2020ம் ஆண்டு ஏற்பட்ட மாபெரும் பெருந்தொற்று காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. பயணங்கள் அனைத்தும் முடக்கப்பட்டன. இருப்பினும், 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் மீண்டும் பயணம் செய்யும் நம்பிக்கைகள் மக்களிடையே அதிகமாக இருந்தன. நாடுகள் அனைத்தும் எல்லைகளைத் திறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் சர்வதேச பயணம் எந்த நேரத்திலும் மீண்டும் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால் உள்நாட்டு பயணமே இப்போது கேள்விக்குறியாக இருக்கிறது. கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் தலைத்தூக்க ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக சில மாநிலங்கள் பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், இன்னும் சில மாநிலங்கள் இரவு ஊரடங்கு உத்தரவுகளை அறிவித்துள்ளன. எனவே, நீங்கள் பின்வரும் மாநிலங்களுக்குச் செல்ல திட்டமிட்டால், அங்கு என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
குஜராத்
சமீபத்திய தகவல்களின்படி, சூரத், அகமதாபாத், ராஜ்கோட் மற்றும் வதோதராவில் இரவு ஊரடங்கு உத்தரவை குஜராத் மாநில அரசு இரண்டு மணி நேரம் நீட்டித்துள்ளது. அதாவது, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை நீட்டித்துள்ளது. இதற்கு முன்பு இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு இருந்தது. இதையடுத்து, குஜராத் கிரிக்கெட் சங்கம் (GCA), இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான அடுத்த மூன்று T20 போட்டிகளும் பார்வையாளர்கள் இல்லாமல் விளையாடப்படும் என அறிவித்துள்ளது. மேலும், அகமதாபாத் மாநகராட்சி எட்டு வார்டுகளில் உள்ள உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களை இரவு 10 மணிக்குள் மூட உத்தரவிட்டுள்ளது. மேலும், குடிமை அமைப்பு ஏரி முகப்பு மற்றும் அனைத்து பொது பூங்காக்களையும், நகர உயிரியல் பூங்காவையும் மூடுவதாக அறிவித்துள்ளது.
மத்தியப் பிரதேசம்
மகாராஷ்டிராவிலிருந்து மத்திய பிரதேசம் வரும் அனைத்து பயணிகள் அனைவரும் கட்டாயம் ஏழு நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. போபால் மற்றும் இந்தூர் பகுதியில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. குவாலியர், ஜபல்பூர், ரத்லம், உஜ்ஜைன், புர்ஹான்பூர், சிந்த்வாரா, கார்கோன் மற்றும் பெத்துல் நகரங்களிலும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கடைகள் மூடப்படும் என்று மாவட்ட தலைமையகங்கள் உத்தரவிட்டுள்ளது. இதனால் ஹோலி பண்டிகையை கொண்டாட பொது நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை என்று கூறப்படுகிறது.
மன அமைதியை தேடும் நீங்கள் இந்த இடங்களுக்கு சென்று வரலாம் : நிம்மதிக்கு கியாரண்டி..!
மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவில் ஹோட்டல், அலுவலகங்கள் மற்றும் சினிமா அரங்குகளுக்கு 50 சதவீத தடை மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கிடையில், அனைத்து மத, சமூக, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்களும் தடை செய்யப்பட்டுள்ளன. அதேசமயம் திருமண விழாக்களில் அதிகபட்சம் 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி மற்றும் இறுதிச் சடங்குகளில் அதிகபட்சம் 20 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாக்பூரில் மார்ச் 21ம் தேதி வரை ஊரடங்கு போடப்பட்டிருக்கிறது. மேலும் மறுந்தகங்களைத் தவிர, அத்தியாவசியப் பொருட்களை விற்கும் கடைகள் பிற்பகல் 1 மணி வரை திறந்திருக்கும் என்று நகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
புனேவில் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. மேலும், பார்கள், ஹோட்டல்கள், தியேட்டர்கள் மற்றும் மால்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மூடப்படும். அதே நேரத்தில் மாலை பூங்காக்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, மகாராஷ்டிராவின் பிற இடங்களான பர்பானி, அவுரங்காபாத், நாந்தேட், உஸ்மானாபாத், பால்கர், தானே, நாசிக் மற்றும் ஜல்கான் பகுதிகளில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மும்பையில் இரவு ஊரடங்கு உத்தரவு தொடர்பாக பிரஹன் மும்பை மாநகராட்சி இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
பஞ்சாப்
பஞ்சாப் மாநிலத்தில் பாட்டியாலா, லூதியானா, ஃபதேஹ்கர் சாஹிப், மொஹாலி, நவான்ஷஹர், ஜலந்தர், ஹோஷியார்பூர் மற்றும் கபுர்தலா ஆகிய இடங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின்படி, இந்த ஊரடங்கு உத்தரவு இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரகண்ட்
செயின்ட் ஜார்ஜ் பள்ளி, கால்வே காட்டேஜ், முசோரியின் பார்லோ கஞ்ச் பகுதிகள் இப்போது டெஹ்ராடூன் மாவட்ட நீதவான் உத்தரவின் கீழ் ஊரடங்கு போடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
மார்ச் 31 வரை கோவிட் தொடர்பான ஊரடங்கை தமிழகம் நீட்டித்துள்ளது. முன்னர் பிப்ரவரி 28ம் தேதி வரை தளர்வுகளுன் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், கேரளா மற்றும் மகாராஷ்டிராவிலிருந்து பயணிக்கும் அனைவருக்கும் ஆர்டி-பிசிஆர் எதிர்மறை அறிக்கையை தயாரிக்க கர்நாடகா அரசு கட்டாயமாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.