1498 இல் இந்தியாவிற்கு போர்ச்சுகீசியரான வாஸ்கோடகாமா வந்த நாள் முதல் போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள், டேனிஷ்காரர்கள், பிரெஞ்சு நாட்டினர் என்று வரிசையாக வந்து வணிகம் செய்தனர்.
ஐரோப்பியர்கள் வந்து போனதில் நம் நகரங்கள் சில புதிய கட்டிட அமைப்புகளையும் நகர வளர்ச்சியும் பெற்றது. முக்கியமாக கடற்கரையோர நாகரிகங்கள் அதிகரித்தன. அப்படி தமிழகத்திற்கு வந்த டச்சுக்காரர்கள் தரங்கம்பாடி, நாகப்பட்டினம், புன்னக்காயல், போர்டோ நோவோ என்கிற பரங்கிப்பேட்டை, கடலூர் (திருப்பதிரிபுலியூர்) மற்றும் தேவனாம்பட்டினம் ஆகிய இடங்களில் தங்கள் கோட்டைகளையும் காலணிகளையும் அமைத்தனர்.
அப்படி டச்சுக்காரர்கள் விட்டுச்சென்ற ஒரு கோட்டைக்கு தான் இன்று நாம் உலா செல்ல இருக்கிறோம்....
13ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள் படி, சோழர்களின் ஆட்சியாளர்களான சம்புவராய தலைவர்கள் ஆண்ட ராஜநாராயண பட்டினம் என்று அழைக்கப்பட்ட நகரம் டச்சு கைகளுக்கு சேர்ந்த பின்னர் சதுரங்கப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது. டச்சுக்காரர்கள் அவர்களுக்கு சொல்ல எளிதாக இருக்க சத்ராஸ் என்று வைத்துக்கொண்டனர்.
கல்பாக்கத்திற்கு அருகில் உள்ள இந்த சிறிய நகரம், 1600 களில் ஒரு செழிப்பான வர்த்தக துறைமுகமாக இருந்தது என்பது பலருக்குத் தெரியாது. 1612 ஆம் ஆண்டில் கர்நாடக நவாபிடமிருந்து பெறப்பட்ட சத்ராஸ் என்ற இடம் பின்னாளில் டச்சு துறைமுகம் மற்றும் வர்த்தக குடியேற்றமாக மாறியது.
டச்சு கிழக்கிந்திய கம்பெனி மஸ்லின் துணி மற்றும் பிற கலைபொருட்களை உற்பத்தி செய்வதற்கும் வர்த்தகம் செய்வதற்கும் ஒரு தொழிற்சாலையை சத்ராஸ்ஸில் நிறுவியது. பின்னர் தொழிற்சாலையைச் சுற்றி, ஒரு கோட்டை கட்டப்பட்டது.
பிலிப் பால்டேயஸ் என்ற டச்சு மதகுரு, அன்றைய மெட்ராஸ் நகரத்திற்கு செல்லும் வழியை எழுதும் போது, "டயர்போபிளியரில் இருந்து, நீங்கள் போலெசெர், பொலெமோயர் மற்றும் அலெம்ப்ரூ வழியாக சத்ராஸ்பட்டனத்திற்குச் செல்கிறீர்கள், அங்கு டச்சுக்காரர்களுக்கு ஒரு தொழிற்சாலை உள்ளது. அங்கிருந்து வழி மதராஸ்பட்டனதிற்குச் செல்கிறது. அங்கே ஆங்கிலேயர்களுக்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டை உள்ளது" என்று எழுதியுள்ளாராம்.
அப்படி வழிக்குறிப்பாக சொல்லும் அளவுக்கு பேமஸாக இருந்த சதுரங்கப்பட்டின கோட்டையில் டச்சு அதிகாரிகள் தங்கள் மாலை விருந்துகளை நடத்தும் கூடங்கள், அதிகாரிகளின் குடியிருப்புகள், வளைவுகளோடு அமைக்கப்பட்ட தானியக் களஞ்சியங்கள், பொது சமையலறை மற்றும் நடன அரங்கம் என்று பல அம்சங்கள் இங்கே உள்ளன. தவிர, 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரிகள் மற்றும் வீரர்களின் கல்லறைகளும் உள்ளன.
இதையும் படிங்க :பக்கிங்ஹாம் அரண்மனையை விட பிரம்மாண்ட அரண்மனை இந்தியாவில் இருக்கிறதாம்! உங்களுக்கு தெரியுமா..
கல்லறைக் கற்கள் தானே என்று அசால்டாக இல்லாமல் அதைக் கூட அழகாக செதுக்கியுள்ளனர். அவற்றில் சில பிரபுத்துவத்தை குறிக்கும் கோட் ஆஃப் ஆர்ம்ஸுடன் உள்ளன. 1782 இல் டச்சு - ஆங்கில போரின் போது இது பலத்த சேதங்களுக்கு உள்ளானது. 1818 இல் மொத்தமாக ஆங்கிலேய கட்டுப்பாட்டுக்குள் போனது.
அதன் பின்னர் கவனிப்பாரற்று கிடந்தது பின்னர் இந்திய தொல்லியல் துறை இந்த கோட்டையை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பாதுகாத்து வருகிறது. பூச்சுகள் அன்றி வெறும் செங்கல் சுவராக இருந்தாலும் கம்பிர தோற்றம் குறையாமல் இருக்கிறது. இன்னொரு சுவாரசிய தகவல் என்ன தெரியுமா? இங்கு செய்யப்பட்ட செங்கலை வைத்து தான் சிலோனில் டச்சுக்காரர்கள் தங்கள் கோட்டையைக் கட்டினார்களாம்.
அதிக மக்களுக்கு இப்படி ஒரு கோட்டை இருப்பதே தெரியாது. கல்பாக்கம் என்றால் அணுமின் நிலையம் என்று தான் தெரியும். அதற்கு அருகே தான் இந்த கோட்டையும் இருக்கிறது. கல்பாக்கம் பக்கம் போனால் இந்த கம்பீர கோட்டையை பார்க்க மறந்துராதீங்க மக்களே! ஒரு நாள் ட்ரிப்புக்கு ஏற்ற இடமாக இருக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: History tour, Tamil News, Travel, Travel Guide