ஹோம் /நியூஸ் /lifestyle /

பயணங்களால் கிடைக்கும் பயன்கள் என்ன?

பயணங்களால் கிடைக்கும் பயன்கள் என்ன?

பயணத்தின் அர்த்தம் என்ன?

பயணத்தின் அர்த்தம் என்ன?

Purpose of travel: புத்தகம் கற்றுத்தருவதை விட பன்மடங்கு பாடங்களை பயணங்கள் கற்றுத்தரும். நேரத்தை விற்றேனும்  நினைவுகளை பெற வேண்டும் என்பர். பயண டைரி எழுதத் தயாராகுங்கள்….

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

வீட்டில் இருந்து அலுவலகம் செல்வதும் ஒரு பயணம் தான். வீட்டிலிருந்து அண்டார்டிகா செல்வதும் பயணம் தான். பூமியில் இருந்து பால்வெளி  தாண்டி போவதும் பயணம் தான். தூரம் எதுவாக இருந்தாலும் அதில் இருந்து நாம் கற்கும் பாடங்கள் தான் நம் பயணத்தை மதிப்பானதாக மாற்றுகிறது.

ஆராய்ச்சியாளர் ஃபைலெப் செபாஸ்டியன், "நிறைவான பயண அனுபவம் என்பது திருப்தியைப் பற்றியது மட்டுமல்ல. தனிப்பட்ட முறையில் நமது பயணச் செயல்பாடுகளை நாம் எவ்வளவு அர்த்தமுள்ளதாகக் கண்டோம் என்பதும் கூட" என்ற வலுவான கருத்தை முன்வைக்கிறார்.

பயணங்கள் நமக்கு எதையெல்லாம் கற்றுத்தருகின்றன என்று பார்ப்போம்.

என்னை அறிந்தால்…

இக்கட்டான சூழல் வரும் வரை நம்மை பற்றி நமக்கே சரியாக தெரியாது. நம்மால் எது முடியும், முடியாது என்பது பயணம் செய்யும் போது தான் தெரியும். வீட்டில் இருந்து கடைக்கு நடக்க முடியாத  ஒருவர் பயணத்தின் போது 5 கிமீ அசால்டாக நடப்பார். 

தனது இயலாமையை உணர்ந்து கொள்ளும் தருணங்களை பயணம் தரும். நம்மால் ஒரு காரியத்தை செய்ய முடியும். ஆனால் இவ்வளவு நாள் நமக்கே தெரியவில்லையே என்று உணரும் தருணங்களும் உண்டு. நம்மை நாம் தெரிந்துகொள்ள அவ்வளவு பரந்துபட்ட வாய்ப்புகளை பயணம் ஏற்படுத்தி கொடுக்கும். 

சவாலே சமாளி..

எனக்கு எது வரும் வராது என்று தெரிந்த பிறகு, என்னால் முடியாததை நான் முயற்சித்து அதற்கு நான் என்னை தயார்படுத்தி கொள்வேன் என்பவர்களுக்கு பயணமே வழி. ஒருவனுக்கு உயரம் என்றால் பயம். அதை முறியடிக்க முயலும்போது, மலையேற்றம் , பஞ்சி ஜம்பிங் , பாரா கிளைடிங் முதலியவற்றை மேற்கொள்ளலாம். உயரத்தின் பயத்தை பழக்கத்தால் மாற்றிவிடலாம்.

உலகம் சுற்றும் வாலிபம்....

இந்த உலகம் சிறியதே. ஆனால் இதில் வாழும் மனித இனங்கள் ஏராளம். கிணற்றுத் தவளைக்கு கடலை பற்றி தெரியாது. வெளியில் வந்தால் தான் மற்ற மக்களின் கலாச்சாரம் , பண்பாடு, வாழ்வியல், மொழி, வரலாறு முதலியவற்றை கற்றுக்கொள்ள முடியும். உலகத்தில் எந்த மாதிரியான வாழ்க்கை முறைகள் எல்லாம் இருக்கின்றன என்பதைக் கற்றுத் தரும். எப்படியும் வாழலாம் என்று கற்றுக் கொள்வோம். 

காட்சி ஒன்று தான் ஆனால் பார்வை வேறு..

பலரது வாழ்க்கை மாறியதற்கு பயணங்களையே காரணம் என்று சொல்வர். பணத்தின் போக்கு, அதில் சந்தித்த மனிதர்கள், நடந்த ஏதாவது ஒரு நிகழ்வு, அவரது வாழ்க்கை பற்றிய புரிதலையே மாற்றி விடும். காந்தி ஆப்பிரிக்காவில் கருப்பினத்தவர்களுக்காக போராட ஆரம்பித்தது பீட்டர்மரிட்ஸ்பேர்க் பயணத்தால் தான்.  அரை நிர்வாண பக்கிரி ஆக மாற காரணம் அவரது மதுரை பயணம். வாழ்க்கையை நாம் பார்க்கும் பார்வை அப்படியே தலைகீழாக கூட மாறிவிடும்.

மக்களோடு மக்களாக..

ஒரு சிலர் பிறந்ததில் இருந்து தனியாகவே வளர்ந்து, எல்லாம் தனக்கு என வாழ்ந்து பழகியிருப்பர். ஒரு பென்சிலைக் கூட கடனாக தர மாட்டார்கள். அவர்கள் மக்களோடு மக்களாக கூட்டத்தோடு கலந்து எல்லாவற்றையும் பகிர்ந்து வாழ கற்றுக் கொடுப்பது பயணம் தான். எல்லோரும் சமம். எதுவும் நமக்கு மட்டுமானது இல்லை என்ற எண்ணத்தை கொண்டு வரும்.

ஆயிரம் ஜன்னல் வீடு..இது அன்பு வாழும் கூடு...

பாட்டி வீட்டுக்கு போவது கூட பயணம் தான். பாட்டி, தாத்தாவின் தனிமையை 4 நாள் அவர்கள் வீட்டுக்கு போகும் பேரப்பிள்ளைகள் போக்கிவிடுவர். அவர்கள் சென்ற பின்னும் அந்த கதை பேசி பெரியவர்கள் மகிழ்ச்சி கொள்வர். பாட்டி பேரக்குழந்தை பந்தங்கள் எல்லாம் வாழ்க்கை முழுக்க இனிய நினைவாக மிதக்கும் கதைகள். 

எல்லா உறவுகளும் அப்படிதான்.ஒரு சிறிய பயணத்தால் சரி செய்யப்படும். எல்லோரும் சேர்ந்து செல்லும் குடும்ப சுற்றுலா மேலும் உதவி செய்யும். பயணத்தின் போது வரும் அனுபவங்கள் அவர்களுக்குள்ள மனக்கசப்பை போக்கி பாசப்புரிதல்களை ஏற்படுத்தும்.

உலகமே குடும்பம்:

அம்மா, அப்பா, மகன், மகள் என்று வாழும் நியூக்ளியர் குடும்பத்தைத் தாண்டி டெல்லி நண்பன், அசாம் அண்ணன், குஜராத் தம்பி, கொலம்பியா நண்பன் என்று பயணங்களில் சந்திக்கும் நபர்களால் நம் குடும்ப வட்டம் எல்லை அற்றதாகும். பாசம் பரிமாறப்படும்.

மன அமைதி :

வேலை, படிப்பு, கடன், பிரச்சனை என்று ஒரு வட்டத்திற்குள் புழுங்கி கொண்டிருக்கும் நேரத்தில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு 2 நாள் செய்யும் பயணம் மன அமைதியை உண்டாக்க முயலும்.  இந்த சிறிய இடைவேளை பிரச்சனைகளை சரி செய்ய புதிய யோசனைகளை கொடுக்கும். 

மதுரை தேனி சாலையில் வரலாறு கலந்த 3 மலைகளில் ட்ரெக்கிங் பயணம்…

புதிய தொடக்கங்கள்:

ஸ்காட் ஹாரிசன் என்பவர் நியூயார்க் நகரத்தில் மது தயாரிப்பு நிறுவனம் நடத்தி வந்தார். ஆப்பிரிக்கா நாட்டிற்கு ஒரு முறை பயணம் மேற்கொண்டார். அப்போது அங்கே அவர் பார்த்த வறட்சி, வறுமை, சுகாதாரமற்ற நிலை அவரை எதோ செய்தது. அதன் பிறகு சுகாதாராமான தண்ணீர்  மற்றும் சூழலை ஏற்படுத்த தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். இப்படியான புதிய தொடக்கங்கள் பயணங்களால் உண்டாகின்றன.

வாழ்க்கையைக் கொண்டாடும் நேரமிது..

இருப்பது ஒரு வாழ்க்கை தான். பறவைகளைப்போல் இறக்கை இல்லை பறந்து உலகைக் காண. கால்களால் நடந்து கற்றுக்கொள்ளுங்கள். புத்தகம் கற்றுத்தருவதை விட பன்மடங்கு பாடங்களை பயணங்கள் கற்றுத்தரும். அதனால் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பங்கை பயணத்திற்காக செலவுசெய்து நினைவுகளையும், வாழ்க்கை பாடங்களையும் கற்றுக்கொள்ளுங்கள். நேரத்தை விற்றேனும்  நினைவுகளை பெற வேண்டும் என்பர். பயண டைரி எழுதத் தயாராகுங்கள்….

First published:

Tags: Travel, Travel Guide, Trip