ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

பக்கிங்ஹாம் அரண்மனையை விட பிரம்மாண்ட அரண்மனை இந்தியாவில் இருக்கிறதாம்! உங்களுக்கு தெரியுமா..

பக்கிங்ஹாம் அரண்மனையை விட பிரம்மாண்ட அரண்மனை இந்தியாவில் இருக்கிறதாம்! உங்களுக்கு தெரியுமா..

லக்ஷ்மிவிலாஸ் அரண்மனை

லக்ஷ்மிவிலாஸ் அரண்மனை

இந்த அரண்மனையில் 1890 களின் லிஃப்ட் உள்ளது. இன்றைய லிப்ட்கள் அடிக்கடி நின்று விடுகிறது. ஆனால் அது இன்றும் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Gujarat, India

உலகின் பெரிய அரண்மனை என்றால் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது பக்கிங்ஹாம் அரண்மனை தான். ஆனால் அதை விட 4 மடங்கு பெரிய அரண்மனை குஜராத்தில் உள்ளது என்று சொன்னால் நம்புவீர்களா? அந்த அழகிய அரண்மனையைப் பற்றி வார்த்தைகளில் ஒரு குட்டி ட்ரிப் அழைத்து செல்கிறோம் வாருங்கள்…

குஜராத்தின் புகழ்பெற்ற கலாச்சார மையமான வதோதராவின் மையப்பகுதியில் அமைந்துள்ள லக்ஷ்மி விலாஸ் அரண்மனை 700 ஏக்கர் நிலப்பரப்பில் மொத்தம் 170 அறைகள் கொண்டு உருவாக்கப்பட்டது. வெளியில் இருந்து பார்க்கும்போதே அதன் பிரம்மாண்டமும் அழகும் பார்ப்பவரை ஆச்சரியபட வைக்கும்.

லக்ஷ்மி விலாஸ் அரண்மனையின் கட்டிடக் கலைஞரான மேஜர் சார்லஸ் மாண்ட், கட்டிடக்கலை தவறு காரணமாக லக்ஷ்மி விலாஸ் விரைவில் இடிந்து விழும் என்று அவர் சுயமதிப்பீடு காரணமாக அரண்மனை கட்டி முடிக்கப்படுவதற்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கதைகள் கூறுகிறது. ஆனால் அது இப்போது கிட்டத்தட்ட 125 ஆண்டுகளாக நிலைத்து நின்று கொண்டு இருக்கிறது.

தற்போது, ​​இது பரோடாவின் கெய்க்வாட்ஸின் அற்புதமான அரச இல்லமாக விளங்கும் இந்த அரண்மனைக்கு செல்லும் சாலை பிரிவில் ரம்யமான அதே நேரம் தனித்துவமான மினார்களோடு கூடிய ஒரு வளைவு அமைக்கப்பட்டிருக்கும்.

அரண்மனையின்  முன்பு, 20 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட ஒரு பெரிய கோல்ஃப் மைதானம் உள்ளது. இங்கே பொதுமக்கள் கோல்ஃப் விளையாட  அனுமதிக்கப்படுகின்றனர். அப்படியே அங்கிருந்து பார்த்தால்  வானத்தை முட்டிவிடுமோ என்று சொல்லும் அளவு உயரமான கோபுரத்தில் ஒரு மணிக்கூண்டு இருக்கும். அரண்மனை முகப்பில் மயில் உருவங்களால் ஆன நீரூற்று உங்களை வரவேற்கும்.

1890 ஆம் ஆண்டு மகாராஜா மூன்றாம் சாயாஜிராவ் கெய்க்வாட் ஆட்சியின் கீழ் கட்டப்பட்ட லக்ஷ்மி விலாஸ் அரண்மனையின் கட்டிடக்கலை இந்தோ சாராசெனிக் கட்டிடக்கலையின் அற்புதமான கைவினைத்திறனைக் காட்டுகிறது. லக்ஷ்மி விலாஸ் அரண்மனையில் கோதிக், முஸ்லீம் மற்றும் இந்து கூறுகளின் கலவையை அதன் குவிமாடங்கள், மினாரெட்கள் மற்றும் வளைவுகளில் காணலாம். இந்த அற்புதமான கட்டிடக்கலையை முடிக்க 12 ஆண்டுகளுக்கு மேல் ஆனதாம்.

லக்ஷ்மி விலாஸ் அரண்மனை வளாகத்தில் உள்ள பல கட்டிடங்கள் இப்போது அருங்காட்சியகங்களாகவும், பிரமாண்டமான கொண்டாட்டங்களுக்காக விருந்து கூடங்களாகவும் மாற்றப்பட்டுள்ளன. தொல்பொருட்களைக் காட்சிப்படுத்தும் அருங்காட்சியகம் ஒரு காலத்தில் மன்னரின் குழந்தைகளின் பள்ளியாக இருந்ததாக வரலாறு கூறுகிறது. அதேபோல் அரண்மனைக் குழந்தைகள் பள்ளி செல்ல குட்டி ரயில் பாதை கூட இருந்ததாம்.

இதையும் படிங்க : பயணிகள் கவனத்திற்கு.. ஊட்டி மலையில் ஒரு திப்பு சுல்தான் கோட்டை.. உங்களுக்காக காத்துகொண்டு இருக்கிறது .....!

லக்ஷ்மி விலாஸ்  அரண்மனையில் 1890களின் லிஃப்ட் உள்ளது. இன்றைய லிப்ட்கள் அடிக்கடி நின்று விடுகிறது. ஆனால் அது இன்றும் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. அதேபோல் மயில்களின் வடிவமைப்பில் நுணுக்கமாக செதுக்கப்பட்ட அலங்கரிக்கப்பட்ட படிக்கட்டு ஒன்றும் நம்மை ஈர்க்கும்.

அரண்மனை  உள்ளே நுழைந்ததும் தர்பார் ஹால் உள்ளது.அரச விழாக் கூட்டங்கள் மற்றும் கலாச்சார இரவு நிகழ்வுகள் கொண்டாடப்பட்ட இந்த பெரிய அரங்கம் தூண்கள் ஏதும் இடையே இல்லாமல் பிரம்மாண்டமாக நிற்கிறது. அதைத் தாண்டி போனால் மகாராஜா பிரதாப் சிங், மகாராஜா ஃபதே சிங் மற்றும் மகாராஜா ரஞ்சித் சிங் ஆகியோருக்கு  முடிசூட்டிய கெய்க்வாட் குடும்பத்தினரின் முடிசூட்டு மண்டபம் உள்ளது. இது அவர்களது புனிதமான இடம் என்பதால் காலணிகளை வெளியே விட்டுவிட்டு உள்ளே சென்று பார்க்க வேண்டும். புகழ்பெற்ற ஓவியரான ராஜா ரவி வர்மாவின் ஓவியங்கள் இங்கே நிரம்பியுள்ளன.

அதை தாண்டி உள்ளே சென்றால் பிரமாண்டமான யானை மண்டபம்/ஹாத்தி மண்டபம் உள்ளது. அழகான சரவிளக்குகள் மற்றும் நுணுக்கமான வேலைப்பாடுகள் உங்கள் கண்களுக்கு விருந்தளிக்கும். யானை மண்டபத்திற்கு வந்தவுடன். இத்தாலிய நீரூற்றுகள் நிறைந்த ஒரு முற்றத்தை நீங்கள் காணலாம். அப்படி ஒரு ரம்யமான காட்சியாக அது இருக்கும்.

நவ்லகி படி கிணற்றின் அடிக்கல்லை குர்ஜார் வம்சத்தினர் நாட்டினர். ஆனால் அவர்கள் அதைக் கட்டி முடிக்கப்படவில்லை. பின்னர், முசாபர் ஷா, 15 ஆம் நூற்றாண்டில், நிறைவு செய்தார். கடுமையான கோடை நாட்களில் தண்ணீரை சேமிக்க கட்டப்பட்ட இந்த படிக் கிணறைக் கட்டி முடிக்க 9 லட்சம் தங்க நாணயங்கள் செலவானதாக கூறுகிறார்கள்.

இவற்றை எல்லாம் கண்டு ரசிக்க 1 முழு நாளே தேவைப்படும். இந்த இடத்தை பார்வையிட நமக்கு உதவியாக ஆடியோ டேப்கள் வழங்கப்படுகிறது. ஹிந்தி, ஆங்கிலம், குஜராத்தி மொழிகளில் இவை கிடைக்கும். இந்த அரண்மனை தனியாருக்கு சொந்தமானதால் இதை சுற்றி பார்க்க அவர்கள் தான் டிக்கெட்டுகள் தருகிறார்கள். இந்தியர்களுக்கு 225 ரூபாய், வெளிநாட்டவர்களுக்கு 400 ரூபாய் என்பது கட்டணமாகும்.

காலை 9:30 முதல் மாலை 5:30 வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர். குஜராத் பக்கம் ட்ரிப் போட்டால் இந்த வரலாற்று சிறப்பு மிக்க அரண்மனையை பார்க்க மறந்துராதீங்க மக்களே!

First published:

Tags: Gujarat, Travel, Travel Guide