ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

அஹமதாபாத் நகரில் ஒரு ஹெரிடேஜ் வாக் செல்ல நீங்க ரெடியா?

அஹமதாபாத் நகரில் ஒரு ஹெரிடேஜ் வாக் செல்ல நீங்க ரெடியா?

அஹமதாபாத்

அஹமதாபாத்

கலுபூர் சுவாமிநாராயண் கோயிலில் இருந்து தினமும் காலை 07:45 மணிக்கு வந்து ஜும்மா மசூதியில் காலை 10.30 மணிக்கு முடிவடைகிறது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Gujarat |

ஓ காதல் கண்மணி படத்தை பார்க்காத ஆள் இங்கு யாரும் இருக்க மாட்டார்கள். அதில் அகமதாபாத்தின் அநேக அழகை பி.சி.ஸ்ரீராம் தன் கேமெராவால் அழகிய படங்களாக எடுத்து விருந்தளித்திருப்பார். அந்த நகரத்தின் அழகை நீங்க நேரில் சென்று ரசிக்க ரெடியா …

சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடிமக்களுக்கு நகரத்தை வெளிப்படுத்தும் நோக்கத்துடன், அகமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் இந்த 'ஹெரிடேஜ் வாக் ஆஃப் அகமதாபாத்' ஏற்பாடு செய்துள்ளது. கலுபூர் சுவாமிநாராயண் கோயிலில் இருந்து தினமும் காலை 07:45 மணிக்கு வந்து ஜும்மா மசூதியில் காலை 10.30 மணிக்கு முடிவடைகிறது.

அந்த பயணத்தில் நீங்க என்னென்ன பார்ப்பீர்கள் தெரியுமா? வரலாறோடு சொல்கிறோம்…

அஷாவல் மற்றும் கர்னாவதியின் புராதன தளத்தில், 1411 இல் கண்டுபிடிக்கப்பட்ட அகமதாபாத் நகரில் முதலாவதாக - சுவாமிநாராயண் கோவில், பர்மா தேக்கில் செதுக்கப்பட்டு, பிரகாசமான வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். ஹவேலியில், யாத்ரீகர்களுக்கான குடியிருப்புகள், பெண்களுக்கான தனி தங்குமிடம், விழாக்கள் மற்றும் கற்பித்தல் அமர்வுகள் நடைபெறும் பகுதி காணலாம்.

அங்கிருந்து அடுத்து கவி தல்பத்ரம் சௌக். 19 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற குஜராத்தி கவிஞர் தல்பத்ராம் என்பவரின் வீட்டின் முன் கவிஞரின் சிலையில் குர்தாவில் கதிவாரி எம்பிராய்டரி, தேய்ந்து போன வலது கால், கண்களில் தியான தோற்றம் போன்றவற்றைக் காணலாம்.

அப்படியே நகர்ந்தால், அமெரிக்க கட்டிடக் கலைஞர், ஃபிராங்க் லாயிட் ரைட் காலிகோ மில்ஸ் நிர்வாக அலுவலகத்தைக் கட்ட திட்டமிட்டு, பின்னர் அதே இடத்தில், கௌதம் சாராபாய் கட்டிய காலிகோ டோமை காணலாம். 1962 இல் மில்களுக்கான ஷோரூமாக மாறி, 1990 களில் மூடப்பட்டன. அகமதாபாத்தில் முதல் பேஷன் ஷோ இங்கு தான் நடைபெற்றதாம்.

அடுத்து சிறிது தூரத்தில் ஹாஜா படேல் நி போல் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தால், அமர்ந்த நிலையில் ராமர் சிலை இருக்கும் காலா ராம்ஜி கோவில் அடைவோம். வனவாசத்தில் இருப்பது போல் இருக்கும் மூன்று சிலைகளும் தங்கத்தின் தூய்மையை சோதிக்கப் பயன்படும் 'கசோடி' என்ற கருங்கல்லால் செய்யப்பட்டவை.

அதே வீதியில் கி.பி.1923 இல் ஷா வகாட்சந்த் மலிசந்தால் கட்டப்பட்ட சாந்திநாத்ஜி மந்திர் உள்ளது. இதன் குவிமாடம், பேனல்கள், ஜன்னல்கள், மேற்கூரையில் உள்ள சிற்பங்கள் அனைத்தும் நுட்பமான மர வேலைப்பாடுகளால் ஆனதாம்.

அடுத்து குவாவல காஞ்சோவைக் காணலாம். பாரசீக, முகலாய, மராட்டிய மற்றும் ஐரோப்பிய கட்டிடக்கலையின் கூறுகள் கொண்ட 4 வீடுகள் கொண்ட கட்டிடம். பழைய அகமதாபாத்தின் காஸ்மோபாலிட்டன் கலாச்சாரத்தைக் காட்டுகிறது. மரங்கள் இல்லாத நிலையில் ஏதேனும் பறவைகள் தங்கள் கூடுகளை தயார் செய்ய அனுமதிக்க வீட்டின் சுவர்களில் ஓட்டை விடப்பட்டிருப்பது சிறப்பு.

அதற்கு அடுத்து நிஷா போல் வீதியில் 1603 ஆம் ஆண்டில் நாகர்ஷேத் குஷால்சந்த் என்பவரால் கட்டப்பட்ட ஜக்வல்லப் ஜெயின் கோயில்.  ஜைனர்கள் கலை மற்றும் கைவினைகளின் காட்சிப்பெட்டகம். அடுத்துள்ள ஜவேரி வாட் பகுதியில் பெரும்பாலும் ஹவேலி வகை வீடுகள், அலங்கரிக்கப்பட்ட முகப்பு மாடங்களுடன் இருப்பதை ரசிக்கலாம்.

கி.பி 1662 இல் கட்டப்பட்ட சாம்பவ்நாத்ஜி தேராசர் அகமதாபாத்தில் உள்ள பழமையான ஜெயின் கோவில். கோயில் சுவரில் உள்ள கல்வெட்டின் படி, அசல் கோயில் மரத்தால் கட்டப்பட்டு பின்னர் 1904 ஆம் ஆண்டு பளிங்குக் கல்லால் மீட்டெடுக்கப்பட்ட நிலத்தடி கோவில். நுழையும் போது குவிமாடம் மற்றும் ஷிகாராவை மட்டுமே பார்க்க முடியும்.

அதற்கு அடுத்தாற்போல் நாம் சதர்னி காட்கி என்று அழைக்கப்பட்ட சௌமுக்ஜி நி காட்கியைக் காண்போம். காட்கிக்கு அருகில் குன்சைஜியின் வைஷ்ணவப் பிரிவு ஹவேலியில் 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தேராசரின் எச்சங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளது.

ஜெயின் நூலகத்திற்கு அருகில் இந்து-ஜைன கட்டிடக்கலை பாணியில் விரிவான அலங்காரத்துடன் கட்டப்பட்டுள்ள அஷ்டபத்ஜியின் பளிங்கு தேராசர் அமைந்துள்ளது. கி.பி 1856 இல் ஷெத் மகன்லால் கரம்சந்தால் கட்டப்பட்டது. ரதிகர் பர்வத்தின் சிவப்பு பளிங்கு கற்களால் 32 நிலைகள் செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

அடுத்த நிறுத்தம் 180 ஆண்டுகள் பழமையான ஹர்குன்வர் ஷேதானி நி ஹவேலி, 60 அறைகளைக் கொண்டுள்ளது. அகமதாபாத்தில் உள்ள மிக நீளமான செதுக்கப்பட்ட மர அடைப்பால் ஆதரிக்கப்படும் இடைவிடாத தூண் பால்கனிகளை கொண்டுள்ள இந்தோ-சீன கட்டிடக்கலை கூறுகளைக் கொண்டுள்ளது.

பீச், பார்ட்டி மட்டும் இல்லைங்க... சவால், சாகச பயணத்திற்கும் ஏற்ற சுற்றுலா தலம் கோவா

பெர்னாண்டஸ் பாலத்தின் சோப்டா பஜார் அகமதாபாத் குஜராத்தில் உள்ள பழமையான புத்தகச் சந்தைகளில் ஒன்றாகும், கி.பி 1884 இல் அமைக்கப்பட்ட இது பயன்படுத்திய மற்றும் புதிய புத்தக கடைகளைக் கொண்டது. அதற்கு அடுத்து உள்ள சந்த்லா ஓல் அகமதாபாத் நகரில் உள்ள பித்தளை பூஜை பொருட்களுக்கான மிகப்பெரிய மற்றும் பழமையான சந்தையாகும்.

ராணி நோ ஹாஜிரோ 15 ஆம் நூற்றாண்டில் பெரிய சுல்தான் அகமது ஷாவால் பழமையான ப்ரோகேட் கலை கொண்டு கட்டப்பட்டது. அந்த ராஜ்யத்தின் ராணிகளின் கல்லறைகளின் தொகுப்பு இது. அதை ஒட்டி

அகமத் ஷாவின் கல்லறை/ பாட்ஷா நோ ஹாஜிரோ / ராஜா நோ ஹாஜிரோ என்று என்ற அரச குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களின் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை தொகுப்பு உள்ளது. இங்கு பெண்கள் நுழைய அனுமதி இல்லை.

அகமதாபாத்தில் உள்ள ஜமா மஸ்ஜித் இந்திய துணைக்கண்டத்தில் இந்த காலகட்டத்தில் கட்டப்பட்ட மிகப்பெரிய மசூதியாகும். ஜனவரி 4, 1424 அன்று சுல்தான் அகமது ஷா கட்டிய இந்த மசூதி, தீன் தர்வாசா என்ற மூன்று வளைவு வாசல்களைக் கொண்டது. இந்த மசூதி முதலில் சுல்தான்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக மட்டுமே இருந்தது. இதை ஓ காதல் கண்மணி படத்தில் பார்க்கலாம்.

முஹரத் போல் வீதி மெஹ்முத் பெக்டாவின் ஆட்சியின் போது நிறுவப்பட்டது, குறைந்தது 100 நகைக் கடைகளைக் கொண்டு நகரின் பொன் மையமாக மாறியுள்ளது. அதன் அருகே அகமதாபாத் பங்குச் சந்தை கட்டிடம் கட்டப்பட்டடுள்ளது.

இத்துடன் பயணம் நிறைவுறும் . வழிகாட்டியுடன் செல்லும் இந்த பயணத்திற்கு இந்தியர்களுக்கு ரூ.200 , வெளிநாட்டவர்களுக்கு ரூ. 300 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும்  விபரங்களுக்கு https://heritagewalkahmedabad.com/ தளத்தைக் காணலாம்

Published by:Ilakkiya GP
First published:

Tags: Ahmedabad, Gujarat, Tourism, Travel