இந்தியாவின் புவியியல் அமைப்பில் ஏராளமான வனவிலங்குகள் மற்றும் இயற்கை அழகுகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான சுற்றுலாப் பயணிகள் காட்டு விலங்குகளைப் பார்க்கவும் ரசிக்கவும் உயிரியல் பூங்காக்களுக்கு வருகிறார்கள்.
மனிதனால் உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய உயிரியல் பூங்காக்கள் சில, இந்தியா முழுவதும் காணப்படுகின்றன. நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பரவியுள்ள இந்த இடங்கள், விலங்குகளின் மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பான வாழ்விற்கு உதவுகின்றன. அழிவுக்கு அருகில் உள்ள உயிரினங்களின் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது. குழந்தைகளுக்கு விலங்குகளை அறிமுகம் செய்யவும் அதை பாதுகாக்க கற்றுத்தரவும் உதவும்.
நீங்கள் பார்க்க வேண்டிய இந்தியாவின் மிகவும் பிரபலமான ஐந்து உயிரியல் பூங்காக்களின் பட்டியல் இங்கே.
ஆப்பிரிக்காவில் இருந்து வந்துள்ள சிவிங்கிப்புலிக்கும் நம் ஊர் சிறுத்தைக்கும் உள்ள வேறுபாடு தெரியுமா?
1. இந்திரா காந்தி உயிரியல் பூங்கா
ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள இது மிகப்பெரிய உயிரியல் பூங்காக்களில் ஒன்றாகும். அழகிய கிழக்கு தொடர்ச்சி மலைகள் இந்த மிருகக்காட்சிசாலையை மூன்று பக்கங்களிலும் சூழ்ந்துள்ளன. கம்பலகொண்டா வனச்சரகம் அதைச் சுற்றி உள்ளது. 600 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை ஆக்கிரமித்துள்ள இது பல்வேறு விலங்குகள் மற்றும் பறவை இனங்களின் உறைவிடமாக உள்ளது. குழந்தைகள் மிருகக்காட்சிசாலையில் முழு நாளையும் மகிழ்ச்சியாக செலவிடுகிறார்கள்.
நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.20, குழந்தைகளுக்கு ரூ.10 தான். திங்கள் தவிர்த்து மற்ற நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இருக்கும்.
2. நந்தன்கானன் விலங்கியல் பூங்கா
ஒடிசாவில் 1960 இல் நிறுவப்பட்டாலும், இந்த மிருகக்காட்சிசாலை மற்றும் தாவரவியல் பூங்கா 1979 வரை பார்வையாளர்களை அனுமதிக்கவில்லை. இது 2009 ஆம் ஆண்டில் உலக உயிரியல் பூங்காக்கள் மற்றும் மீன்வளங்களின் கூட்டமைப்பில் இணைந்தது, இந்தியாவில் அவ்வாறு செய்த முதல் உயிரியல் பூங்காவாக மாறியது (WAZA). இங்கு, தாவரவியல் பூங்காவின் ஒரு பகுதி சரணாலயமாக நியமிக்கப்பட்டுள்ளது. வெள்ளைப்புலி சஃபாரி இடம்பெறும் இந்தியாவின் முதல் உயிரியல் பூங்கா நந்தன்கனன் ஆகும், இது ஆங்கிலத்தில் "த கார்டன் ஆஃப் ஹெவன்" என்றும் அழைக்கப்படுகிறது.
ஞாயிறு தோறும் காலை 6.30 முதல் 9.30 வரை பேர்ட் வாக் எனும் பறவைகளை நோக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. திங்கள் தவிர்த்து மற்ற நாட்களில் பூங்கா செயல்படும். காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். பெரியவர்களுக்கு 50 ரூபாயும், குழந்தைகளுக்கு 10 ரூபாயும் கட்டணமாகும்.
3. ராஜீவ் காந்தி உயிரியல் பூங்கா
புனேயின் மிகவும் விரும்பப்படும் சுற்றுலாத் தலங்களில் இதுவும் ஒன்று. 1953 இல் உருவாக்கப்பட்ட இந்த பூங்கா பல்வேறு ஊர்வன, பாலூட்டிகளின் தாயகமாக உள்ளது. சுமார் 22 வகை பாம்புகள் இங்கு உள்ளன. நாக பஞ்சமி அன்று பாம்புகளை கொல்லக்கூடாது என்று விழிப்புணர்வு நிகழ்வுகளும் நடை பெறுகிறது. இங்குள்ள விலங்குகளை தத்தெடுத்து பராமரிக்கும் வசதியும் உள்ளது.
புதன் தவிர்த்து மற்ற நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5.30 வரை திறந்திருக்கும். கட்டணம், குழந்தைகளுக்கு ரூ.10, பெரியவர்களுக்கு ரூ.40 ஆகும்.
4. மைசூர் உயிரியல் பூங்கா
முதலில்,ஸ்ரீ சாமராஜேந்திரா விலங்கியல் பூங்கா என்று அழைக்கப்பட்ட இது 18 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட இந்தியாவின் சிறந்த மற்றும் பழமையான உயிரியல் பூங்கா ஆகும். மிருகக்காட்சிசாலையின் உள்ளே அழகாகவும் வசீகரமாகவும் தோன்றும் தனித்துவமான தோட்டம் அமைந்துள்ளது.
செவ்வாய் தவிர்த்து மற்ற நாட்களில் காலை 8.30 முதல் மாலை 5 வரை திறந்திருக்கும். பெரியவர்களளுக்கு ரூ.100 சிறியவர்களுக்கு ரூ 50 கட்டணம் ஆகும்.
5. அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, சென்னை
வண்டலூர் உயிரியல் பூங்கா என்றும் அழைக்கப்படும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2,553 வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் உள்ளன. இந்த மிருகக்காட்சிசாலையின் 160 அடைப்புகளில் 46 அழிந்து வரும் உயிரினங்கள் உட்பட 1,500 காட்டு இனங்கள் உள்ளன. இந்த பூங்கா தமிழ்நாட்டின் விலங்கினங்களின் களஞ்சியமாக இருக்கிறது.
முதுமலை தேசிய பூங்காவிற்கு அடுத்தபடியாக மாநிலத்தில் உள்ள இரண்டாவது வனவிலங்கு சரணாலயம் இதுவாகும். உயிரியல் பூங்காவில் எண்ணற்ற வகை பாலூட்டிகள், மீன்கள், நீர்வீழ்ச்சிகள், பூச்சிகள் போன்றவை உள்ளன.செவ்வாய் தவிர்த்து மற்ற நாட்களில் காலை 9 முதல் மாலை 5 வரை திறந்திருக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Travel, Vandaloor zoo