பொதுவாக பூங்கா என்றால் மரம் செடி, கொடி, நீரூற்றுகள், குழந்தைகள் விளையாடும் திடல் என்று தானே பார்த்திருப்போம். இவற்றில் இருந்து மாறுபட்ட அதே சமயம், சுவாரசியமான ஒரு பூங்கா பற்றி தான் இன்று உங்களுக்கு சொல்ல இருக்கிறோம். இந்திய புவியியல் ஆய்வுத்துறையால் கண்காணிக்கப்படும் கல்மரப்பூங்கா தான் அது.
தமிழ்நாட்டில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தில் மயிலம் அருகே உள்ள திருவக்கரையில் தான் தேசிய கல் மர பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் தமிழ்நாட்டில் உள்ள தொல்மர எச்சங்கள், தொல் இலை எச்சங்கள் என்று பலவற்றை சேகரித்து இந்த பூங்காவில் காட்சிப்படுத்தியுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவக்கரை, நெய்வேலி, அரியலூர் பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட மரங்கள் இங்கு காட்சிக்கு உள்ளன.
கல்மரம் என்றால் என்ன? அது என்ன புது வகை மரமா என்று தானே யோசிக்கிறீர்கள். அதற்கான பொருளை சொல்கிறோம். கல்மரம் என்பதற்கு ஆங்கிலத்தில் FOSSIL WOOD என்று பெயர்.எப்படி பழங்கால கட்டிடங்கள் நிலத்தில் புதைந்துவிட்டால் அதை புதை படிமம் என்று சொல்கிறோமோ, அதே போல பழங்காலத்தில் இருந்த மரங்கள் நிலத்தில் புதைந்து மக்காமல், கல்லாக மாறிவிட்டால் அது கல்மரம் என்று அழைக்கப்படுகிறது.
இந்தியாவில் கல் மரங்கள் அதிகமாகக் காணப்படுவது நம் தமிழகத்தில் தான். குறிப்பாக தமிழக - பாண்டிச்சேரி எல்லையான திருவக்கரை எனும் கிராமத்தில் முழுவதும் கல்லாக மாறிப்போன பல அரிய மரங்கள் ஏராளமாக கிடைத்துள்ளன. முதன்முதலில் 1781 இல் எம்.சொன்னோர்ட் எனும் ஐரோப்பிய அறிஞர் தான் இந்தப் பகுதியில் கல்மரங்கள் உள்ளதை உலகுக்கு அறிவித்தார்.
அதன் பின்னர் 1957 இல் இந்த மரங்களை எல்லாம் பாதுகாக்கவும் காட்சிப்படுத்தவும் இந்திய புவியியல் ஆய்வுத் துறை (GEOLOGICAL SURVEY OF INDIA) இந்தப் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் எடுத்தது. அதுமட்டும் அல்லாமல் கல்மரப் பூங்கா ஒன்றை அமைத்தது. சுற்றி உள்ள பகுதியில் இருந்து எடுத்து வரப்பட்ட அனைத்து கல்மரங்களையும் இயற்கையான சூழலிலேயே காட்சிப்படுத்தியுள்ளனர். பெரிய அளவிலானதை படுக்கைவாகிலும், சிறிய அளவிலானதை செங்குத்தாக நிறுத்திவைக்கப் பட்டுள்ளன.
அதே போல் இந்த பூங்காவில் சுமார் 247 ஏக்கர் பரப்பளவில் மணற்கற்களால் ஆன ஒரு மேட்டுப்பகுதி உள்ளது. அதில் சுமார் 200 க்கும் அதிகமான கல்மரங்கள் உள்ளன. சில மரங்கள் 30 மீ. நீளமும் 1.5 மீ குறுக்களவும் கொண்டவை. ஆனால் எந்த மரத்திற்கும் வேரோ, கிளைகளோ இல்லை. எல்லாம் படுக்கை வாக்கில் மண்ணில் புதைந்தபடி இருக்கிறது. அதனால் இவை எல்லாம் வேறொரு பகுதியில் இருந்து ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு புதைந்திருக்க வாய்ப்புண்டு என்று புவியியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்தப் பகுதி இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன் பெரும் நீர்நிலையாய் இருந்திருக்கலாம். அதையொட்டி இருந்த நிலப் பகுதிகளில் பெருங்காடுகள் இருந்து காலநிலை மாற்றத்தால் பெரும் வெள்ளம் ஏற்பட்டிருக்கலாம். அதன் விளைவாக இந்த பாறைகள் அடித்துச்செல்லப்பட்டு மண்ணுள் புதைந்திருக்கலாம். மரங்களின் மீது படிந்த மண் மரங்களில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி அந்த மரங்களை கல்லாக மாற்றி இருக்கலாம் என்ற யூகங்களை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த மாற்றத்திற்கு "கல்லாகச்சமைதல்" என்ற பெயரையும் குறிப்பிடுகின்றனர்.
வாழும் மரங்களில் காணப்படும் பட்டை போன்ற அமைப்புகள், வட்ட வளையங்கள் (Annular Rings), கணுக்கள் (Nodes) போன்ற அனைத்தும் இந்தக் கல்மரங்களில் அழகாகத் தெரிகின்றன. புன்னைக் கட்டாஞ்சி, ஆமணக்கு வகை மரங்களும், புளியமரக் குடும்பத்தை சேர்ந்த மரங்களும் இங்கே காணப்படுகின்றன.
பூங்கா செல்லும் வழி:
பழங்காலத்தை சேர்ந்த அறிய கல்மரங்கள் நிறைந்த இந்த தேசிய பூங்கா, சென்னையிலிருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் (தே.நெ.45), திண்டிவனத்திற்கு தெற்கே பத்து கி.மீ. தொலைவில், கூட்டேரிப்பட்டு எனும் ஊர் உள்ளது.
இதையும் பாருங்க: இந்தியாவில் உள்ள அரிதான விலங்குகளை பற்றி தெரியுமா..? இங்கு சென்றால் மட்டும்தான் காண முடியும்..!
அங்கிருந்து மைலம் வழியே புதுச்சேரி செல்லும் சாலையின் தெற்கே சென்றால் திருவக்கரையை அடைந்துவிடலாம். அங்கே கல்மரப்பூங்கா என்று விசாரித்தால் வழி சொல்வார்கள். காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை கல்மரப் பூங்கா திறந்திருக்கும்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.