முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / நவீன காலத்திலும் செல்ஃபோன், மின்சாரம், இயந்திரங்கள் இல்லாத ஒரு கிராமம்.. இந்தியாவில் எங்கு உள்ளது தெரியுமா?

நவீன காலத்திலும் செல்ஃபோன், மின்சாரம், இயந்திரங்கள் இல்லாத ஒரு கிராமம்.. இந்தியாவில் எங்கு உள்ளது தெரியுமா?

கூர்ம கிராமம்

கூர்ம கிராமம்

இந்திய பாரம்பரிய முறையில் மணல், சுண்ணாம்பு, வெல்லம் மற்றும் துவரம் பருப்பு ஆகியவற்றின் கலவையால் வீடுகள் கட்டப்பட்டுள்ளன

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Andhra Pradesh |

இன்றைய காலகட்டத்தில் காலை எழுந்தவுடன் போன் திரையில் தான் விழிக்கிறோம். வாட்ஸ் ஆப் பார்க்காமல் படுக்கையை விட்டு எழமாட்டோம். பேன் இல்லாமல் தூக்கம் வராது, மிக்சி இல்லாமல் சமையல் நடக்காது, வாஷிங் மிஷின் இல்லாமல் துணிகள் துவைக்க முடியாது என்று எல்லாவற்றிற்கும் இயந்திரங்களையும் தொழில்நுட்பத்தையும் சார்ந்து இருக்கிறோம்.

ஆனால் ஆந்திராவில் உள்ள ஒரு கிராமத்தில் மின்சாரம் கிடையாது. போன் கிடையாது. இயந்திரங்கள் கிடையாது. சுருங்கச்  சொல்லவேண்டும் என்றால் இது  நவீன காலத்தில் உள்ள ஒரு பண்டைய கிராமம். இது எதுவும் இல்லாமல் நிம்மதியான வாழ்க்கையை எப்படி வாழ்கிறார்கள் என்று பார்ப்போம்.

எங்கே இருக்கிறது? விசாகப்பட்டினத்தில் இருந்து 170 கி.மீ தொலைவில், வடக்கு ஆந்திராவில் உள்ள ஸ்ரீகாகுளத்தில் இருந்து 70 கி.மீ தொலைவில் உள்ள கூர்மா கிராமம் அமைந்துள்ளது.  ஹீரா மண்டலத்திற்கு உட்பட்ட இந்தக் கிராமத்தில் வாழும் மக்கள் அனைவரும் விஷ்ணுவின் கிருஷ்ணா அவதாரத்தை வணங்குபவர்கள். இந்த மக்கள், தாங்கள் அமைக்கும் கிராமங்களுக்கு, கிருஷ்ணர், விஷ்ணு தொடர்பான பெயர்களையே சூட்டுகிறார்கள்.

அப்படி சர்வதேச கிருஷ்ணா உணர்வு சங்கத்தின் நிறுவனர் சுவாமி பிரபுபாதாவால் 2018 ஆம் ஆண்டு  கூர்மா என்ற கிராமம் நிறுவப்பட்டது. நகர வாழ்க்கையை விட்டு விலகி முன்னர் வாழ்ந்த மக்களை போல இயற்கையோடு இயைந்து வாழும் வாழ்க்கை முறையை உருவாக்க இந்த கிராமம் உருவாக்கப்பட்டது.

வீடுகள்:  மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கூர்மா கிராமத்தில் தற்போது 50 வீடுகள் வரை உள்ளன. வீடுகள் மேலும் கட்டப்பட்டு வருகின்றன. சிலர் தங்களது குடும்பங்களுடன் இருக்கிறார்கள். சிலர் தனியாக வசிக்கிறார்கள்.  இங்கு குடியேறும் மக்கள் தங்களுக்கான வீடுகளை தாங்கள் தான் கட்ட வேண்டும். உள்ளூர் மக்கள் அதற்கு உதவி செய்வார்கள்.

இந்த கிராமத்தில் வீடுகள் கட்டுவதற்கு இரும்பு, சிமென்ட் பயன்படுத்தப்படாமல்  ஓலையால் வேயப்பட்ட கூரை மண்  குடிசைகளையே கிராம மக்கள் விரும்புகின்றனர்.  இந்திய பாரம்பரிய முறையில் மணல், சுண்ணாம்பு, வெல்லம் மற்றும் துவரம் பருப்பு ஆகியவற்றின் கலவையால் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இரவில் வெளிச்சத்திற்கு விளக்குகளை பயன்படுத்துகின்றனர்.

Also Read : ப்ரோக்கன் பிரிஜ் முதல் டிமான்ட்டி காலனி வரை... சென்னையின் மர்மமான இடங்கள் லிஸ்ட் இதோ!

தன்னிறைவு கிராமம்: தங்களுக்கு தேவையான உணவு தானியங்களை அந்த கிராமத்திற்குளேயே  பயிரிடுகின்றனர். துணிகளை பொருத்தவரை கதர் ஆடைகளை பயன்படுத்துகின்றனர். அதற்கான பருத்தியையும் இங்கேயே பயிர் செய்கின்றனர். அது போக வேறு பொருட்கள் தேவைபட்டால்  அருகில் உள்ள கிராமத்தோடு பண்டமாற்றம் செய்து கொள்கின்றனர்.

சொகுசில்ல வாழ்க்கை முறை :அவர்கள் துணிகளை துவைக்க எந்த சோப்பு பவுடரையும் பயன்படுத்துவதில்லை. அதற்கு பதிலாக இயற்கையான பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. மின்சாரம், ஃபோன் உள்ளிட்ட வசதிகளும் கிடையாது. யாரையாவது தொடர்பு  கொள்ள வேண்டும் என்றால் கடிதம் தான் வழி. எந்த சொகுசு வசதிகளும் இல்லாமல் எளிய வாழ்க்கை முறையை கையாள்கிறார்கள்.

குருகுலம்: இங்குள்ள குழந்தைகளுக்கு பழைய குருகுல கல்வி முறை மூலம் கல்வி பயிற்றுவிக்கின்றனர். அதோடு சமஸ்கிருதம், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. அவர்கள் நாளை வெளி உலகில் வாழ வேண்டுமெனில் மொழி முக்கியம். அதற்கு தான் இந்த மொழிகள் கற்பிக்கப்படுகிறது என்று கூறுகின்றனர்.

பல பெரிய தொழில்நுட்ப நிறுவங்களில் பெரிய பொறுப்புகளில் இருந்த ஊழியர்கள்  அந்த வாழ்க்கை முறையை வெறுத்து இயற்கையோடு வாழ வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படியான சிலரையும் இங்கே பார்க்கலாம். இந்த கிராமத்தில் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டால் இந்த கிராம பொறுப்பாளருக்கு ஒரு கடிதம் போட வேண்டுமாம். அவர்கள் ஒப்புதல் அளித்தால் நாமும் அந்த கிராமத்தில் இணைந்துகொள்ளலாம்.

First published:

Tags: Andhra Pradesh, Village