உண்மையிலேயே பயந்து விட்டோம் . நன்றி! டாக்டர்! என்று கூறி அந்த இளம் தம்பதியர் விடை பெற்றனர். என் மனமும் நிறைந்தது.
மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மாவை தொடர்பு கொள்ள : doctorjsharma@gmail.com இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.