ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

பாம்புக்கு வீட்டில் இடம் ஒதுக்கி குடும்பமாக வாழும் இந்திய கிராமம்..!

பாம்புக்கு வீட்டில் இடம் ஒதுக்கி குடும்பமாக வாழும் இந்திய கிராமம்..!

பாம்போடு குடும்பமாக வாழும் கிராமம்

பாம்போடு குடும்பமாக வாழும் கிராமம்

குழந்தைகள் அவற்றுடன் விளையாடுவதோடு பாம்புகளை தங்களோடு  பள்ளிக்கும் அழைத்துச் செல்கின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Maharashtra |

பாம்பு என்ற வார்த்தையை கேட்டாலே நாம் எல்லாம் பத்தடி தள்ளி நிற்போம். இல்லையென்றால் பாம்பை கண்டதும் தெய்வம் என்றும் வழிபடுவோம். ஆனால் இந்தியாவில் உள்ள ஒரு கிராம மக்கள் பாம்பை ஏதோ செல்ல பிராணிபோல வீட்டில் வந்து போக விட்டு அதனோடு தோழமையுடன் வாழ்ந்து வருகின்றனர் தெரியுமா?

மகாராஷ்டிராவில் உள்ள சோலாப்பூர் மாவட்டத்தின் மோஹோல் தாலுகாவிற்கு உட்பட்ட ஷெட்பால் கிராமத்தில் தான் இப்படியான ஒரு வினோத பழக்கம் இருந்து வருகிறது. இந்த கிராமத்து மக்கள் பாம்புகளை கண்டு அஞ்சுவது இல்லை. அதை குடும்பத்தில் ஒருவராக நடத்துகிறார்கள்.

புனேவில் இருந்து 200 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் கிட்டத்தட்ட 2600 கிராம மக்கள் வசிக்கின்றனர். இன்று வரை இந்த கிராமத்தில் இருந்து பாம்பு கடித்ததாக எந்த ஒரு சம்பவமும் பதிவாகவில்லை. இங்கே உள்ள மக்களும் பாம்புகள் கொடூரமானது அல்ல. இங்குள்ள பாம்புகள் மக்களை தீண்டாது என்று கூறுகின்றனர்.

பாம்பு என்றால் எதோ தோட்டத்திற்குள் திரியும் சிறிய அளவிலான பாம்பு என்று நினைக்க வேண்டாம்.  உலகின் கொடிய விஷமுள்ள பாம்புகளில் ஒன்றாக கருதப்படும் நாக பாம்பு கூட இந்த கிராமத்தில் அசால்ட்டாக உலா வருகிறது. அதை பார்த்தும் யாரும் நடுங்குவது இல்லை. அதோடு சேர்ந்து நடக்கிறார்கள்.  இன்று நேற்று தொடங்கவில்லை. பல தலைமுறைகளாக இப்படி  வாழ்கின்றனர்.

அதேபோல் நம் வீட்டிற்கு அருகில் ஒரு குட்டி பாம்பு வந்தாலே நாக தோஷம் என்று கோவிலுக்கு பரிகாரம் செய்ய ஓடுகிறோம். ஆனால் ஷெட்பால் கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் பாம்பிற்காக தனி இடத்தையே ஒதுக்கி வைத்திருப்பார்கள். குறிப்பாக நாகப்பாம்புகளுக்காக ஒரு மூலை ஒதுக்கப்படுகிறது. அந்த இடத்தில பாம்புகள் வந்து வசித்துவிட்டு போகும்.

புதிய வீட்டைக் கட்டும் போது கூட, கிராமவாசிகள் பாம்புகளுக்காக ஒரு பிரத்யேக மூலையை ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். அந்த இடத்தில் பாம்புகளுக்கு படைக்க பாலும் முட்டையும் வைக்கிறார்கள். இந்த ஊருக்கு போனால் பாம்புக்கு பால் முட்டை வைக்க கோவிலை தேட வேண்டியதில்லை. எந்த வீட்டிலும் வைக்கலாம்.

கிராமத்தில் உள்ள குழந்தைகளும் பாம்புகளுக்கு பயப்படுவதில்லை, ஏனெனில் பாம்புகளோடு தான் அவர்கள் வளர்கிறார்கள்.  குழந்தைகள் அவற்றுடன் விளையாடுவதோடு பாம்புகளை தங்களோடு  பள்ளிக்கும் அழைத்துச் செல்கின்றனர்.

பாம்புகள் கிராமத்தில் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன, கிராமவாசிகள் யாரும் அவற்றைத் துன்புறுத்துவதில்லை. அதேபோல பாம்புகளும் மக்களை எதுவும் செய்வதில்லை. புதிதாக போகும் நமக்கு தான்  பார்த்து பயம் வரும்.

First published:

Tags: Snake, Tamil News, Travel, Trip