வெளியே செல்லும் முன் பூட்டிய கதவுகளை ஒருமுறைக்கு நாலுமுறை இழுத்து பார்த்தால் கூட வண்டியில் போகும்போது சரியாக பூட்டினோமா என்று சந்தேகம் வரும். ஆனால் இந்தியாவில் இருக்கும் ஒரு கிராமத்தில் எந்த கட்டிடத்திற்கும் கதவுகளோ பூட்டோ கிடையாதாம்! ஆச்சரியமாக இருக்கிறது தானே..
மகாராஷ்டிராவில் உள்ள ஷனி ஷிங்னாபூர் என்று அழைக்கப்படும் ஒரு கிராமத்தில் தான் இப்படி இருக்கிறது. இந்த கிராமத்தில் உள்ள வீடு, அலுவலகம், கோவில், மண்டபம், ஏன் வங்கிகளுக்கு கூட கதவுகள் கிடையாதாம். கழிவறைக்கும் கதவுகள் என்று வைத்திருப்பதில்லை. அட்டை அல்லது திரைகள் போட்டு தான் மறைத்திருப்பார்களாம்.
இப்படி ஒரு கிராமம் எப்படி இயங்க முடியும்? திருட்டு பயம் கிடையாதா? எதாவது கொள்ளை போனால் என்ன ஆவது ?என்று உங்கள் எண்ண ஓட்டங்கள் ஒலிம்பிக் வேகத்தில் ஓடுவது புரிகிறது. ஆனால் இந்த கிராமத்தில் அப்படி ஒரு சம்பவம் நடப்பதே இல்லை. இங்கு திருட்டு பயமே இன்று வரை இல்லை.
நாம் எல்லாவற்றையும் பூட்டி வைத்து விட்டு போகும்போது கடவுள் மீது பாரத்தை போட்டு விட்டு போகிறேன் என்று சொல்வோம். ஆனால் ஷனி ஷிங்னாபூர் மக்கள் எப்போதும் அதை கடவுள் கைகளில் விட்டுவிட்டு நிம்மதியாக வாழ்கிறார்கள். நகை, பணம் எதையும் பத்திரப்படுத்தும் பதற்றம் இவர்களிடம் இருப்பதில்லை. அதற்கு ஒரு பழம்கதையை இவர்கள் சுட்டுகின்றனர்.
300 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ஊரில் பனஸ்னலா நதி பெருக்கெடுத்து வெள்ளமென ஓடியுள்ளது. அந்த சமயத்தில் பெரிய கருப்பான கல் ஒன்று வெளிப்பட்டுள்ளது. அந்த பக்கமாக சென்ற ஒருவர் கல்லை குச்சியை வைத்து அழுத்தியதும் சிவப்பாக ரத்தம் போல் வடிந்துள்ளது. இதை கண்ட மக்கள் ஆச்சரியம் கலந்த பயம் அடைந்துள்ளனர்.
அன்றைய இரவே ஊர்த்தலைவர் கனவில் சனி பகவான் தோன்றி அந்த கருங்கல் தான் என் சிலை. அதை வைத்து வழிபடுங்கள். நான் உங்கள் ஊரை காப்பாற்றுகிறேன். ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை. என்னை கூரை வைத்த கோவிலில் வைக்க கூடாது. கதவுகள் வைத்து என்னை அடைக்க கூடாது. விசாலமாக திறந்து வையுங்கள். உங்களின் பாதுகாப்பை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
அன்றில் இருந்து ஊரின் நடுவே அந்த சனிபகவான் சிலைக்கு பூஜைகள் நடத்தப்படுகிறது. அதேபோல அந்த கிராமத்து மக்களும் தங்கள் வீடுகளில் இருந்த கதவுகளை எடுத்துவிட்டனர். திருட்டு நிகழ்வுகளும் ஏதும் நடைபெறவில்லை. அதனால் கதவுகள் இல்லாத பழக்கம் வழிவழியாக இன்று வரை தொடர்ந்து வருகிறது.
ஷனி ஷிங்னாபூரில் யுனைடெட் கமர்ஷியல் வங்கி 2011 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் "பூட்டு இல்லாத" கிளையைத் திறந்தது. நம் ஊர்களில் இருப்பது போல கிரில் கேட்டுகள் ஏதுமின்றி, வெளிப்படைத்தன்மையின் உணர்வில் ஒரு கண்ணாடி நுழைவாயிலையும், கிராம மக்களின் நம்பிக்கைகளை மதித்து அதே நேரம் பாதுகாப்பிற்காக ஒரு கண்ணுக்குத் தெரியாத ரிமோட் கண்ட்ரோல் மின்காந்த பூட்டையும் நிறுவியது.
அதன் பின்னர் 2015 இல் தான் இங்கு முதல் காவல் நிலையமே இங்கு நிறுவப்பட்டது. ஆனால் இன்று வரை இந்த காவல் நிலையத்தில் ஒரு குற்ற நிகழ்வு கூட பதிவு செய்யப்படவில்லை. சமீபத்தில் சில திருட்டு நிகழ்வுகள் நடைபெற்றதாக கூறினாலும் இந்த கிராமத்து மக்கள் அதை ஏற்கவில்லை. இன்றும் கதவுகள் இல்லாமல் தான் இந்த கிராமம் இயங்கி வருகிறது. சனிபகவான் இவற்கை காப்பதாக நம்புகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Maharastra, Travel, Travel Guide, Village