அழகான இடங்கள், வித்தியாசமான பாரம்பரியங்கள் நிறைந்த நாடு இந்தியா! முக்கியமாக மலை கிராமங்களை எடுத்துக்கொண்டால் அங்குள்ள பழங்குடிகள் தங்களுக்கான பாரம்பரியத்தை நூற்றாண்டுகள் கடந்தும் பின்பற்றி வருகின்றனர். அப்படி தமிழகத்தில் இருக்கும் ஒரு தனித்துவமான கிராமத்தை பற்றி தான் சொல்ல இருக்கிறோம். அதுவும் காலில் அணியும் செருப்புகளுக்கு தடை விதிக்கும் கிராமம்.
கொடைக்கானல் நம் எல்லோருக்கும் நன்கு பழக்கப்பட்ட இடம். அங்கே உள்ள சுற்றுலா தளங்களில் ஒன்றான டால்பின் நோஸ் வ்யூபாயிண்ட் நோக்கிச் செல்லும் பாதை உள்ளது. அதே பாதையில் கொஞ்சம் இடதுபுறம் நடந்தால் வெள்ளகவி கிராமத்திற்கு பாதை கிடைத்து விடும்.
வண்டியில் சென்றாலும் இந்த புள்ளி வரை தான் வண்டி செல்லும் இதற்கு பிறகு நடந்துதான் செல்லவேண்டும். இந்த கிராமத்திற்கு ரோடு, வண்டி வசதிகள் கிடையாது. வெள்ளகவி கிராமத்தை நோக்கி செல்லும் ஒரே பாதை என்பதால் பாதையில் தொலைந்து போவதற்கான வாய்ப்புகள் குறைவு. பெரும்பாலும் கிராமவாசிகள் பாதையில் ஏறி இறங்கி நடந்து செல்வதைக் காணலாம்.
சுமார் 3.5 கிமீ அழகிய மலையேற்றப்பாதையில் நடந்தால் அடர்ந்த காடுகளுக்கு நடுவே ஒளிந்திருக்கும் மலை கிராமம் நம்மை அப்போது வரவேற்கும். கிராமத்திற்குள் நுழையும் முன் ஒரு பெரிய மரம் இருக்கும். அதன் அருகே , 'தயவுசெய்து பாத அணிகளை அகற்றவும்' என்ற பலகை வைக்கப்பட்டிருக்கும். அந்த மரம் வரை தான் காலணிகளுக்கு அனுமதி. அதை தாண்டி உள்ளே செல்லும்போது வெறும் காலில் தான் செல்ல வேண்டும்.
சுமார் 100 குடும்பங்கள், 2, 3 பலசரக்கு, தேநீர் கடைகள் என்று அடக்கமாக அமைந்து இருக்கும் இந்த கிராமத்தில் யாரும் செருப்பு அணிவதில்லை. அதற்கு அவர்களுக்கு ஒரு சென்டிமென்டும் உள்ளது. இந்த கிராமத்தில் வீடுகளை விட கோவில்கள்தான் அதிகமாக இருப்பது போல் தோன்றும். சுமார் 25 கோவிகள் இந்த கிராமத்தில் இருக்கின்றன.
இந்த கிராமத்தை சுற்றி அவகாடோ மற்றும் காப்பி பயிரிடப்படுகிறது. பெரும்பாலும் அதன் மூலம் தான் வியாபாரங்களைச் செய்து வாழ்கின்றனர்.
கிராம மக்களின் நம்பிக்கை படி இந்த கிராமத்தில் கடவுளும் மனிதர்களும் இணைந்து வாழ்கின்றனர். கடவுள் வாழும் இடம் புனித தலமாக கருதப்படுவதால் இந்த முழு கிராமமும் கோவிலாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: துறவி பெயர் சொன்னால் காற்றில் மிதக்கும் 90 கிலோ கல்...எங்கே இருக்கிறது தெரியுமா.?
புனிதத்தலங்களுக்குள் செருப்பு அணிவது தவறு என்பதால் நாங்கள் எப்போதும் செருப்பை ஊருக்குள் அணிவதில்லை. வெளியில் இருந்து வருபவர்களும் ஊருக்கு வெளியே செருப்பை விட்டுவிடவேண்டும் என்பது எங்கள் வழக்கம் என்கின்றனர். இது எதோ 30 -40 ஆண்டுகளில் வந்தது அல்ல, பல நூற்றாண்டுகளாகவே இப்படி தான் வாழ்ந்து வருகின்றனர்.
சிறிய கிராமம் என்பதால் இந்த கிராமத்தில் பள்ளிகள் ஏதும் இல்லை. பொருட்கள் வாங்கவும், படிப்பிற்காகவும் தினமும் இந்த மலையில் இருந்து இறங்கி கொடைக்கானல் பகுதிக்கு தான் செல்லவேண்டும். இத்தகைய கஷ்டங்கள் இருந்தபோதிலும், வெள்ளகவி மக்கள் மகிழ்ச்சியாகவும், மிகுந்த நிம்மதியுடனும், அன்புடனும் இருக்கிறார்கள். இது அவர்களுக்கு சுமையாக இருப்பதில்லை. இயற்கையோடு இயைந்து வாழ்வதாக பெருமிதம் கொள்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.