ஜெர்மனியின் பவேரியாவின் டோனா-ரைஸ் மாவட்டத்தில் உள்ள நோர்ட்லிங்கன் நகரம் உலகில் மற்ற எந்த நகரத்திற்கும் இல்லாத தனித்துவ சிறப்பை கொண்டுள்ளது. அப்படி என்ன பெரிதாக இந்த நகரம் வித்தியாசமானது என்று கேட்டால் இந்த நகரம் அமைந்துள்ள இடம் தான் காரணம்.
இந்த உலகத்தில் உயரமான மலையில் உள்ள நகரம், தென்கோடி நகரம், வடகோடி நகரம், கடல் மட்டத்தை விட தாழ்ந்த நகரம் என்று கூட பல நகரங்களின் அமைப்புகளை பார்த்திருப்போம். ஆனால் முழுக்க முழுக்க விண்கல் பள்ளத்தில் ஒரு நகரம் அமைந்துள்ளது என்று சொன்னால் அது ஆச்சரியம் தானே?
விண்கல் பள்ளத்தில் குளம் உண்டாகும், ஏரி உண்டாகும். இந்தியாவில் மகாராஷ்டிரா பகுதியில் உள்ள லோனார் ஏரி விண்கல் பள்ளத்தால் உருவானது. ஆனால் ஜெர்மனியில் 20000 மக்கள்தொகை கொண்ட இந்த அழகான இடைக்கால நகரம் 25 கிமீ விட்டம் கொண்ட ஒரு விண்கல் பள்ளத்தில் அமைந்துள்ளது.
இதையும் படிங்க: 4400 மீட்டர் உயரத்தில் கடல் உயிர்கள் படிமம் கொண்ட இந்திய கிராமம் பற்றி தெரியுமா?
Nördlinger Ries என்று அழைக்கப்படும் இந்த பள்ளம், சுமார் 14.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மைல் அளவு விட்டம் கொண்ட ஒரு விண்கல் பூமியில் மோதியபோது உருவானது. ஆனால் 50 ஆண்டுகளுக்கு முனபுதான் இந்த உண்மை தெரியவந்துள்ளது. பல ஆண்டுகளாக, நகரம் அமைந்துள்ள ஆழமற்ற தாழ்வு பகுதி ஒரு எரிமலை பள்ளம் என்று நம்பப்பட்டது.
பின்னர் 1960 ஆம் ஆண்டில்,யூஜின் ஷூமேக்கர் மற்றும் எட்வர்ட் சாவோ, என்ற இரண்டு அமெரிக்க விண்வெளி விஞ்ஞானிகள் தான் இந்த பள்ளம் எரிமலை முகடு அல்ல, உண்மையில் விண்கல் தாக்கத்தால் ஏற்பட்ட பள்ளம் என்பதை நிரூபித்தார்கள். கண்டுபிடித்த சம்பவம் கூட சுவாரசியமானதே.
நோர்ட்லிங்கன் நகரில் உள்ள ஒரு தேவாலயத்திற்கு ஷூமேக்கர் ஒருமுறை சென்றுள்ளார். அதன் சுவர்களின் உறுதியை கண்டு வியந்த அவர் அந்த சுவர்கள் எந்த பொருளால் கட்டப்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ள சுவர்களைக் கீறி பார்த்துள்ளார். அந்த சுவரில் கிடைத்த துகள்களில் குவார்ட்ஸ் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
ஏனென்றால் பூமியில் குவார்ட்ஸ் அவ்வளவு அதிக அளவில் எளிதாக கிடைக்காது. இது பொதுவாக விண்கல் தாக்கத்துடன் தொடர்புடைய அதிர்ச்சி அழுத்தங்களால் மட்டுமே உருவாகும். விண்கற்கள் பூமியில் மோதி தொடர்ச்சியாக தாக்கத்தை ஏற்படுத்தினால் மட்டுமே இந்த தனிமம் உருப்பெறும். உடனே ஷூமேக்கர் அங்குள்ள விசித்திரமான பாறை அமைப்புகளை தொடர்ந்து ஆய்வு செய்துள்ளார். அதன் விளைவாக அமைத்துள்ள பள்ளம் ஒரு விண்கல் தாக்கத்தால் ஏற்பட்டது என்பதை உறுதி செய்தார்.
இதையும் படிங்க: ஐரோப்பிய கடற்படையை வென்ற கன்னியாகுமரியின் பொக்கிஷ பீச் நகரம் 'குளச்சல்' பற்றித் தெரியுமா?
ஜெர்மனியில் இதே போன்று 3.8 கிமீ விட்டம் கொண்ட ஸ்டீன்ஹெய்ம் பள்ளம் என்று அழைக்கப்படும் மற்றொரு விண்கல் தாக்கப் பள்ளம் உள்ளது. இது நோர்ட்லிங்கன் நகரத்திலிருந்து தென்மேற்கே 42 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த இரண்டு பள்ளங்களும் ஒரே விண்கல்லின் தாக்கத்தால் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. ஆனால் அது அளவில் சிறியது.
இந்த பள்ளம் பெரியது என்பதால் நம் ஊரில் ஏரிகளை ஆக்கிரமித்து எப்படி ஊரை உருவாக்கினார்களோ அதே போல அந்த விண்கல் பள்ளத்தில் ஒரு நகரத்தையே உருவாக்கியுள்ளனர். வட்ட வடிவ பள்ளம் என்பதால் அதற்கு ஏற்றபடியே நகரத்தையும் வட்டமாக வடிவமைத்துள்ளனர். பார்க்கும்போது இந்த நகரம் தனித்த அழகுடன் காட்சியளிக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Germany, Meteorology department, Travel Guide, Trip