முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / லடாக்கில் கின்னஸ் சாதனை..! உலகின் மிக உயரமான உறைந்த ஏரியில் நடந்த அரை மாரத்தான்..

லடாக்கில் கின்னஸ் சாதனை..! உலகின் மிக உயரமான உறைந்த ஏரியில் நடந்த அரை மாரத்தான்..

கின்னஸ் சாதனை

கின்னஸ் சாதனை

காலநிலை மாற்றம் மற்றும் இமயமலையை காப்பாற்ற வேண்டியதன் அவசியத்தை மக்களுக்கு உணர்த்த இந்த அரை மாரத்தான் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Ladakh, India

 13,862 அடி உயரத்தில் உள்ள பூஜ்ஜிய வெப்பநிலையில் தனது முதல் 21-கிமீ ட்ரெயில் ரன்னிங் நிகழ்வை நடத்தி  'உலகின் உயரமான இடத்தில் நடந்த அரை மாரத்தான்' என்ற கின்னஸ் சாதனையை  லடாக் உருவாக்கியுள்ளது. இதன் மூலம் உலகின் மிக உயரமான உறைந்த ஏரி அரை மாரத்தான் ஓட்டம் என்ற பெயரையும் பெற்றுள்ளது.

இந்தியா மற்றும் சீனாவின் எல்லையில் பரவியுள்ள 700 சதுர கிலோமீட்டர் பாங்காங் ஏரி குளிர்காலத்தில் மைனஸ் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை பதிவு செய்கிறது. இதனால் உப்பு நீர் ஏரி பனியால் உறைகிறது. கடந்த ஆண்டு சீனா ராணுவம் முற்றுகையிட்ட இந்த ஏரியை சுற்றி அரை மாரத்தான் நடத்தப்பட்டது.

நான்கு மணிநேர நீண்ட மாரத்தான் லுகுங்கில் இருந்து தொடங்கி  மான் கிராமத்தில் முடிந்தது. காலநிலை மாற்றம் மற்றும் இமயமலையை காப்பாற்ற வேண்டியதன் அவசியத்தை மக்களுக்கு உணர்த்த இந்த அரை மாரத்தான் நடைபெற்றது. இந்த மாரத்தான் ஓட்டத்திற்கு 'கடைசி ஓட்டம்' என பெயரிட்டுள்ளனர்.

காலநிலை மாற்ற விழிப்புணர்வோடு  கிழக்கு லடாக்கின் எல்லைக் கிராமங்களில் நிலையான குளிர்கால சுற்றுலாவை மேம்படுத்துவதும், அங்கு வாழும் மக்களின் வாழ்வாதார வாய்ப்புகளை அதிகரிப்பதும் இந்த மராத்தானின் நோக்கமாகும்.

லடாக் லே தன்னாட்சி மாவட்டத் தலைமை நிர்வாக கவுன்சிலர் தாஷி கியால்சன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த அரை மாரத்தான் நிகழ்வில் 75 பேர் பங்கேற்றுள்ளனர்.  அவர்களது பாதுகாப்பிற்காக ஆற்றல் பானங்கள், மருத்துவக் குழுக்கள் மற்றும் ஆக்சிஜன் சப்போர்ட், மொபைல் ஆம்புலன்ஸ்கள் ஆகியவற்றைக் கொண்ட ஐந்து ஆற்றல் நிலையங்கள் பாதையில் அமைக்கப்பட்டன.

அனைத்து பங்கேற்பாளர்களும் மாவட்ட நிர்வாகத்தால் தீர்மானிக்கப்பட்ட SOP களுக்கு இணங்க, லேவில் நான்கு நாட்கள் மற்றும் பாங்காங்கில் இரண்டு நாட்கள் என ஆறு நாள் பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் ஓடுவதற்கு தகுதியானவர்களா என்பதை உறுதிப்படுத்த மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தான் மரத்தானில் பங்கேற்றுள்ளனர்.

ஓட்டப்பந்தய வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக யூனியன் பிரதேச பேரிடர் மீட்புப் படை வீரர்கள் மற்றும் லடாக் மலை வழிகாட்டி சங்கப் பணியாளர்கள் பாதையில் நிறுத்தப்பட்டனர். சரியான ஆய்வு மற்றும் உறைந்த பனி அடுக்கின் அளவைப் பார்த்த பிறகு பாதை முடிவு செய்யப்பட்டது. அதோடு பனியில் நழுவாமல் இருக்க பாதுகாப்பு கியர்கள் வழங்கபட்டுள்ளது.

நிகழ்வு வெற்றிகரமாக நிறைவடைந்த பின்னர், ஓட்டப்பந்தய வீரர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசுகளும் வழங்கப்பட்டன.

இதையும் படிங்க: சென்னைக்கு அருகில் மீண்டும் திறக்கப்பட்ட நாகலாபுரம் நீர்வீழ்ச்சி... இந்த வார இறுதிக்கான ஸ்பாட் ரெடி!

பிரதமர் நரேந்திர மோடியின் எல்லைப் பகுதிகளுக்கான #VibrantVillages திட்டத்தால் ஈர்க்கப்பட்ட ஒரு வெற்றிகரமான நிகழ்வு இது . கின்னஸ் அதிகாரிகளால் LAHDC லே மற்றும் ASFL க்கு கின்னஸ்  சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டதாக  தாஷி கியால்சன் ட்வீட் செய்துள்ளார்.

First published:

Tags: Guinness, Ladakh, Travel, World record