நீல வானத்திற்கான சர்வதேச சுத்தமான காற்று தினம் இன்று.. இந்நாளின் வரலாறு தெரியுமா?

காட்சி படம்

காற்று மாசுபாடு பூமியின் மென்மையான சுற்றுச்சூழல் அமைப்புகள், பல்லுயிர் மற்றும் காலநிலை ஆகியவற்றை மோசமாக பாதிக்கிறது.

  • Share this:
தூசி மற்றும் புகையே இல்லாத சுத்தமான காற்று, மனிதர்கள் மட்டுமல்ல பூமியின் அனைத்து உயிர்களுக்கும் இன்றியமையாத தேவையாகும். துரதிஷ்டவசமாக, 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உலகெங்கிலும் தொடங்கப்பட்ட தொழிற்சாலைகள், நமது காற்று மற்றும் நீர் ஆதாரங்களை பெரிதும் மாசுபடுத்தி வருகிறது. இதன் காரணமாக மக்கள், நுரையீரல் மற்றும் இதயம் தொடர்பான கடுமையான சிக்கல்களுக்கு ஆளாகியுள்ளனர். மேலும், இந்த பாதிப்பு காரணமாக ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்தியாவின் பல நகரங்களில் காற்று மாசுபாடு ஒரு மிகப்பெரிய பிரச்சனையாகவே வெடித்துள்ளது. இதனால் ஏற்படும் காலநிலை மாற்றத்தால் பூமியின் வெப்பம் பலமடங்கு அதிகரித்துள்ளது.

காற்று மாசுபாடு பூமியின் மென்மையான சுற்றுச்சூழல் அமைப்புகள், பல்லுயிர் மற்றும் காலநிலை ஆகியவற்றை மோசமாக பாதிக்கிறது. இந்த நிலையில், காற்றுமாறுபாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 7ம் தேதி நீல வானத்திற்கான சர்வதேச சுத்தமான காற்று தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினம் தோன்றியதற்கான வரலாறு குறித்து பின்வருமாறு காணலாம்.

வரலாறு:

2019ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி அன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை (UNGA), அதன் நிலையான வளர்ச்சி குறித்த தனது எழுபத்து நான்காவது அமர்வின் 52 வது நிறைவு கூட்டத்தில், ஒரு தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. இதன் மூலம் செப்டம்பர் 7ம் தேதி நீல வானத்திற்கான சர்வதேச சுத்தமான காற்று தினம் அனுசரிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. "அனைவருக்கும் சுத்தமான காற்று" என்ற கருப்பொருளுடன் 2020 ஆம் ஆண்டின் முதல் சர்வதேச தினம் அனுசரிக்கப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு ஐநா உறுப்பு நாடுகள், ஐநா அமைப்புகள், உலகெங்கிலும் உள்ள அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களால் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.

நீல வனத்திற்கான சர்வதேச சுத்தமான காற்று தினத்தின் தீர்மான அறிக்கை:

2030 ஆம் ஆண்டுக்குள் காற்று, நீர் மற்றும் மண்ணில் உள்ள இரசாயனங்கள் போன்ற மாசுக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் வியாதிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டியதன் அவசியத்தை அங்கீகரித்து, அதன் மூலம் " அனைவருக்கும் சுத்தமான காற்று" என்ற தீர்மானத்தை ஐ.நா. ஏற்றுக்கொண்டது. எனவே, காற்றின் தரம் மற்றும் கழிவு மேலாண்மை மூலம் சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்கும் விளைவுகளை குறைக்க நாமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஐநா-வின் தீர்மான அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, காற்றின் தரம் பற்றிய ஆராய்ச்சி மற்றும் தரவுகளை சேகரிப்பதற்கும், காற்று மாசுபாட்டை குறைப்பதற்கான தீர்வுகளைக் கண்டறிவதற்கும் வலுவான சர்வதேச ஒத்துழைப்பை ஐநா கோரியுள்ளது. காற்றின் தரப் பிரச்சனைகள் பற்றிய பொது விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை குறைக்க சுத்தமான காற்று உதவும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Also read : இன்டர்நெட் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கற்று தர வேண்டிய அடிப்படை விஷயங்கள்!

இந்த ஆண்டிற்கான கருப்பொருள்:

"ஆரோக்கியமான காற்று, ஆரோக்கியமான கோள்" என்பது இந்த ஆண்டின் நீல வானத்திற்கான சர்வதேச தினத்தின் கருப்பொருளாகும். இந்த தீம் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP) இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பிடப்பட்ட கருப்பொருள்கள் தவிர, இந்த ஆண்டு பருவநிலை மாற்றம் மற்றும் நிலையான வளர்ச்சியிலும் கவனம் செலுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த தினத்தின் அதிகாரப்பூர்வ விழாக்கள் நியூயார்க், நைரோபி மற்றும் பாங்காக்கில் நடைபெறும் எனவும் UNEP தெரிவித்துள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: