கடந்த இரண்டு ஆண்டு காலமாக கொரோனா பெருந்தொற்று காரணமாக வீட்டில் நாம் எல்லோரும் முடங்கி இருக்க வேண்டிய சூழல் இருந்தது. தற்போது தொற்று பரவல் மிகவும் குறைந்துள்ளதால் பல வித சுற்றுலா சார்ந்த திட்டங்களை மக்கள் போட தொடங்கி உள்ளனர். அதிலும் குறிப்பாக வெயில் காலமாக இருப்பதால் முன்கூட்டியே பல இடங்களுக்கு சென்று வர வேண்டும் என்று திட்டம் போட்டு வருகின்றனர். அதன்படி, இந்தியாவில் உள்ள 93% மக்கள் இந்த 2022 ஆண்டில் சுற்றுலா செல்வதற்கு திட்டமிடுவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதற்கு முக்கிய காரணமாக இருப்பது கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று தான் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும், குளோபல் டிராவல் ட்ரெண்ட்ஸ் என்கிற நிறுவனம் எடுத்த சர்வேயில் இந்தியப் பயணிகள் புதிய இயல்பைப் பின்பற்ற விரும்புவதாகக் தெரிய வந்துள்ளது. ஒட்டுமொத்தமாக, இந்தியர்கள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக பயணம் மேற்கொள்வதாக இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால் தங்களுக்குள் உள்ள மன அழுத்தத்தை குறைக்கலாம் என்று நினைக்கிறார்கள்.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, கனடா, மெக்சிகோ, ஜப்பான் மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்த 3,000 பயணிகளின் அடிப்படையில் இந்த ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தியர்கள் பயணம் செய்வதற்கான சில முக்கிய காரணமாக சிலவற்றை பகிர்ந்து கொண்டனர். அதில் 48 சதவீத பேர் புதிய அனுபவங்களைக் கண்டறிவதற்காகவும், 46 சதவீதம் பேர் ஓய்வெடுப்பதற்காகவும், 45 சதவீதம் பேர் புதிய இடங்களை கண்டு ரசிப்பதற்காகவும் என்று கூறியுள்ளனர்.
மேலும் இந்த சர்வேயில், சுமார் 96 சதவீதம் பேர் உள்ளூர் பொருளாதாரத்தை ஆதரிப்பதற்காக உள்ளூர் வணிகங்களில் சாப்பிடவும் ஷாப்பிங் செய்யவும் விரும்புவதாக ஒப்புக்கொண்டனர். இந்த சர்வே குறித்து இந்தியாவின் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கியின் தலைமை அதிகாரியான மனோஜ் அட்லாகா சிலவற்றை கூறினார். "கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியப் பயணிகளிடையே பயண உணர்வு உற்சாகமாக உள்ளது, தங்களின் அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிடுவதே இதற்கான முதன்மையான காரணமாகஉள்ளது " என்று அந்த அறிக்கையில் தெரிவித்தார்.
Summer Holiday Trip : டெல்லியில் தவறாமல் பார்க்க வேண்டிய சிறந்த இடங்கள்..!
சுமார் 69 சதவீதம் பேர் இந்த ஆண்டு தங்கள் கனவு இலக்கை நோக்கி பயணிக்க விரும்புவதாக இந்த ஆய்வில் தெரிவித்துள்ளனர். அதே போன்று தனியாக பயணம் செய்ய தயாராக இருப்பதாக பலர் பகிர்ந்து கொண்டனர். இது அவர்களுக்குள் சிறந்த பயண அனுபவத்தை ஏற்படுத்தும் என்று அவர்கள் நம்புகின்றனர். ஏறக்குறைய 92 சதவீதம் பேர் 2022 ஆம் ஆண்டிற்கான பயணத்தை ரத்து செய்தாலும் அல்லது மாற்றியமைத்தாலும் கூட முன்பதிவு செய்ய தயாராக இருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளனர். 2 ஆண்டு கால கொரோனா பெருந்தொற்று மனிதர்களிடம் பல வகையில் மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளதை இந்த ஆய்வின் முடிவுகளில் இருந்து தெரிகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.