ஏரியில் தண்ணீர் இருந்து பார்த்திருப்போம். அதை ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் இருந்து கூட பார்த்திருப்போம். ஆனால் ஒரு ஏரியில் மனித எலும்புகளாக இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? அதுவும் அந்த ஏரி நம் இந்தியாவில் இருக்கிறது என்று சொன்னால்..? உண்மை தான் மக்களே. ஏரியில் எப்படி எலும்புகள் நிறைந்தது என்று பார்க்கலாம் வாருங்கள்…
இந்திய மாநிலமான உத்தரகண்ட் மாநிலத்தில் சுமார் 5,029 மீ உயரத்தில் அமைந்துள்ள ஒரு பனிப்பாறை ஏரி தான் ரூப்குண்ட். குளிர் காலத்தில் பனியால் மூடி இருக்கும் இந்த ஏரி உருகும்போது, நூற்றுக்கணக்கான மனித எலும்புக்கூடுகள் தண்ணீரில் அல்லது மேற்பரப்பிற்கு கீழே மிதப்பதைக் காணலாம்.
இந்த ஏரி முதன்முதலில் 1942 இல் ஒரு வனத்துறை ரேஞ்சரால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் அந்த எச்சங்கள் ஜப்பானிய வீரர்களின் எச்சங்கள் என்று ஊகிக்கப்பட்டது. அவர்கள் அந்த பகுதிக்குள் பதுங்கியிருந்து காலநிலை சரி இல்லாததால் இறந்துவிட்டதாகக் கருதினர்.
அது இரண்டாம் உலகப்போர் நடந்த காலம் என்பதால் எதிரிகள் ஊடுருவி வந்து இறந்து விட்டனரா என்று ஆராய பிரித்தானியர்கள் ஒரு புலனாய்வாளர் குழுவை அனுப்பி சோதனை செய்தனர். விசாரணையில், சடலங்கள் புதியதாக இல்லாததால், ஜப்பானிய வீரர்களுக்கு சொந்தமானது அல்ல என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையும் படிங்க : குடை வடிவ 4000 ஆண்டுகள் பழைய பெருங்கற்கால புதைக்குழி பற்றி தெரியுமா?
பின்னர் ரூப்குண்டிற்கு சில பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் மற்றும் பல அறிஞர்கள் ஆய்வு செய்ததில் அந்த எலும்புகள் காஷ்மீரின் ஜெனரல் ஜோராவர் சிங் மற்றும் அவரது ஆட்கள் 1841 இல் திபெத் போருக்குப் பிறகு திரும்பி வரும்போது, உயரமான இமயமலையில் வழி தவறி இறந்திருக்கலாம். அவர்களது சடலமோ என்று சந்தேகித்தனர்.
ஆனால் 1960களில் செய்யப்பட்ட ரேடியோகார்பன் சோதனைகள் இந்தக் கோட்பாட்டை பொய்யாக்கின. எலும்புக்கூடுகள் 12 மற்றும் 15 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் உள்ள காலத்தை சேர்ந்தது என்று சுட்டிக்காட்டின. இது கர்வால் இமயமலையில் முகமது துக்ளக் தாக்குதல் நடத்திய காலத்தை ஓத்திருந்ததால் தோல்வியடைந்து சென்ற துக்லக் படைகளின் சடலங்கலாக இருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் கணக்கு போட்டனர்.
இன்னும் சிலர் எலும்பு எச்சங்கள் அன்றைய காலத்தில் பரவிய அறியப்படாத தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களது என்று நம்பினர். சில மானுடவியலாளர்கள் சடங்குகள் ஏதேனும் செய்ய தற்கொலை அல்லது கொலை செய்யப்பட்டவர்கள் என்ற கோட்பாட்டையும் முன்வைத்தனர்.
இறுதியில்...
2004 ஆம் ஆண்டில், நேஷனல் ஜியோகிராஃபிக் சேனலின் உத்தரவின் பேரில் ஐரோப்பிய மற்றும் இந்திய விஞ்ஞானிகள் குழு ஒன்று இப்பகுதியில் ஆராய்ந்தபோதுதான், திகிலூட்டும் உண்மை வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியது. எலும்புகளின் டிஎன்ஏ சோதனையானது இறந்தவர்களை இரண்டு தனித்தனி உடல் வகைகளாக வைத்தது-ஒன்று உயரம் குறைவானது மற்றும் மற்றொன்று கணிசமாக உயரமானது.
அவர்களின் கார்பன் டேட்டிங் கண்டுபிடிப்புகள் உடல்கள் முன்பு நினைத்ததை விட மிகவும் முந்தைய பொது ஆண்டு 850 காலத்தைச் சேர்ந்தவை என்பதையும் வெளிப்படுத்தியது.அவர்களின் மண்டை ஓட்டின் பின்புறத்தில் உள்ள விரிசல்கள், அவர்கள் அனைவரும் தலையின் பின்புறத்தில் ஒரு பயங்கரமான அடி விழுந்ததால் இறந்ததாகக் குறிப்பிடுகின்றன.
உடலின் வேறு எந்தப் பகுதியிலும் காயம் இல்லாததால் அவை நிலச்சரிவு அல்லது பனிச்சரிவால் ஏற்படவில்லை என்பதும் புலனானது. ஆலங்கட்டி மழை பெய்து ஏற்பட்டிருக்கலாம் என்றாலும் அனைவருக்கும் எப்படி ஒரே மாதிரியான காயம் ஏற்பட்டிருக்கும் என்பது மர்மமாகவே இருந்து வருகிறது.
இதையும் படிங்க :பறவைகள் தற்கொலை செய்துகொள்ள வரும் இந்திய கிராமம்..! விலகாத மர்மம்..
இப்பகுதியில் திபெத்துக்கு எந்த வணிகப் பாதையும் இருந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் இல்லை. ஆனால் நந்தா தேவி கோவிலுக்கு ஒரு முக்கியமான யாத்திரை பாதையில் இது அமைந்துள்ளது, சுமார் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கு திருவிழா இன்றும் நடைபெற்று வருகிறது.
அதேபோல் அந்த காலத்தில் 500 முதல் 600 பேர் கொண்ட குழு இந்த மலையில் ஏறி செல்லும்போது திடிரென்று ஏற்பட்ட மழையால் ஒதுங்க இடம் இல்லாமல் மலை ஏற முயன்று விபத்து ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்ற யூகம் உள்ளது. பனிக்கட்டி நீர் அவர்களின் உடலை நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக பாதுகாத்து வந்துள்ளது. அவர்களில் சிலருக்கு முடி மற்றும் நகங்கள் மற்றும் உடைகள் கூட அப்படியே இருந்துள்ளன.
விபத்தில் இருந்து தப்பி, கிராமதிற்கு வந்த சில யாத்ரீகர்கள், தனது மலை பகுதியை அசுத்தப்படுத்தியதால் வெளியாட்கள் மீது கோபமடைந்த ஒரு தெய்வம், அவர்கள் மீது ஆலங்கட்டிகளை வீசி மரண மழை பொழிந்ததாக நாட்டுப்புற பாடலை இயற்றியுள்ளனர். அந்த பாடல் இன்றும் இந்த ஊரில் புழக்கத்தில் உள்ளது. இன்றும் இந்த ஏரியின் கீழ்ப்பகுதியில் எலும்புகள் கிடைப்பதைக் காணலாம்.
12 வருடங்களிலும் ஒரு முறை உள்ளூர் மக்கள் இந்த வழியாக சென்று நந்தாதேவியை வழிபாடும் உட்சவம் இன்றும் நடந்து வருகிறது. இந்த ஏரியைக் கடக்கும்புது அதே நாட்டுப்புறப்பாடலை பாடும் வழக்கமும் உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Lake, Mysterious death, Travel, Travel Guide, Uttarkhand