இந்த சிறிய கடையில் விற்கும் தேநீர் 1000 ரூபாயா? அப்படி என்ன ஸ்பெஷல்?

இந்த சிறிய கடையில் விற்கும் தேநீர் 1000 ரூபாயா? அப்படி என்ன ஸ்பெஷல்?

டீ

இந்த சிறிய ஸ்டாலில் 100-க்கும் மேற்பட்ட விதவிதமான வகைகளில் தேநீர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உலகெங்கிலும் விற்கப்படும் அனைத்து வகையான டீக்களும் இங்கு கிடைக்கின்றன.

  • Share this:
சிலருக்கு எந்தளவுக்கு காபி பிடிக்குமோ அதேபோல, டீ பிரியர்களும் ஏராளமானோர் இந்தியாவில் உள்ளனர். தினமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிலர் டீ குடிக்க விரும்புவார்கள். அதுபோல நீங்கள் வெறித்தனமான டீ பிரியர்களாக இருந்தால் இந்தியாவிலேயே மிகவும் விலையுர்ந்த டீ பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

கொல்கத்தாவில் உள்ள ஒரு சிறிய தேநீர் கடையில் ஒரு டீயின் விலை ரூ.1000 என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? கொல்கத்தாவின் முகுந்தபூரில் நிர்ஜாஷ் என்ற ஒரு சிறிய தேநீர் கடையில் ஒரு கப் டீ ரூ.1000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அங்கு குடைகள் தான் கடையின் கூரையே, மற்றும் வாடிக்கையாளர்கள் அமர்வதற்கு சில பிளாஸ்டிக் நாற்காலிகள் போடப்பட்டுள்ளது. இந்த டீ ஸ்டாலில் மொத்தம் 4 விலையுயர்ந்த டீ வகைகள் விற்பனை செய்யப்படுகிறதாம். அவை என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

100 வகையான டீ-க்களை வழங்கும் தேநீர் கடை:

இந்த சிறிய ஸ்டாலில் 100-க்கும் மேற்பட்ட விதவிதமான வகைகளில் தேநீர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உலகெங்கிலும் விற்கப்படும் அனைத்து வகையான டீக்களும் இங்கு கிடைக்கின்றன. இங்கு ஒரு கப் தேநீரின் விலை ரூ.12 இல் தொடங்கி ரூ.1000 வரை விற்கப்படுகிறதாம். அப்படி என்ன ஸ்பெஷல் என்று கேட்டால், உண்மையில் இங்கு விலையுர்ந்த வெரைட்டிகளில் டீக்கள் போடப்படுகிறது. அதாவது போ-லே டீ (Bo-Lay Tea), இந்த டீத்தூள் வாங்க கிலோவுக்கு ரூ.3 லட்சத்திற்கு மேல் செலவாகும் என்று கூறப்படுகிறது.



இதையடுத்து, மற்ற வகைகளான சில்வர் நீடில் வைட் டீ, லாவெண்டர் டீ, ஹைபிஸ்கஸ் டீ, வைன் டீ, துளசி இஞ்சி டீ, ப்ளூ திசேன் டீ, டீஸ்டா வாலி டீ, மாகைபரி டீ, ரூபியோஸ் டீ, மற்றும் ஒகேட்டி டீ ஆகியவை அடங்கும். இந்த ஒவ்வொரு வகை டீத்தூள் வாங்குவதற்கு கிலோவுக்கு சுமார் ரூ.10,000-த்தில் இருந்து ரூ.35,000 வரை செலவாகிறது என கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே இங்கு டீ விலை மிக அதிகம். ஆனால் ருசியோ விலைக்கு ஏற்றாற்போல இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

உலகின் மிகச் சுவையான, விலையுயர்ந்த பிரியாணி எது தெரியுமா?

டீ கடை உருவான வரலாறு:

நிர்ஜாஷ் டீ ஸ்டாலின் உரிமையாளர் பெயர் பார்த்தா பிரதிம் கங்குலி. முன்பு இவர் ஒரு தனியார் துறையில் ஒரு முழுநேரம் பணியாளராக வேலைபார்த்து வந்துள்ளார். பின்னர், தனது வேலையை கைவிட்டு சொந்த தொழில் ஆரம்பிக்கும் முயற்சியை கையில் எடுத்தார். அவருக்கு முதலில் தோன்றிய விஷயம் தேநீர் கடை வைப்பது. ஆனால் வழக்கமான டீ கடையாக இல்லாமல் அதில் சற்று வித்தியாசத்தை கொண்டு வரவும் முடிவு செய்திருந்தார். இதையடுத்து 2014-ல், அவர் நிர்ஜாஷ் டீ கடையை தொடங்கினார். ஆனால் அப்போது அவரது ஸ்டால் பெரிதாக வெற்றி பெறவில்லை. இருப்பினும், அவர் தனது முயற்சியை கைவிடாமல் டீ விற்பனையில் பல மாற்றங்களை கொண்டு வந்தார். இவர், தற்போது உலகெங்கிலும் விற்பனை செய்யப்படும் சுமார் 155 வகை தேநீரை ஒரு சிறிய ஸ்டாலில் விற்பனை செய்து வருவது ஆச்சர்யமான ஒன்று.

 
Published by:Sivaranjani E
First published: