• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • காரில் தங்கி 4 மாதங்களாக இந்தியாவை சுற்றி வரும் தம்பதி!

காரில் தங்கி 4 மாதங்களாக இந்தியாவை சுற்றி வரும் தம்பதி!

காரில் தங்கி 4 மாதங்களாக இந்தியாவை சுற்றி வரும் தம்பதி

காரில் தங்கி 4 மாதங்களாக இந்தியாவை சுற்றி வரும் தம்பதி

காரிலேயே தங்கி அதிலேயே பயணித்து சாலை ஓரங்களில் சமைத்து சாப்பிட்டு என கொரோனா காலத்தை பயன்படுத்தி இந்தியாவையே வலம் வந்து கொண்டிருக்கிறது கேரள மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி ஒன்று.

  • Share this:
கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன், லக்‌ஷ்மி கிருஷ்ணா தம்பதியர் பெங்களூருவில் தங்கி பணியாற்றி வந்தனர். ஹரிகிருஷ்ணன் விற்பனை பிரதிநிதியாகவும், லக்‌ஷ்மி கிராஃபிக் டிசைனராகவும் பணியாற்றி வந்தனர்.

2019-ல் புதிதாக திருமணம் செய்த பின்னர் தேனிலவு சுற்றுலாவுக்காக தாய்லாந்து நாட்டிற்கு சென்று வந்தனர். அந்த பயணத்தை மிகவும் விரும்பி சென்றதாகவும் அப்போது தங்கள் பயண அனுபவங்களை பிறருடன் பகிர்ந்து கொள்வதற்காக TinPin Stories என்ற யுடியூப் சேனலை தொடங்கியதாகவும் இத்தம்பதியர் தெரிவிக்கின்றனர்.

சுற்றுலா மீது அலாதி பிரியம் கொண்ட இருவரும் கொரோனா காலத்தின் போது பெங்களூருவில் தாங்கள் பார்த்து வந்த முழுநேர வேலையை ராஜினாமா செய்துவிட்டு. வீட்டிலிருந்தே பணியாற்றும் பகுதி நேர வேலையில் இணைந்துள்ளனர். பின்னர் பயணத்தின் மீதான காதல் கொண்ட இருவரும் தங்களின் காரிலேயே தொலைதூர பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டனர்.

ஹரிகிருஷ்ணன், லக்‌ஷ்மி கிருஷ்ணா தம்பதியர்


திட்டமிட்டபடியே கடந்த ஆண்டு அக்டோபர் 28ம் தேதி தங்களுடைய ஹூண்டாய் கிரெட்டா காரில் தங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு காரிலே புறப்பட்டனர். இவர்களின் முதல் பயணம் திருச்சூரில் இருந்து பெங்களூரு. பின்னர் அங்கிருந்து உடுப்பி. அங்கிருந்து கோகர்னா, ஏலாப்பூர் என ஒரு ரவுண்ட் அடித்துள்ளனர். ஏலாப்பூரில் ஆப்பிரிக்க சித்தி எனப்படும் பழங்குடி இனத்தவருடன் நேரத்தை கழித்துள்ளனர். பின்னர் அங்கிருந்து கோல்ஹாபூர் வழியாக மும்பை, அவுரங்காபாத், பூஜ், ரான் ஆஃப் கட்ச், உதய்பூர், புஷ்கர், ஜெய்ப்பூர், ஜெய்சால்மர், காஷ்மீர் சென்றுள்ளனர். நடுவே ரிஷிகேஷ், ஹிமாச்சல் பிரதேச கிராமங்கள் என சுற்றியுள்ளனர். சாலை மார்க்கமாகவே அக்டோபரில் இருந்து தற்போது வரை 10,000 கீமீட்டர்களை கடந்துள்ளனர். இவர்களின் பயணம் தற்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஏப்ரல் மத்தியில் ஊருக்கு திரும்ப திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தனர்.

முதலில் பயணத்துக்காக 2.5 லட்ச ரூபாய் பணத்தையே ஒதுக்கியிருந்ததாகவும். அந்த பணத்தை நெருங்க கூட இல்லை என்றும் தங்கள் பயணத்தை மிகவும் சிக்கனமாகவே நகர்த்தி சென்றுகொண்டிருப்பதாகவும் ஹரிகிருஷ்ணன் - லக்‌ஷ்மி தம்பதியர் தெரிவித்தனர்.

காரில் இந்தியாவை சுற்றி வரும் தம்பதி!


10 ஆடைகள், குறைந்தபட்ச சமையல் பாத்திரங்கள், ஒரு பக்கெட், ஒரு கப், ஒரு லேப்டாப், 3 தண்ணீர் கேன்கள், 5 கிலோ கேஸ் சிலிண்டர், ஒரு பர்னர் அடுப்பு போன்ற பொருட்களை மட்டுமே எடுத்துச் சென்றுள்ளனர். காரிலேயே இரவு பொழுதை கழிக்கும் இத்தம்பதி பின் சீட்டை சாய்த்து படுக்கை போன்று மாற்றிவிடுகின்றனர். இரவு நேரங்களில் பெட்ரோல் நிலையங்களில் காரை பார்க் செய்துவிட்டு அங்கேயே தங்கிவிடுகின்றனர். காலையில் பெட்ரோல் நிலைய பாத்ரூம்களில் குளித்துவிட்டு செல்கின்றனர். ஆரம்பத்தில் மிகவும் சங்கடமாக இருந்ததாகவும் தற்போது பழகிவிட்டதாகவும் கூறுகின்றனர்.

ஆரம்பத்தில் 30 நாட்கள் மட்டுமே பயணிக்க திட்டமிட்டிருந்த இத்தம்பதியர் தற்போது 120 நாட்களுக்கும் மேலாக பயணத்தை தொடர்ந்து வருகின்றனர். பயணம் செய்பவர்களுக்கான பாதுகாப்பான நாடு இந்தியா என்பதை தாங்கள் பறைசாற்றிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கின்றனர் இத்தம்பதியர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: