ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ஹனிமூன் தெரியும்.. ஆனால் டிரெண்டில் இருக்கும் ‘பேபிமூன்’ பற்றி தெரியுமா?

ஹனிமூன் தெரியும்.. ஆனால் டிரெண்டில் இருக்கும் ‘பேபிமூன்’ பற்றி தெரியுமா?

பேபி மூன் என்றால் என்ன?

பேபி மூன் என்றால் என்ன?

Babymoon: டிராவல் என்பது எல்லோரது வாழ்க்கையிலும் ஒரு அங்கமாக மாறி வருகிற சூழலில் பேபிமூன் என்ற ஒன்று தற்போது டிரெண்டாகி வருகிறது.

 • Trending Desk
 • 3 minute read
 • Last Updated :

  சமீபத்தில் பிரபல பாலிவுட் நட்சத்திர தம்பதிகளான ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூரின் பேபி மூன் புகைப்படங்களும் ரீல்ஸ்களும் இணைய தளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. ஹனிமூன் தெரியும் அதென்ன பேபி மூன் என்று பலருக்கும் குழப்பம் இருக்கலாம்.

  பேபி மூன் என்றால் என்ன, அது எந்த அளவுக்கு தம்பதிகளுக்குள் நெருக்கத்தையும் இணக்கத்தையும் அதிகரிக்கும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

  பேபி மூன் என்றால் என்ன?

  பேபி மூன் என்பது ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் பொழுது தன் கணவருடன் செல்லக்கூடிய ஒரு மினி சுற்றுலா அல்லது மினி ஹனிமூன் என்று கூறலாம். குழந்தை வயிற்றில் வளர்ந்து கொண்டிருக்கும் போது செல்லக்கூடிய சுற்றுலா என்பதால் பேபி மூன் என்று கூறப்படுகிறது.

  குழந்தை பிறந்த பிறகு, குழந்தை வளர்ப்பு, குழந்தையை கவனித்துக்கொள்வது தன்னுடைய உடல் நலத்தை மேம்படுத்துவது என்று பிரசவத்திற்கு பிறகு குழந்தை மீதுதான் பெரும்பாலான பெண்களுக்கு அதிக கவனம் செலுத்த முடியும். பல பெண்களுக்கும் தன்னுடைய உடல்நிலை சீர் செய்வதற்கு ஓராண்டுக்கு மேலாகவும் தேவைப்படும். எனவே குழந்தை பிறந்த பிறகு தம்பதிகளுக்குள் ஒருவருக்கொருவர் நேரம் செலவிட நினைத்தாலுமே குழந்தை தான் பிரதானமாக இருக்கும்.

  எனவே குழந்தை பிறப்பதற்கு முன்பு, அப்பா அம்மாவாக மாறுவதற்கு முன்பு கணவன் மனைவியாக, காதலர்களாக செல்லும் ஒரு ஜாலியான ட்ரிப் தான் இந்த பேபி மூன்.

  தங்களுக்கான நேரம்

  பிடித்த இடத்திற்கு. மனதுக்கு பிடித்த நபருடன் செலவிடுவது என்பதை எல்லோருக்குமே புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு கேட்கவா வேண்டும்?

  வேலை பரபரப்பில் ஓடிக் கொண்டிருந்தாலும், சில நாட்களாவது கணவனுடன், மனைவியுடன் தனியே செலவழிக்க முடியாதா என்ற ஏக்கம் பலருக்கும் இருக்கும். தங்களுக்கென்று எந்த தொந்தரவும் இல்லாமல், நிம்மதியாக, மகிழ்ச்சியாக, ரிலாக்ஸாக பேபி மூனில் நேரம் செலவழிக்க முடியும்.

  கணவருடன் தனியே சில நாட்கள்  செலவழிக்கும் போது பெண்களுக்கு மகிழ்ச்சியாகவும், ஹார்மோன்கள் சுரந்து பலவிதங்களில் உதவியாக இருக்கிறது. அதே போல, ஆண்களுக்கும், கர்ப்பமான தன்னுடைய மனைவியை ஸ்பெஷலாக கவனித்துக் கொள்ள ஒரு வாய்ப்பு. கணவன் மனைவி நெருக்கமாக இருக்கவும் உதவும்.

  மேலும், குழந்தை பிறந்தவுடன், கணவன் / மனைவிக்கு பிரத்யேகமான நேரம் ஒதுக்க முடியாமல் போகலாம். அந்த இடைவெளியை நிரப்ப, முன்கூட்டியே பேபி மூன் செல்வது உதவும்.

  குழந்தை வருவதற்கு முன்பு ஓய்வு

  பேபி மூன் என்று கூறப்படுவது கொஞ்சம் ரொமாண்டிக்காக தெரிந்தாலும் ஒரு சில தம்பதிகளுக்கு இது மிகப்பெரிய ஓய்வாகத்தான் இருக்கிறது. குழந்தை பிறந்த பிறகு ஒரு நாளைக்கு 48 மணி நேரம் இருந்தால் கூட போதாது என்று கூறும் அளவுக்கு வாழ்க்கையை மிகவும் பிசியாக மாறிவிடும். ‘எனக்கு கொஞ்ச நேரம் ஓய்வு வேண்டும்’ என்று உடலில் இருக்கும் அத்தனை செல்களும் கெஞ்சினாலும், குழந்தையை பார்த்துக் கொள்வது முக்கியமாக இருப்பதால் ஓய்வு என்பது என்ன என்று சந்தேகம் வந்துவிடும். எனவே தங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய மிகப்பெரிய மாற்றத்தை எதிர்கொள்வதற்கு தேவையான ஓய்வை சில மாதங்களுக்கு முன்பே பேபி மூன் வழங்குகிறது. அதுமட்டுமல்லாமல், யாருடைய தலையீடும் இல்லாமல் கணவன் மனைவி குழந்தையைப் பற்றி, எதிர்கால திட்டங்களை பற்றி பேசவும் உதவியாக இருக்கும்.

  யாரெல்லாம் பேபி மூன் செல்லலாம்?

  திருமணமான எல்லா தம்பதிகளும் ஹனி மூன் செல்வது போல, எல்லா பெண்களுமே கர்ப்ப காலத்தில் பேபி மூன் திட்டமிடலாம். ஆனால் பேபி முன் எப்போது செல்வது என்பதற்கு கால நேரம் இருக்கிறது.

  கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட முதல் மூன்று மாதங்களில் வாந்தி, மசக்கை மற்றும் உடல் ரீதியான அசௌகரியம் ஏற்படக்கூடிய காலங்களில் திட்டமிடக் கூடாது. அதேபோல கடைசி மூன்று மாதங்களிலும் பயணம் செல்வது உகந்ததல்ல என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். எனவே நான்காவது மாதம் முதல் ஏழாவது மாதம் வரை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் பேபி மூனுக்கு திட்டமிடலாம்.

  பேபி மூனுக்கு திட்டமிடும் கர்ப்பிணிகள் கவனத்திற்கு

  பேபி மூனுக்கு திட்டமிடக்கூடிய கர்ப்பிணி பெண்கள் எந்த இடத்திற்கு செல்கிறார்கள் என்பது மட்டுமல்லாமல், பின்வரும் விஷயங்களையும் கவனிக்க வேண்டும்.

  பயணத்துக்கு உடல் நிலை ஆரோக்கியமாக இருப்பதை மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். ரயில் அல்லது விமானத்தில் செல்கிறீர்களா, சாலைகளில் நீண்ட தூரம் பயணம் செல்வது உகந்ததா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். பயணம் செல்லும் இடத்தில் மருத்துவ வசதி இருக்கிறதா என்பதையெல்லாம் தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல திட்டமிட வேண்டும்.

  Published by:Saravana Siddharth
  First published:

  Tags: Honeymoon, Travel Tips