தமிழக வரலாற்றில் செஞ்சி கோட்டைக்கு என்று தனி முக்கியத்துவம் உள்ளது. சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு கோன் வம்ச அரசர்களால் கட்டப்பட்டதாக கூறப்படும் இந்த கோட்டை, இன்றும் பழமை மாறாமல் நிலைத்து நிற்கிறது. அப்படிப்பட்ட செஞ்சி கோட்டையை பிரபலப்படுத்த மாவட்ட நிர்வாகம் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.
இன்று சிறு பேரூராட்சியாக இருக்கும் செஞ்சி, ஒரு காலத்தில் ஆந்திராவின் நெல்லூரிலிருந்து தஞ்சை வரை பரவியிருந்த நெடுநிலத்தின் தலைநகராக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ராஜகிரி, கிருஷ்ணகிரி, சந்திராயன் துர்கம், சங்கிலி துர்க்கம் என்ற நான்கு மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள இந்த கோட்டையை "கிழக்கு உலகத்தின் ட்ராய்" என ஐரோப்பியர்கள் புகழ்ந்துள்ளனர்.
அகழி, நீண்ட மதில்சுவர், குதிரை லாயங்கள், மாட மாளிகைகள், தர்பார் மண்டபம், கோயில்கள், தானியக் களஞ்சியங்கள், பீரங்கி மேடை, வெடிமருந்துக் கிடங்கு, பாதாள சிறை உள்ளிட்ட சகல அம்சங்களோடு பறந்து விரிந்து காணப்படும் இந்த கோட்டையின் சிறப்பை அனைவருக்கும் தெரியப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்தது.
அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக் கோட்டைக்கு மக்களை ஈர்க்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் `மரபு நடை விழா' கடந்த 7 ஆம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக செஞ்சிக் கோட்டையில் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஏழு நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் மக்கள் நுழைவு கட்டணம் ஏதுமின்றி கோட்டையை சுற்றிப்பார்க்கலாம். இந்த கோட்டையின் வரலாற்றை எல்லோரும் அறிந்துக்கொள்ள வேண்டும் என்பதே இதன் முதன்மையான நோக்கம் ஆகும்.
படங்களுக்கு பரிசு:
சுற்றி பார்க்கும் மக்கள், புகைப்படங்களை எடுத்து மாவட்ட ஆட்சியரின் @DistrictColVpm - என்ற ட்விட்டர் பக்கத்திற்கு அனுப்பலாம். அதில் சிறந்த 100 புகைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு நிறைவு விழா அன்று பரிசுகள் வழங்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இலவச பேருந்து :
இந்நிலையில், மரபு நடை விழாவினை காண வரும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், ஜனவரி 14-ம் தேதி வரை காலை 10 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து செஞ்சி கோட்டைக்கும், மாலை 5 மணிக்கு செஞ்சி கோட்டையில் இருந்து விழுப்புரத்திற்கும் இலவச பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Gingee, Local News, Travel, Travel Guide, Villupuram