முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / நண்பர்களுடன் 1 நாள் ட்ரிப் செல்ல சென்னைக்கு அருகில் உள்ள அட்டகாசமான அருவி ஸ்பாட்..!

நண்பர்களுடன் 1 நாள் ட்ரிப் செல்ல சென்னைக்கு அருகில் உள்ள அட்டகாசமான அருவி ஸ்பாட்..!

கிடிகி அருவி

கிடிகி அருவி

வாரா வாரம் வீக் எண்டை என்ஜாய் செய்ய புதுச்சேரி சென்றால் போர் அடிக்கும் தானே? இந்த வாரம் அதற்கு மாறாக ஆந்திரா பக்கம் வண்டியை திருப்புங்க..

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

வாரம் முழுக்க உழைத்து விட்டோம். வார இறுதிக்கு எங்காவது புதிய இடத்திற்கு செல்ல வேண்டும், ஒரு நாள் தான் விடுப்பு என்பதால் தூரமாக எங்கேயும் செல்ல முடியாது. சென்னையில் இருக்கும் அனைத்து இடங்களுக்கு போய்விட்டோம். ஒரே நாளில்  சென்னையில் இருந்து போய்வரும் ஸ்பாட் ஏதாவது இருக்கிறதா என்று தேடிக் கொண்டிருப்பவர்களுக்காகவே இந்த செய்தி.

சென்னையில் வேலை செய்யும் ஐடி ஊழியர்கள் வார இறுதியில் வண்டி எடுத்துக்கொண்டு புதுச்சேரி செல்வது தான் வழக்கம். ஆனால் வாராவாரம் பாண்டி சென்றால் போர் அடிக்கும் தானே? இந்த வாரம் அதற்கு மாறாக ஆந்திரா பக்கம் வண்டியை திருப்புங்க.. அங்க ட்ரெக்கிங், நீர்வீழ்ச்சி, குளம் என்று அட்டகாசமான காம்போ சேர்ந்த இடம் ஒன்று இருக்கிறது.

சென்னையில் இருந்து கிட்டத்தட்ட 200 கிமீ தொலைவில் ஆந்திர பிரதேச மாநிலத்தில் கிடிகி நீர்வீழ்ச்சி என்ற இடம் இருக்கு. வேலூர், பள்ளிக்கொண்டான், குடியாத்தம் வழியாக சென்றால் இந்த நீர்வீழ்ச்சியை சுலபமாக அடையலாம். இந்த இடம் மற்ற நீர்வீழ்ச்சியை போல பிரபலமானது இல்லை. அதனால் கூட்டம் கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும். அதனாலேயே இங்கே தனியாக செல்லவேண்டாம் என்று அறிவுறுத்துகிறோம். நண்பர்களாக சேர்ந்து கூட்டமாக போக ஏற்ற இடமாக இருக்கும்.

பிரபலமான இடமாக இல்லாததால் இந்த இடத்திற்கு பொது போக்குவரத்து வாயிலாக செல்வது கொஞ்சம் கடினம். ஆதலால் உங்கள் சொந்த வாகனம் எடுத்து வருவது நல்லது. பைக் அல்லது காரில் ரைடு செல்பவர்களுக்கு ஏற்றது. அதேபோல காலை சீக்கிரம் கிளம்பினால் நாள் முழுவதும் அங்கு செலவழிக்கலாம். மாலை நேரத்திற்கு பின் இந்த இடத்தில் இருப்பது பாதுகாப்பானது அல்ல.

காலை சீக்கிரம் இந்த இடத்தை அடைந்துவிட்டால் பெரிதாக கூட்டமும் இருக்காது. ஜாலியாக குளித்துவிட்டு கூட்டம் வரும்போது கிளம்பலாம். சென்னையில் இருந்து 2 முதல் 3 மணிநேர பயணத்தில் கிடிகி காட்டுப் பகுதியை அடைந்துவிடலாம். அங்கே வண்டியை நிறுத்திவிட்டு சுமார் 2 கிலோ மீட்டர் உள்ளே நடக்கவேண்டும். ஒத்தையடி பாதை ஒன்று இருக்கும். அதில் சரியாக போனால் போதும். வழிமாறிப்போக வாய்ப்பில்லை.

கிட்டத்தட்ட அரைமணிநேரம் நடக்க வேண்டி இருக்கும். ஆனால் சலிப்பு தெரியாத அளவு காட்டில் உள்ள பசுமையும் சிறிய சிறிய ஓடைகளும் உங்களுக்கு உத்வேகம் அளித்துக்கொண்டே இருக்கும். அதைத்தாண்டி போனால் “சோலைகளுக்கு நடுவே நீர்வீழ்ச்சி” என்று எழுத்தாளர்கள் வர்ணிப்பதை கண்முன் காட்டியது போன்ற ஒரு காட்சி இருக்கும்.

ஆர்ப்பரித்து கொட்டும் நீர்வீழ்ச்சியையும், அது உருவாக்கிய அழகான குளத்தையும் நீங்கள் காணலாம். குளத்தில் இறங்கி நீர்வீழ்ச்சி அருகே சென்று குளிக்க முடியும். ஆனால் குளம் ஆங்காங்கே ஆழமாக இருக்கும். நீச்சல் தெரிந்திருந்தால் நீச்சல் அடித்து அருவி அருகே போவது நல்லது. வெயிலுக்கு இதமாக ஆற அமர குளித்துவிட்டு பின்னர் குளக்கரை ஓரம் அமர்ந்து விளையாடலாம்.

இந்த இடம் கொஞ்சம் ஆழம் அதிகம் இருப்பதால் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளை அழைத்து வருவது கொஞ்சம் ரிஸ்க். ஆனால் இந்த காட்டுப்பகுதிக்கு முன்னதாக ஒரு சிறிய செக் டேம் உள்ளது. அங்கு ஆழம் குறைவாக இருக்கும். அங்கே குழந்தைகளை விளையாட வைக்கலாம். அங்கும் தண்ணீர் கொட்டுவது அருவி போல இருக்கும்.

இதையும் பாருங்க: இந்தியாவிலேயே வெளிநாடுகளை போன்ற வித்தியாசமான இடங்கள் இவ்வளவு இருக்கா... லிஸ்ட் இதோ...!

அதேபோல் முக்கியமான மற்றொரு விஷயம் என்னவென்றால் இந்த நீர்வீழ்ச்சிக்கு அருகே கடைகள் ஏதும் கிடையாது. உங்களுக்கு தேவையான அனைத்தையும் நீங்கள் தான் எடுத்துச் செல்லவேண்டும். உணவு, மாற்று உடை, தண்ணீர் என்று எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு உள்ளே செல்லுங்கள். சூரியன் அஸ்தமிக்கும் நேரம் காட்டில் இருந்து வெளியே வந்து சென்னைக்கு திரும்பிவிடலாம்.

First published:

Tags: Falls, Travel, Trip