மாலத்தீவிற்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள் - அதன் சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?

Maldives

மாலத்தீவின் தலைநகரான மேலில் இருக்கும் தேசிய அருங்காட்சியகம், ஹுல் ஹுமாலே தீவு போன்றவை சுற்றுலாப் பயணிகள் அதிகம் சுற்றிப்பார்க்கும் முக்கிய இடங்களாகும்.

  • Share this:
இந்தியப் பெருங்கடலின் முக்கியமான கடல் பாதையில் மாலத்தீவு அமைத்துள்ளது. இந்தியாவும், இலங்கையும் மாலத்தீவின் அண்டை நாடுகளாக இருக்கின்றன. மிகவும் குட்டி நாடான மாலத்தீவு முழுக்க முழுக்க சுற்றுலாவையே நம்பி இருக்கிறது. சமீப காலமாக எண்ணற்ற பிரபலங்கள் மாலத்தீவிற்கு சென்று வருகின்றனர். மேலும் தாங்கள் சென்ற புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கால் கடந்த ஒரு வருடமாக வீட்டிலேயே முடங்கிக் கிடந்த பலரும் மாலத்தீவு புகைப்படங்களை பார்த்த பின்னர் அங்கு சென்று வருகின்றனர். அப்படி என்ன தான் அங்கு உள்ளது என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.,

மாலத்தீவின் தலைநகரான மேலில் இருக்கும் தேசிய அருங்காட்சியகம், ஹுல் ஹுமாலே தீவு போன்றவை சுற்றுலாப் பயணிகள் அதிகம் சுற்றிப்பார்க்கும் முக்கிய இடங்களாகும். மேலில் இருக்கும் வெள்ளி தொழுகை மசூதி உலகின் பழமையான மசூதிகளில் ஒன்று. மாலத்தீவின் அழகழகான கடற்கரைகள், நெஞ்சம் அள்ளும் இயற்கை காட்சிகள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவரும் வண்ணம் அமைந்துள்ளன. இங்கு நீங்கள் சுற்றிப்பார்க்க பொது படகுகளை எடுத்துச் செல்லலாம்.

மாலத்தீவுகள் பெரும்பாலும் ஒரு காதல் ஜோடிகளுக்கான இடம் என்றாலும், சூரியன், கடல் மற்றும் மணல் ஆகியவற்றை தாண்டி இன்னும் நிறைய இருக்கிறது. மாலத்தீவில் சுற்றுலாப்பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் வசிக்கின்றனர். ஹெரிடன்ஸ் ஆராவில், சுற்றுலாப் பயணிகள் கலாச்சாரத்தை ஆராய ஒரு பாரம்பரிய மாலத்தீவு கிராமம் உள்ளது. இங்கு மீனவர்கள் தினசரி கஷ்டங்களை எவ்வாறு எதிர்கொள்வது மற்றும் அவர்களின் வாழ்க்கை முறை குறித்தும் அறிந்து கொள்ளலாம்.

அதிகரித்து வரும் கடல் வெப்பநிலை மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடுகள் காரணமாக கடல் விலங்குகள் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக மாலத்தீவில் இருக்கும் ஆமைகள் பாதிப்படைகின்றன. இதனால் மாலத்தீவுகளில் ஆமை பாதுகாப்பு என்ற கையொப்ப திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஆலிவ் ரிட்லி திட்டம் மூலம் பல ரிசார்ட்டுகளும் ‘ஆமை பாதுகாப்பு’ திட்டத்தில் இணைந்துள்ளன. இவற்றையும் அங்கு சென்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

மாலத்தீவில் அழகிய கடற்கரைகள், பவள பாறைகள், தென்னைமரங்கள், கண்களை குளிர்விக்கும் மீன்கள், அழகான மணல் வெளிகள், பூங்காக்கள் என இன்னும் பல அழகிய காட்சிகளை பார்த்து ரசிக்கலாம். மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு கூட மனதை குளிர்விக்க கூடியதாக இந்த இடங்கள் இருக்கும். மேலும் தேனிலவு செல்வதற்கும், குடும்பமாக சுற்றுலா செல்வதற்கும் கூட மிக சிறந்த இடத்தில் ஒன்றாக மாலத்தீவு உள்ளது.

அங்குள்ள ஹுல் ஹுமாலே தீவு சுற்றுலாப் பயணிகள் அதிகம் சுற்றிப்பார்க்கும் இடத்தில் ஒன்று. இங்கிருக்கும் சன் ஐலேண்ட் மனதைக் கவரும் மலர்களையும், இயற்கைக் காட்சிகளையும் உடையது. கடல் வாழ் உயிரினங்களின் அழகைப் ரசிக்க விரும்புவர்கள் செல்ல வேண்டிய இடம் ப்ளூட்ரைப் மூஃப்ஷி. இங்கு கடலுக்குள் இருக்கும் அழகியமீன் இனங்களை பார்த்து ரசிக்கலாம். மேலும் மாலத்தீவில் வாழைப்பழ வடிவில் வடிவமைக்கப்பட்டு இருக்கும் பனானா ரீஃப் பகுதி மனதை மகிழ்விக்கும் இடத்தில் ஒன்று. இங்கு ஸ்கூபா டைவிங் பிரபலமானது.

மாலத்தீவின் சிறப்பம்சங்களான நீர்நிலைகள் விண்ட்சர்ஃபிங், டைவிங், ஸ்நோர்கெலிங், கயாக்கிங், பெடல் படகுகளில் சவாரி செய்தல் ஆகியவற்றிக்கு பிரபலமானது.

மாலத்தீவிற்கு கொச்சியில் இருந்து கப்பல் மூலமாகவோ, சென்னையில் இருந்து விமானம் மூலமாகவோ செல்லலாம். கப்பல் மூலம் செல்வதற்கு ஒன்றில் இருந்து இரண்டு நாள்கள் ஆகும். விமானம் மூலம் செல்வதற்கு இரண்டு மணிநேரம் ஆகும். சென்னையில் இருந்து சீசனுக்கு ஏற்ப டிக்கெட் விலைகள் நிர்ணயம் செய்யப்படுகின்றன. இந்தியர்களுக்கு முன்னதாகவே விசா தேவையில்லை. பயணம் செய்தாலே அங்கு 90 நாள்களுக்கான விசா வழங்கப்படும். அதற்காக ஒரிஜினல் பாஸ்போர்ட் உள்ளிட்ட சில ஆவணங்களும் தேவை. தற்போது கொரோனா காலம் என்பதால் அங்குள்ள நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளை அறிந்து கொண்டு செல்வது அவசியமாகும்.
Published by:Ram Sankar
First published: