முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இந்திரா காந்தி ஒரு படையையே அனுப்பி அலசிய கோட்டை.. அப்படி அங்கே என்ன தான் இருக்கு?

இந்திரா காந்தி ஒரு படையையே அனுப்பி அலசிய கோட்டை.. அப்படி அங்கே என்ன தான் இருக்கு?

ஜெய்கர் கோட்டை

ஜெய்கர் கோட்டை

இந்த தண்ணீர் தொட்டிக்கு இருக்கும் மர்மம் என்னவென்றால் , ஒரு காலத்தில் இந்த கோட்டையை பயன்படுத்திய கச்வாஹா வம்சத்தினர் தங்கள் பொக்கிஷங்களை சேமிக்க இந்த தொட்டியின் கீழே அறைகள் கட்டி பயன்படுத்தியதாக புராணங்கள் கூறுகின்றன

  • Last Updated :
  • Rajasthan, India

தமிழகத்தில் குன்று இருக்கும் இடத்தில் எல்லாம்  குமரன் இருப்பான் என்று சொல்வார்கள். காரணம் ஒவ்வொரு குன்றிலும் முருகன் கோவில் ஒன்று இருக்கும். அதே ராஜஸ்தானை எடுத்துக்கொண்டால் குன்று இருக்கும் இடம் எல்லாம் கோட்டைகள் இருக்கும். கோட்டைகளின் நகரம் என்றே சொல்லலாம். அப்படி ஒரு கோட்டையை ஆராய இந்திரா காந்தி ஒரு படையே அனுப்பினார் என்றால் அதில் ஏதோ இருக்கிறது தானே?

கோட்டைகளை பிடிப்பதற்காகவே இங்கு பல போர்கள் அரங்கேறியுள்ளன. முக்கியமாக ராஜஸ்தானில் ஜெய்கர் கோட்டை தனக்குள்  திகில் மற்றும் துரோகத்தின் புதிரான பல  கதைகளைக் கொண்டுள்ளன. குறிப்பாக 1310 - 11 இல் டெல்லி சுல்தானான அலாவுதீன் கில்ஜி - கன்ஹாத் தியோ இடையே நடந்த ஜலோர் போர், 1544 இல் சமல் போர் , 1562 - 1583 இல் அக்பர் மற்றும் 1679 - 1707 இல் ஔரங்கசீப் மூலம் மார்வார் மீது நடத்தப்பட்ட இரண்டு புகழ்பெற்ற முகலாய படையெடுப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

ஜெய்கர் கோட்டை பற்றி…..

15 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்ட ஜெய்கர் கோட்டை ராஜஸ்தானின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது. 'வெற்றிக் கோட்டை' என்றும் அழைக்கப்படும் இந்தக் கோட்டையின் அமைப்பும் கட்டிட அமைப்பும்  இடைக்கால இந்திய வரலாற்றின் கண்ணாடியாக விளங்குகிறது. ராஜபுத்திரர்கள், மார்வார்கள் அதிகம் ஆட்சி செய்த இந்த பகுதி, அந்த காலத்தின் அரச கருவூலம் வைக்கப்பட்ட இடமாக இருந்துள்ளது.

இதையும் படிங்க :பறவைகள் தற்கொலை செய்துகொள்ள வரும் இந்திய கிராமம்..! விலகாத மர்மம்..

இன்று நாம் பார்க்கும் ஜெய்கர் கோட்டை கி.பி 1726 இல் இரண்டாம் சவான் ஜெய் சிங் என்பவரால் கட்டப்பட்டது. கோட்டை பெரிய சுவர்களால் சூழப்பட்டுள்ளது மற்றும் நிலத்தடி பாதைகளுடன் அமர் கோட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது அமர் கோட்டையைப் பாதுகாப்பதற்காக கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது . சுமார் 3 கிலோமீட்டர் தொலைவிற்கு இந்த கோட்டைசுவர்  மட்டும் இருக்குமாம். நகரத்தின் எந்த பகுதியில் இருந்து பார்த்தாலும் இந்த மதில் தெரியுமாம்.

ஜெய்கர் கோட்டையில் உலகின் மிகப்பெரிய ஜெய்வனா என்ற சக்கர பீரங்கி ஒன்று உள்ளது. இந்த பெரிய பீரங்கி கோட்டையிலேயே கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், அது ஒரு உண்மையான போரின் போது பயன்படுத்தப்படவில்லை.

பீரங்கியின் பின்னால் உள்ள தண்ணீர் தொட்டியும் பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ளது. இன்றைய தண்ணீர் தொட்டியைப் போல காணப்படும் இது பழைய முறை மழைநீர் சேகரிப்பு வசதியைக் கொண்டுள்ளது மற்றும் சுமார் 6 மில்லியன் கேலன் தண்ணீரைச் சேமிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இதில் தான் விஷயமே அடங்கியுள்ளது.

இந்த தண்ணீர் தொட்டிக்குள்  இருக்கும் மர்மம் என்னவென்றால் , ஒரு காலத்தில் இந்த கோட்டையை பயன்படுத்திய கச்வாஹா வம்சத்தினர் தங்கள் பொக்கிஷங்களை சேமிக்க இந்த தொட்டியின் கீழே அறைகள் கட்டி பயன்படுத்தியதாக புராணங்கள் கூறுகின்றன. மேலும் மஹாராஜா மான் சிங், தான் கொள்ளையடித்த பொருட்கள் அனைத்தையும்  இங்கே  மறைத்து வைத்திருப்பதாக நம்பப்படுகிறது. அதை நோக்கி தான் எல்லா படைகளும் வந்துள்ளது.

இதையும் படிங்க: ராஜஸ்தானில் அமைத்துள்ள கம்பீரமான மலைக்கோட்டைகளின் அழகு இருக்கே...!

1977ஆம் ஆண்டு எமர்ஜென்சி காலத்தில், அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் இருக்கும்போது இந்த புதையல்கள் பற்றிய செய்திகள் அதிக அளவில் பேசப்பட்டன. இதனால் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கோட்டையின் தண்ணீர் தொட்டிகள் மற்றும் வளாகங்களில்  புதையல்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அனைத்து கட்டிடங்களிலும் தேடுதல் பணியை தொடங்கினார்.

இந்த நேரத்தில், ஜெய்ப்பூர் சமஸ்தானத்தின் வாரிசு மற்றும் அன்றைய மக்களவை உறுப்பினராக இருந்த காயத்ரி தேவி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நேரத்தில் இந்திரா காந்தி ஜெய்ப்பூர் அரச கோட்டையில் உள்ள புதையலைத் தேடுவதற்கு படையை அனுப்பினார். ஆனால் எந்த புதையலும்  கைப்பற்றப்பட்டதாக தகவல் இல்லை. அங்கே உண்மையில் புதையல் இருந்ததா, இருக்கிறதா என்ற சர்ச்சை இன்றும் நிலவி வருகிறது.

First published:

Tags: Rajastan, Travel, Travel Guide