முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே திறக்கும் கர்நாடகாவின் கோவில் பற்றி கேட்டிருக்கிறீர்களா?

வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே திறக்கும் கர்நாடகாவின் கோவில் பற்றி கேட்டிருக்கிறீர்களா?

ஹசனாம்பா கோவில்

ஹசனாம்பா கோவில்

கன்னட நாட்காட்டியின் அஸ்வீஜா மாதத்தின் முதல் வியாழன் அன்று ஹாசனம்பா ஜாத்ரா மஹோத்ஸவம்  தொடங்குகிறது.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Karnataka |

இந்தியாவில் கோவில்களுக்கு பஞ்சமே கிடையாது. ஊர் தோறும் காவல் தெய்வங்கள், முன்னோர்கள், புராண தெய்வங்கள், என்று அனைவருக்கும் கோவில்கள் எழுப்பப்பட்டுள்ளன. அதில் ஒரு சில கோவிலின் பழக்க வழக்கங்களும் புராணங்களும் அந்த கோவிலை தனித்துவமானதாகக்  காட்டும். அது போன்ற ஒரு சுவாரசிய கோவிலை பற்றி தான் இதில் பார்க்க இருக்கிறோம்.

பொதுவாக கோவில் என்றால் காலையில் திறந்து மாலையில் மூடிவிடுவார்கள். ஆனால், கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு கோவிலை மட்டும் ஆண்டுக்கு ஒரு முறை தான் திறக்கிறார்கள். அதுவும் 15 நாட்களுக்கு மட்டுமே. அதன் பின்னர் ஆண்டு முழுவதும் மூடியே கிடக்கிறது. அதன் பின்னணி கதையை பார்ப்போமா?

கர்நாடகாவில் உள்ள ஹாசன் மாவட்டத்தில் ஹசனம்பா கோயில் உள்ளது. ஆண்டு முழுவதும் மூடிக்கிடக்கும் இந்த கோவிலை தீபாவளி சமயத்தில் மட்டும் திறக்கின்றனர். அம்மன்களுக்கு அர்பணிக்கப்படும் நவராத்ரி சமயத்தில் இந்த கோவிலில் பூஜைகள் நடத்தப்படுகிறது.  கன்னட நாட்காட்டியின் அஸ்வீஜா மாதத்தின் முதல் வியாழன் அன்று ஹாசனம்பா ஜாத்ரா மஹோத்ஸவம்  தொடங்குகிறது.

தினமும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். அதன் பின்னர் ஒரு வருடத்திற்கு மூடப்படுகிறது. மூடும் முன்னர் அம்மன்களுக்கு இரண்டு மூட்டை அரிசி, பூக்கள், ஏற்றி வைக்கப்பட்ட ஒரு பெரிய நெய்தீபம்  மற்றும் தண்ணீர் ஆகியவை வைக்கப்படுகின்றன. அந்த நெய் தீபம் அடுத்த ஆண்டு கோவில் திறக்கும் வரை எரிவதாக நம்புகின்றனர்.

புராணங்களின்படி, சொர்க்க லோகத்தில் இருந்து பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி மற்றும் சாமுண்டி ஆகிய  ஏழு மாத்ருக்களும்  தென்னிந்தியாவிற்கு பவனி வந்துள்ளனர். அப்போது ஹாசனின் அழகைக் கண்டு அவர்கள் அதைத் தங்கள் வீடாக மாற்ற முடிவு செய்தனர். அதன் அடிப்படையில்  மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி ஆகியோர் கோவிலுக்குள் உள்ள மூன்று எறும்புப் புற்றில் வசிக்க முடிவு செய்துள்ளனர்.

கெஞ்சம்மாவின் ஹோசகோட்டில் உள்ள இடத்தில் பிராமியும் , இந்திராணி, வாராஹி, சாமுண்டி ஆகியோர் தேவிகெரே ஹோண்டாவில் உள்ள மூன்று கிணறுகளையும் தேர்வு செய்தனர். அதன் பின்னர் ஹொய்சாளர்கள் ஆட்சியின் போது சிரித்த அழகான முகத்துடன் ஒரு தேவியின் சிலை கண்டுபிடிக்கப்பட்டு கோவிலில் நிறுவப்பட்டது. கன்னடத்தில் சிரித்த முகம் என்று குறிக்கும் ஹாசனா என்ற பெயரின் அடிப்படையில் ஹாசனில் அமைந்துள்ள   தெய்வம் ஹாசனாம்பா என்று அழைக்கப்படுகிறது.

பதிவுகளின்படி இந்த கோவில் 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது, ஆனால் எப்படி, யார் கட்டியது என்பது  தெரியவில்லை. அதேபோல இந்த கோவில் திறக்கும் 1 வாரத்திற்குள் மக்கள் அந்த இடத்திற்குச் சென்று கடவுளின் ஆசீர்வாதத்தைப் பெற முடிந்தால் தங்களை அதிர்ஷ்டசாலி என்று கருதுகின்றனர்.

மற்றொரு நாட்டுப்புறக் கதையின்படி மூடி இருக்கும் இந்த கோவிலில் உள்ள நகைகளைத் திருட முயன்ற நான்கு கொள்ளையர்கள் கோவிலில் கற்களாக உறைந்துவிட்டதாக கூறுகிறது. கல்லப்பன் குடியின் அருகில் உள்ள சன்னதியில்இந்த சிலைகள் உள்ளதாக ஊர் மக்கள் கூறுகின்றனர்.

81 அடி உயரமுள்ள நுழைவு கோபுரத்துடன் கூடிய கோயில் வளாகத்தில், ஒரு இடத்தில் 101 லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மேலும் சித்தேஸ்வரரின் சன்னதியும் உள்ளது. கருவறையில் சிவனிடமிருந்து பசுபதாஸ்திரம் பெறும் அர்ஜுனனின் உருவங்கள் மற்றும் சில விலங்குகளின் உருவங்கள் கொண்ட பாறை உள்ளது.

இதையும் படிங்க: கலை நிகழ்ச்சிகள்... உணவு சந்தை.. தாஜ்மகாலில் களைகட்டும் 10 நாள் திருவிழா...!

கர்நாடகா பக்கம் அக்டோபர் சமயத்தில் செல்ல வாய்ப்பிருந்தால் இந்த கோவிலை மறக்காமல் பார்த்து வாருங்கள். வருடம் ஒருமுறை திறக்கிறார்கள் என்றால் அந்த நாட்கள் நிச்சயம் சிறப்பான கொண்டாட்டம் இருக்கும் தானே?!

First published:

Tags: Karnataka, Travel