முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கோடைவிடுமுறைக்கு கடல், மலைக்கு இடையே அமைந்துள்ள இந்த கோட்டைக்கு போகலாம்!

கோடைவிடுமுறைக்கு கடல், மலைக்கு இடையே அமைந்துள்ள இந்த கோட்டைக்கு போகலாம்!

வட்டக் கோட்டை

வட்டக் கோட்டை

கோட்டையின் ஒரு பகுதி கடலுக்குள் நீண்டுள்ளது. இந்த கடலுக்குள் நீண்டு இருக்கும் பகுதி கடலில் பயணம் செய்யும் கப்பல்களைக் கண்காணிக்க கூடியதாக உள்ளது

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Kanniyakumari, India

கோடை விடுமுறை வர இருக்கிறது. இந்த விடுமுறைக்கு குழந்தைகளை அழைத்து செல்ல சரியான இடத்தை தேடிட்டு இருப்பீங்க. அதற்கு தான் அட்டகாசமான வரலாற்று தளமும் இயற்கை அழகுல சேர்ந்த தமிழகத்தின் அட்டகாசமான ஒரு இடத்தை பற்றி உங்களுக்கு சொல்ல வந்திருக்கோம்.

ஒரு புறம் கடல், மறுபுறம் மேற்கு தொடர்ச்சி மலை நடுவில் ஒரு கோட்டை என்று கண்ணுக்கு விருந்தாக இருப்பது தான் வட்டக்கோட்டை. இந்தியாவின் தென்கோடி மாவட்டமான கன்னியாகுமரி நகரத்தில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் இந்த வட்டக்கோட்டை அமைந்துள்ளது. மற்றொரு சுவாரஸ்யமான அம்சம் கோட்டையை ஒட்டி அமைந்துள்ள கருப்பு மணல் கடற்கரை. 

வட்டக்கோட்டை எனும்  கடலோரக் கோட்டை முன்னாள் திருவிதாங்கூர் இராச்சியத்தில் கடலோர பாதுகாப்பு-கோட்டை மற்றும் படைமுகாமாக கட்டப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டில் புனச்சல்/எலக்கரை பகுதியை சேர்ந்த மார்த்தாண்டன் செம்பகராமன் பிள்ளை என்பவரால் திருவிதாங்கூர் மன்னர்களுக்காக கட்டப்பட்டது தான் இந்த வட்டக்கோட்டை. 

18 ஆம் நூற்றாண்டில் கோலாச்சல் போருக்கு பின்னர் திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் நம்பிக்கையைப் பெற்ற பிறகு, டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் முன்னாள் டச்சு கடற்படை அதிகாரியான கேப்டன் யூஸ்டாசியஸ் டி லானாய் திருவிதாங்கூர் முழுவதும் மேற்கொண்ட தற்காப்புக் கோட்டை சீரமைப்பு பணியின்  ஒருபகுதியாக வட்டக்கோட்டையை புனரமைத்தார். 

கோட்டை பெயர் வட்டக் கோட்டை என்றாலும் வட்டமாக இல்லை. செவ்வக வடிவமாக காட்சித் தருகிறது. ஒரு செவ்வகத்தின் ஓரத்தில் இன்னொரு செவ்வகத்தைப் பொருத்திய வடிவத்தில் தான் இருக்கிறது. இந்தக் கோட்டை முழுவதும் கிரானைட் கற்களால் ஆனது. கோட்டை முகப்பில் இரட்டை யானையும், சங்கும் பொறிக்கப்பட்டச் சின்னம் காணப்படுகிறது.மேலும், ரவிவர்மா காலம் வரை இருந்ததை குறிப்பிடும் R.V என்ற சின்னமும் உள்ளது.

இன்று கோட்டையின் ஒரு பகுதி கடலுக்குள் நீண்டுள்ளது. இந்த கடலுக்குள் நீண்டு இருக்கும் பகுதி கடலில் பயணம் செய்யும் கப்பல்களைக் கண்காணிக்க கூடியதாக உள்ளது. முற்காலத்தில் குமரிப் பகுதி ஒரு துறைமுகமாகச் செயல்பட்டு வந்துள்ளது. இப்போதைய சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகம் அக்காலத் துறைமுகமாக விளங்கியுள்ளது. அதோடு முத்துக்குளிக்கும் தொழிலும் இங்கே சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்த துறைமுகத்தைக் கண்காணிக்கும் விதமாகவும் கோட்டை முகப்பு அமைக்கப்பட்டுள்ளது.

1809ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் திருவிதாங்கூர் அரசை தோற்கடித்த போது இக்கோட்டையை அழிக்காமல் விட்டுவிட்டனர். அப்போது போரின் போது பயண்படுத்த உள் கொத்தளங்களுக்குள் பீரங்கிகள் கொண்டுசெல்ல ஏதுவாக சாய்தளம் அமைக்கப்பட்டுள்ளது.கடலுக்கு அருகிலேயே அமைந்துள்ள இக்கோட்டையின் உள் குளமும், ஒரு கிணறும் உள்ளது. இவை இரண்டிலும் நன்னீர் தான் இருக்கிறது. கோட்டையில் உள்ள வீரர்கள் பயன்பாட்டிற்காக இது உருவாக்கப்பட்டிருக்கலாம்.

திருவிதாங்கூர் அரசர்களால் புதுப்பிக்கப்பட்டு புனரமைக்கப்பட்ட இந்த கோட்டை பாண்டியர் காலத்தைச் சார்ந்தது என்பதற்கு அடையாளமாக கல்மண்டபங்களில் மீன் சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளதை இன்றும் காணலாம். மண்டபத்தின் உள்ளே மேற்கூரையில் பாண்டியர்களின் இலச்சினையான மீன் சின்னம் செதுக்கப்பட்டுள்ளதால் கி.பி.12 ஆம் நூற்றாண்டில் வட்டக்கோட்டை பாண்டியர்களின் கைவசம் இருந்திருக்கலாம் என்று கணிக்க முடிகிறது.

கோட்டையின் மேல் வீரர்கள் பயிற்சி செய்வதற்காக அமைந்துள்ள உயரமான அணிவகுப்பு மைதானத்தில் இருந்து பார்வையாளர்கள் கடலின் விரிந்த காட்சியை காணலாம். அணிவகுப்பு மைதானத்தின் ஒரு பக்கத்தில் இருந்து வங்காள விரிகுடாவின் நீர் தெரியும், மறுபுறம் அரபிக்கடலின் அமைதியான நீரைக் காணலாம்.இந்த கோட்டையை தற்போது இந்திய தொல்லியல் துறை பாதுகாத்து வருகிறது.

இதையும் பாருங்க: திருநெல்வேலி அருகே கோடை விடுமுறையை கழிக்க சூப்பர் அருவி இருக்கு..!

பார்வை நேரம்: காலை 08:00 முதல் மாலை 07:00 மணி வரை (வாரத்தின் அனைத்து நாட்களும்)

அருகில் உள்ள விமான நிலையம்: திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் 

அருகிலுள்ள ரயில் நிலையம்: நாகர்கோயில் சந்திப்பு ரயில் நிலையம்

First published:

Tags: History, Kanniyakumari, Summer Vacation, Travel