• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • இன்று வனத்தியாகிகள் தினம்.. இந்த நாளுக்கு ஒரு பழங்கால வரலாறு இருக்கிறது தெரியுமா?

இன்று வனத்தியாகிகள் தினம்.. இந்த நாளுக்கு ஒரு பழங்கால வரலாறு இருக்கிறது தெரியுமா?

காட்சி படம்

காட்சி படம்

1730ம் ஆண்டில் செப்டம்பர் 11ம் தேதியில் தான் முதன் முதலில் இந்த தினம் அனுசரிக்கப்பட வேண்டும் என்று ஒரு மன்னரால் தேர்வு செய்யப்பட்டது.

  • Share this:
தேசிய அளவில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 11-ம் தேதி வனத்தைப் பாதுகாப்பதற்காக உயிரிழந்த வனத்துறை ஊழியர்களை நினைவுகூரும் வகையில் வனத் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. 2013 ஆம் ஆண்டில் சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் இந்த தினத்தை அனுசரிக்க வேண்டும் என்று அதிகாரபூர்வமாக கூறியது. அதன் பிறகு இந்த தினம் தேசிய அளவில் ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் இந்த தினம் தோன்றியதற்கு ஒரு பழங்கால வரலாறு ஒன்று இருக்கிறது. 1730ம் ஆண்டில் செப்டம்பர் 11ம் தேதியில் தான் முதன் முதலில் இந்த தினம் அனுசரிக்கப்பட வேண்டும் என்று ஒரு மன்னரால் தேர்வு செய்யப்பட்டது. இப்போது வரை பெரிதாக பேசப்படாத கெஜார்லி படுகொலை அன்றைய தினத்தில் தான் நடந்துள்ளது. இந்த துயர சம்பவம் அரங்கேறுவதற்கு முன்னதாக, ​​ராஜஸ்தானின் அப்போதைய மன்னராக இருந்த மகாராஜா அபய் சிங்கின் உத்தரவின் பேரில் தொழிலாளர்கள் கெஜார்லி மரங்களை வெட்டத் தொடங்கினர்.

இந்த மரங்கள் ராஜஸ்தானின் கேஜார்லி கிராமத்தில் உள்ள பிஷ்னோய் சமூகத்தைச் சேர்ந்த மக்களால் புனிதமாகக் கருதப்பட்டன. நாட்டுப்புறக் கதைகளின்படி, சிறிது கூட இரக்கமில்லாமல் மரங்களை வெட்டும் நபர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அமிர்தா தேவி என்ற பெண் புனிதமான கேஜார்லி மரத்தின் மீது தனது தலையை வைத்துக்கொண்டார். அவர்கள் மரத்தை வெட்ட மாட்டார்கள் என்று நம்பினார்.

ஆனால் மன்னரின் தொழிலாளர்கள் மரத்தோடு அமிர்தா தேவியின் தலையையும் சேர்த்து வெட்டினர். அமிர்தா மட்டுமல்லாது அம்மரத்தை புனிதமாக கருதும் பிஷ்னோய் சமூக மக்கள் அனைவரும் மரத்தின் மீது தலை வைத்து எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அமிர்தாவின் குழந்தைகள் உட்பட 350 க்கும் மேற்பட்டவர்களை மன்னரின் தொழிலாளர்கள் கொன்றனர். தாங்கள் புனிதமாக கருதும் மரத்தை காப்பாற்ற உயிரைவிட்ட அந்த துயர சம்பவம் ராஜா அபய் சிங்கின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.

இதனை தொடர்ந்து அவர் உடனடியாக தனது ஆட்களை பின்வாங்கச் சொன்னார். பிஷ்னோய் சமூகத்தைச் சேர்ந்த மக்களிடம் அவர் நேரில் சென்று மன்னிப்பும் கேட்டுள்ளார். அவரது மன்னிப்பின் ஒரு பகுதியாக பிஷ்னோய் கிராமங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் மரங்களை வெட்டுவதையும் விலங்குகளைக் கொல்வதையும் தடை செய்வதாகக் கூறி ஒரு செப்புத் தகட்டில் பொறிக்கப்பட்ட ஆணையையும் அவர் வெளியிட்டார்.

Also Read : இதயத்தை பாதுகாக்க சிறந்த உணவு முறைகள் எவை தெரியுமா? தெரிந்து கொள்ளுங்கள்..!

மேலும் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட செப்டம்பர் 11ம் தேதியை ஒவ்வொரு வருடமும் நினைவுக்கூறும் வகையில் வன தியாகிகள் தினத்தை பிஷ்னோய் மக்கள் அனுசரித்து வந்தனர். அதன் தொடர்ச்சியாக இந்த தினத்தில் இந்தியா முழுவதும் பல கல்வி நிறுவனங்கள் மரங்கள், காடுகள் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகின்றன.

மேலும் மரம் வளர்ப்பில் குழந்தைகள் ஈடுபடுவதை உறுதி செய்வதற்காகவும், காடுகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து அனைத்து நிகழ்வுகளும் விர்ச்சுவல் ஊடகத்திற்கு மாறிவிட்டன. இதன் விளைவாக, இந்த ஆண்டு இந்த தினம் தொடர்பான நிகழ்வுகள் வீடியோ மாநாட்டில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: