மக்கள் வெவ்வேறு கடவுள்களை வணங்குவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். மரம், ஓவியம், வாள், வேல் என்று எல்லாமே நம் ஊரில் தெய்வத்தின் வடிவமாக பார்க்கப்படுகிறது. ஆனால் ஒரு மோட்டார் பைக் சிலையாக வழிபடப்படுவதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? ஒரு பைக்கிற்கு கோவில் கட்டப்பட்ட கதையை கேட்டிருக்கிறீர்களா? இப்போது கேளுங்கள்..
மலையாளத்தில் வெளியான கிலோ மீட்டர்ஸ் அண்ட் கிலோமீட்டர்ஸ் படம் பார்த்தவர்கள் இந்த கோவிலை நிச்சயம் பார்த்திருப்பீர்கள். ராஜஸ்தானில் ஜோத்பூரிலிருந்து 50 கிமீ தொலைவிலும், பாலியிலிருந்து 20 கிமீ தொலைவிலும் NH-62 ஜோத்பூர்-பாலி விரைவுச் சாலையில் ஒரு ராயல் என்ஃபீல்டு புல்லட் கம்பீரமாக நின்று கொண்டு இருக்கும்.
அதை சுற்றி மாலையும் வேண்டுதல் பொருட்களையும் காணலாம். இந்த வழியாக செல்லும் ரைடர்களும், மக்களும் இந்த இடத்தை பார்க்காமல் செல்வதில்லை. ஒரு புல்லட்டை வைத்து ஏன் வழிபடுகிறார்கள் என்று தானே யோசிக்கிறீர்கள்… ஓம் பன்னா தாம் அல்லது புல்லட் பாபா கோயிலைப் பற்றி சுவாரஸ்யமான ஒரு கதை உண்டு.
ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு இரவில், ஓம் சிங் ரத்தோர் என்ற இளைஞன் பாங்டியிலிருந்து ராஜஸ்தானின் பாலிக்கு அருகிலுள்ள சோட்டிலா கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, அவரது பைக் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. பைக் மரத்தில் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஓம் இறந்தார்.
உள்ளூர் போலீசார் பைக்கை தங்கள் காவலில் எடுத்து காவல் நிலையத்தில் நிறுத்தியுள்ளனர். ஆனால் அடுத்த நாளே, பைக் நிறுத்தப்பட்டிருந்த காவல் நிலையத்தில் இருந்து மர்மமான முறையில் காணாமல் போய்விட்டது. பின்னர் அது விபத்து நடந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில், இது ஏதோ சமூக விரோதிகளின் செயல் என்று நினைத்த போலீசார், பைக்கை மீண்டும் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். இந்த முறை வண்டியை செயின்களால் பூட்டி வைத்துள்ளனர். பெட்ரோல் டேங்க்கையும் காலி செய்துள்ளனர்.
மறுநாளும் வண்டி விபத்து நடந்த இடத்திற்கு மாறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஒவ்வொரு முறையும் விடிவதற்குள் பைக் தானாக விபத்து நடந்த இடத்துக்குத் திரும்பியது. இந்த செய்தி காட்டுத்தீ போல அருகிலுள்ள கிராமங்களுக்கு பரவியது. அதிலிருந்து, கிராம மக்கள் ' புல்லட் பைக்கை புல்லட் பாபாவாக மாற்றி வணங்கத் தொடங்கினர். மேலும், சோட்டிலா கிராமத்தைச் சுற்றி சாலை விபத்துகள் கடந்த சில ஆண்டுகளில் வெகுவாகக் குறைந்துள்ளதால் இன்றும் கூட, ஓம் பன்னாவின் ஆவி விபத்து நடந்த NH-62 ஜோத்பூர்-பாலி நெடுஞ்சாலையில் தனது மோட்டார் சைக்கிளை ஓட்டி, துயரத்தில் இருக்கும் பயணிகளுக்கு உதவுவதாக நம்பப்படுகிறது.
இதனால் இருசக்கர வாகனத்தில் ஆல் இந்தியா ட்ரிப் அடிக்கும் பெரும்பாலான மக்கள் தங்கள் பயணம் பாதுகாப்பாக நிறைவடைய வேண்டும் என்று இங்கு வந்து வேண்டிக்கொள்கின்றனர். நீங்க ராஜஸ்தான் ட்ரிப் போகும் போது புல்லட் பாபாவை பார்க்க மறந்துடாதீங்க…
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Travel, Travel Guide