இந்தியாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு விமானத்தின் மூலம் பயணித்து சுற்றுலா செல்வது தான் பொதுவான நடைமுறை. ஆனால், ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு பயணம் செய்வதையே சுற்றுலாவாக கொண்டாடும் போக்கு தற்போது அதிகரித்து வருகிறது. நடிகர் அஜித், ஜக்கி வாசுதேவ் போன்றோர், இரு சக்கர வாகனத்தை எடுத்து கொண்டு, கண்டம் விட்டு கண்டம் பயணிக்கின்றனர். செலவு எவ்வளவு அதிகமோ, அதே போல், இந்த பயணத்திற்கு தயாராகும் வேலைகளும் அதிகம்.
இது போல், ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு, ஒருவர் தன்னுடைய சொந்த வாகனத்தில் பயணிக்க வேண்டும் என்றால் அதற்கு பல அனுமதிகளை பெற வேண்டும். ஒரு தனி மனிதனுக்கு எப்படி பாஸ்போர்ட் இருக்கிறதோ, அதே போல், அந்த வாகனத்திற்கும் ஒரு பாஸ்போர்ட் இருக்கிறது. அதன் பெயர் CARNET DE PASSAGE. இந்தியாவை பொறுத்தவரை, Federation of Indian Automobile Associations என்ற அமைப்பு தான் இந்த அனுமதியை தர முடியும். இந்த அனுமதியை பெற சில கட்டுப்பாடுகளும் உண்டு.
அந்த குறிப்பிட்ட வாகனத்தை ஓட்டுபவரின் பாஸ்போர்ட்டில், அவர் கடந்து செல்லக்கூடிய நாடுகளின் விசாவை அச்சடிக்க, 20 காலி பக்கங்கள் தேவை என்பதில் தொடங்கி, அவர் எந்த நாடுகளுக்கு செல்கிறாரோ அங்கு செல்லுபடியாகும் வகையில், சர்வதேச ஓட்டுநர் உரிமம், காப்பீடு போன்றவை கண்டிப்பாக இருக்க வேண்டும். இந்த CARNET DE PASSAGEஐ, TRIP TICKET என்று அழைக்கிறார்கள். இதனை பெற வேண்டும் என்றால், அந்த குறிப்பிட்ட வாகனத்தின் சந்தை மதிப்பு என்னவோ, அது போல் 200 சதவித தொகையை டெபாசிட்டாக கொடுக்க வேண்டும். இந்த டெபாசிட், வங்கி வரைவோலையாகவோ, காசோலையாகவோ அல்லது வங்கி உத்திரவாதமாகவோ வழங்கலாம்.
200 சதவித தொகையை முன்பணமாக வாங்குவதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. இந்த TRIP TICKETன் கால அளவு ஒரு வருடம் என்று கொடுக்கப்பட்டு இருந்தால், அந்த ஒரு ஆண்டுக்குள், மீண்டும் அந்த வாகனம் இந்தியாவிற்குள் வந்து விட வேண்டும். இல்லை என்றால், அந்த வாகனத்தை, இந்தியாவில் இருந்து ஒரு நாடு இறக்குமதி செய்து கொண்டதாக கணக்கில் கொள்ளப்படும்.
இதையும் படிங்க: Joint Pain : மூட்டு வலியை போக்க உதவும் 5 இயற்கையான வழிமுறைகள்!
அப்படி இறக்குமதி செய்யப்பட்டதாக கணக்கில் கொள்ளப்படும் பட்சத்தில், அதற்கான இறக்குமதி வரியாக ட்ரிப் டிக்கெட் எடுத்தவர் செலுத்திய டெப்பாசிட் தொகையை பயன்படுத்திக் கொள்வார்கள். அந்த வாகனம் கடைசியாக எந்த நாட்டில் பயணித்ததோ, அந்த குறிப்பிட்ட நாட்டிற்கு அந்த வரி தொகையை செலுத்திவிடுவார்கள். இந்த TRIP TICKETஐ இந்தியாவில் பெறாமல் சென்றுவிட்டால், ஒவ்வொரு நாட்டின் எல்லையிலும், ஒரு குறிப்பிட்ட தொகையை முன்பணமாக செலுத்திவிட்டு செல்ல வேண்டும். அந்த பணத்தை மீண்டும் பெறுவதற்கு நீண்ட காலம் ஆகும். இந்த சிக்கலை தவிர்க்க தான், எந்த நாட்டில் இருந்து செல்கிறோமோ, அந்த நாட்டிலேயே ஒரு குறிப்பிட்ட தொகையை முன்பணமாக செலுத்திவிட்டு, சுற்றுலாவை முடித்த பின்னர், வாகனத்தை காண்பித்து, செலுத்திய முன்பணத்தை பெற்று கொள்ளலாம்.
மேலும் படிக்க: Walking செல்லும்போது மூச்சு வாங்குகிறதா? - எது இயல்பானது, எது அபாயமானது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
இந்தியாவில் இருந்து லண்டனுக்கு சாலை மார்க்கமாக செல்ல வேண்டும் என்றால், சுமார் 18 நாடுகளை கடந்து, 20 ஆயிரம் கிலோமீட்டர் பயணிக்க வேண்டும். சொந்த வாகனத்தில் செல்லும் போது ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டாம் என்று நினைப்பவர்களுக்கு, இந்தியாவில் இருந்து லண்டன் வரை மற்றும் இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வரை என பேருந்தில் அழைத்து செல்லும் நிறுவனங்களும் உள்ளன. இந்தியாவில் இருந்து லண்டனுக்கு பேருந்தில் செல்ல, ஒரு ஆளுக்கான டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா? வரிகளோடு சேர்த்து 23 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய். இந்தியாவில் இருந்து லண்டன் வரை செல்லும் பயணத்திற்கு மட்டும் தான் இந்த தொகை... லண்டனில் இருந்து மீண்டும் இந்தியா வர, தனியாக, சொந்த செலவில் நாம் விமான டிக்கெட் பெற்று கொள்ள வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.