Home /News /lifestyle /

எழுந்திரு பறவையே...தொங்கு தூணுடைய லேபாக்ஷிக்கு ஒரு நாள் ட்ரிப்!

எழுந்திரு பறவையே...தொங்கு தூணுடைய லேபாக்ஷிக்கு ஒரு நாள் ட்ரிப்!

லேபாக்ஷி பயணம்

லேபாக்ஷி பயணம்

Lepakshi trip: ஆந்திர கர்நாடக எல்லைக்கு அருகில் விஜயநகர கட்டிடக் கலையோடு அமைந்த அழகியதொரு நகரத்திற்கு செல்லும் ஒரு நாள் திட்டம் இதோ!

ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் லேபாக்ஷி அமைந்துள்ளது. ஆந்திர கர்நாடக எல்லைக்கு அருகில் விஜயநகர கட்டிடக் கலையோடு அமைந்த அழகியதொரு நகரத்திற்கு செல்லும் ஒரு நாள் திட்டம் இதோ!

சென்னை, கோவை, மதுரை, திருச்சி என்று எல்லா இடங்களில் இருந்தும் பெங்களூருக்கு பேருந்து, ரயில் சேவையும் உண்டு. பெங்களுருவில் இருந்து 1.45 மணி நேரத்தில் ஹிந்துபூர் ரயில் நிலையத்தை அடையலாம். அங்கிருந்து 15 கி மீ தொலைவில் லேபாக்ஷி அமைந்துள்ளது.

லேபாக்ஷி என்ற பெயர் வர ராமாயண கதை ஒன்று சொல்லப்படுகிறது. சீதையை கடத்திச் செல்லும் ராவணனோடு சண்டையிட்ட ஜடாயு என்ற கழுகு இங்கே வீழ்ந்ததாகவும், ராமர் ஜடாயுவிடம் நிகழ்ந்தவை கேட்கும் போது சரிந்த ஜடாயுவை பார்த்து ‘தெலுங்கில்லே பட்சி’- (தமிழில்-‘எழுந்திரு பறவையே)’ என்று அழைத்ததாகவும், அதனால் தான் இந்த ஊருக்கு லேபாக்ஷி என்று பெயர் வந்துள்ளது.

ராசாளியாக பறக்க ரெடியா? இந்தியாவில் நீங்க மிஸ் பண்ணக்கூடாத சாலைப்பயண வழிகள் இதோ...

லேபாக்ஷி பேருந்து நிலையத்திலிருந்து 400 மீ தொலைவில், வீரபத்ரா கோயில் அமைந்துள்ளது. விஜயநகரப் பேரரசின் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட சிற்பங்கள் மற்றும் ஓவியங்களால் பிரபலமானது. அகஸ்திய மாமுனியால் கட்டப்பட்டதாக சொல்லப்படும் இந்தக் கோவிலை விஜயநகர மன்னர் அலியா ராம ராயரின் பொருளாளரான விருபண்ணன் புனரமைத்துள்ளார்.

வீரபத்ரா கோயிலைக் கட்ட அரச கருவூலத்தில் இருந்து அரசரின் அனுமதியின்றி நிதி எடுத்ததாக விருப்பண்ணா குற்றம் சாட்டப்பட்டார். இருப்பினும், மன்னரின் தண்டனையைத் தவிர்ப்பதற்காக அவர் தன்னைக் குருடாக்கிக் கொண்டார். இன்றும் கல்யாண மண்டபத்தின் அருகில் உள்ள சுவரில் இரண்டு இருண்ட கறைகளைக் காணலாம். அவை அவருடைய கண்களால் செய்யப்பட்ட அடையாளங்கள் என்று கூறப்படுகிறது. 1583 இல் வீரண்ணா, விருப்பண்ணா ஆகிய சகோதரர்கள் இக்கோவிலைக் கட்டி முடித்தனர்.இக்கோயில் சிவபெருமானின் அவதாரமான வீரபத்ரருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஆமை வடிவில் உள்ள குன்றின் மீது இந்தக் கோயில் கட்டப்பட்டதால், இது கூர்ம சைலா என்று அழைக்கப்படுகிறது. வீரபத்ரர் கோவில் இரண்டு பெரிய சுற்றுச்சுவர்களுக்குள் கட்டப்பட்டுள்ளது. பிரதான நுழைவாயிலின் கோபுரம் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. உட்புறச் சுவர்கள் அற்புதமான செதுக்கப்பட்ட தூண்களுடன் பெரிய மண்டபத்தால் சூழப்பட்டுள்ளன.

வரலாறோடு ஒரு ட்ரெக்கிங் பயணம்- செஞ்சி கோட்டை!

மண்டபத்தில் உள்ள தூண்கள் சதுர்முக பிரம்மா, அனந்தசயனா, தும்புரு, தத்தாத்ரேயர், நாரதர் மற்றும் ரம்பா போன்ற அழகான உருவங்களுடன் செதுக்கப்பட்டுள்ளன. மற்ற கோவில்களின் தூண்கள் போல் இல்லாமல், இக்கோயிலில் உள்ள தூண்கள் கருவறைக்கு முன் வட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ளன.முகமண்டபத்தில் பிரதான தெய்வமான வீரபத்ரர் சிவன், விஷ்ணு, தேவி சிலைகள் உள்ளன. சன்னதியில் ராமலிங்கம், பத்ரகாளி, அனுமன் சன்னதிகளும் உள்ளன. பிப்ரவரி மாதத்தில் 10 நாட்களுக்கு தேர்த் திருவிழா நடைபெறும்.

முகமண்டபத்தின் மேற்சுவரில் புராண சிவன் கதைகளின் அழகிய சுவரோவியங்கள் உள்ளன. அர்த்தமண்டபத்தில் சிவபெருமானின் 14 அவதாரங்களைக் காட்டும் 23 x 13 அடி அளவு சுவரோவியம் ஆசியாவிலேயே மிகப் பெரியதாகக் கூறப்படுகிறது. காய்கறி மற்றும் கனிம வண்ணங்களான மஞ்சள், காவி, கருப்பு, நீலம் மற்றும் பச்சை கலந்த சுண்ணாம்பு நீரைக் கொண்டு வரைப்பட்டுள்ளது. முடிக்கப்படாத வீரபத்திர திருமண மண்டபமும் உண்டு.தொங்கும் தூண்:
மண்டபத்தில் சுமார் 35 பெரிய தூண்கள் உள்ளன. அதில் ஒன்று தரையிலிருந்து சில அங்குலங்கள் மேலே இருக்கும். அந்த சந்து வழியாக தாள், துணி என்று எதுவும் போகும். இந்த தொங்கும் கல்தூண் தான் லேபாக்ஷியின் முக்கிய ஈர்ப்பாகும்.நாகலிங்கம்:
லேபாக்ஷியின் அடுத்த சிறப்பு, 18 அடி உயரம் கொண்ட, ஒரே கல்லில் பொறிக்கப்பட்ட நாகலிங்கம். நாகம் கவசமாக அமைந்த இந்த சிவலிங்கத்தை அங்குள்ள பணியாளர்களுக்கு சமையல் செய்யும் நேரத்திற்குள் செதுக்கியதாக கதை உண்டு.நந்தி:
அதற்கு எதிராக சுமார் 20 அடி உயரத்தில் ஒற்றைக் கல்லில் உருவாக்கப்பட்ட நந்தி உள்ளது. பசவன்னா என்றழைக்கப்படும் இந்த நந்தி சாதாரண நந்தி போல் அல்லாமல் கொஞ்சம் தலை தூக்கியவாறு ஆனால் பணிவான தொனியில் அமைக்கப்பட்டுள்ளது.கோவில் வளாகத்தில் சீதா பாதம் ஒன்றும் உள்ளது. ஜடாயு வீழ்ந்த நேரத்தில் ராமர் வரும் வரை அந்த பறவை உயிரோடு இருக்க சீதை நிலத்தில் தனது காலால் அழுத்தி குழி ஏற்படுத்தி அதில் தேங்கும் நீரை அருந்த சொல்லியதாக கதை சொல்லப்படுகிறது. அதோடு ஜடாயு பூங்கா ஒன்றும் உள்ளது. ஒற்றைப் பாறையின் மேல் கருடர் எனப்படும் பருந்தின் சிலை உள்ளது.லேபாக்ஷியை சுற்றிப்பார்க்க அக்டோபர் முதல் பிப்ரவரி வரை உள்ள காலம் உகந்தது. இந்த ஆண்டு சீக்கிரமே மழை பொழியத் தொடங்கியதால் ஆகஸ்ட் முதலே செல்லலாம். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். போட்டோஷூட் செய்யவும் சிறந்த இடமாகும்.அருகில் விதுர அஸ்வதா என்ற இடமும் உண்டு. மகாபாரத்தில் வரும் விதுரர் இங்கே அஸ்வதா என்ற அத்தி மரத்தை நட்டதாகக் கதை. நாக இனத்தவர்கள் வழிபட்டதாக நம்பிக்கை. நாக சிலைகளை இங்கே அதிகம் காணலாம்.
சுதந்திர போராட்டத்தின் போது இந்த மரத்தின் கீழ் 35 போராளிகளை ஆங்கிலேயர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர். தென்னிந்தியாவின் ஜாலியன் வாலாபாக் என்றழைக்கப்படும் இந்த சம்பவத்தின் நினைவகம் உள்ளது.

 
Published by:Ilakkiya GP
First published:

Tags: Travel, Travel Guide, Travel Tips, Trip

அடுத்த செய்தி