இந்திய சுற்றுலாவாசிகள் இலங்கை செல்ல அனுமதி கிடைச்சாச்சு..ஆனால் ஒரு கண்டிஷன்..!

இலங்கை

இலங்கை வெளியிட்டுள்ள அறிக்கைகளின் படி, கோவாக்சின் அல்லது கோவிஷீல்டு தடுப்பூசியின் 2 டோஸ்களையும் போட்டு கொண்டு இந்தியாவில் இருந்து பயணம் செய்யும் எவரும் இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

  • Share this:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை முடிவு கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில், தடுப்பூசி போடும் பணிகள் இன்னும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.தொற்று குறைந்திருந்தாலும் மூன்றாவது அலை உருவாகும் வாய்ப்புகள் அதிக இருப்பதால் மக்களும் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி கொள்கின்றனர். இந்நிலையில் அண்டை நாடான இலங்கை முழுமையாக தடுப்பூசி எடுத்து கொண்டுள்ள இந்தியர்கள் சுற்றுலா காரணங்களுக்காக தங்கள் நாட்டிற்கு வரலாம் என்று அறிவித்துள்ளது.

இலங்கை வெளியிட்டுள்ள அறிக்கைகளின் படி, கோவாக்சின் அல்லது கோவிஷீல்டு தடுப்பூசியின் 2 டோஸ்களையும் போட்டு கொண்டு இந்தியாவில் இருந்து பயணம் செய்யும் எவரும் இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவாக்சின் உட்பட அனைத்து தடுப்பூசிகளையும் ஏற்று கொள்வதாக கூறியுள்ள இலங்கை, தற்போது இந்தியாவில் 12 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி போட்டு கொண்ட குடிமக்கள் இருக்கின்றனர். இதை பாதுகாப்பான சூழலாக தாங்கள் கருதுவதால் இந்திய மக்களுக்கு பயணத்தின் மீதான ஆர்வத்தை ஏற்படுத்த இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கூறி இருக்கிறது.இலங்கையின் சமீபத்திய பயண விதிகளின் படி 1 டோஸ் தடுப்பூசி மட்டுமே போட்டு கொண்டுள்ளவர்கள் அல்லது தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டிற்கு வந்தவுடன் நடத்தப்படும் பரிசோதனையின் போது கோவிட் நெகட்டிவை முடிவாக பெறும் பயணிகள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பயணம் செய்பவர்கள் தங்களது இரண்டாவது டோஸ் தடுப்பூசியை எடுத்து 14 நாட்களுக்கு மேல் ஆகியிருக்க வேண்டும். அதே போல கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு முழுமையாக குணமடைந்த நபர்கள் ஒரு டோஸ் தடுப்பூசி மட்டுமே போட்டு கொண்டிருந்தாலும், அவர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டு கொண்ட நபராக (fully vaccinated’) கருதப்படுவார்கள்.எனினும் இவர்கள் இலங்கை வருவதற்கு முன் 28 - 90 நாட்களுக்குள் கோவிட் -19 தொற்றிலிருந்து மீண்டதை உறுதிப்படுத்தும் வகையில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும் சரியான ஆவணத்தை அதிகாரிகளிடம் காட்ட வேண்டும். தடுப்பூசி போட்டு கொள்ளாத 2 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டு கொண்டுள்ள பெற்றோருடன் இலங்கைக்கு வரலாம். ஆனால் அவர்களுக்கு நடத்தப்படும் கொரோனா சோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்தால் மட்டுமே பெற்றோருடன் வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்பதை பயணிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கோவிட் தடுப்பூசிக்கு பின் கொரோனா Vs பக்கவிளைவுகள் : கண்டுபிடிப்பது எப்படி?

2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனையிலிருந்துவிலக்கு அளிக்கப்படுகிறது. ஒருவேளை பெற்றோர்கள் / பாதுகாவலர்களுக்கு இலங்கை வந்தவுடன் நடத்தப்படும் PCR டெஸ்ட்டின் போது அறிகுறிகள் காணப்பட்டால் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று இலங்கை தெரிவித்துள்ளது. மேலும் இலங்கை வரும் பயணிகள் கோவிட் -19 லோக்கல் ட்ராவல் இன்சூரன்ஸிற்கும், வருகையின் போது அவர்களுக்கு செய்யப்படும் RT-PCR சோதனைக்கும் பணம் செலுத்த வேண்டும்.

 
Published by:Sivaranjani E
First published: