60 வயதுக்குப் பிறகும் ஆரோக்கியமாக வாழ வேண்டுமா? இதோ டிப்ஸ்!

மூத்த குடிமக்கள்

உங்களுக்கு நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என ஆசையிருந்தால், இங்கே கூறப்படும் டிப்ஸை பாலோ பண்ணுங்க. நிச்சயம் உதவியாக இருக்கும்.

  • Share this:
நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என விரும்பும் பலருக்கும் அவர்களது உடல் ஒத்துழைப்பத்தில்லை. வயதாகும் காலங்களில் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கும். இதனால் ஏற்படும் கவலைகூட நம் வாழ்நாளின் எண்ணிக்கையை குறைத்துவிடும். உங்களுக்கு நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என ஆசையிருந்தால், இங்கே கூறப்படும் டிப்ஸை பாலோ பண்ணுங்க. நிச்சயம் உதவியாக இருக்கும்.

உடல் உபாதைகள்

வயதாகும்போது உடலில் மெட்டபாலிசம் குறைந்து தசைகள் தளர்வடைவது இயல்பான ஒன்றுதான். அதனால், பல்வேறு நோய்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. வயதாவதை ஒருவராலும் தடுக்க முடியாது. உடல் ஆரோக்கியமாக வைத்திருப்பதும், அது மோசமான நிலைக்கு செல்வதும் அவரவர் கையில் உள்ளது. அன்றாட உடற்பயிற்சி மற்றும் உணவு முதல் தூக்கம் வரை அனைத்து செயலையும் ஆத்ம திருப்தியுடன் செய்யும்போது வயதான காலங்களில் ஏற்படும் நோய் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம்.

ஆரோக்கியத்தை மேம்படுத்துவது எப்படி?

60 வயதுக்குப் பிறகு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது சாத்தியமா? என பலர் எண்ணுகிறார்கள் அந்தந்த வயதுக்கு ஏற்ற அளவிலான உடற்பயிற்சிகளை செய்தும், உணவுகளை எடுத்தும் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லாதிருந்தால், தனக்கு எந்த உபாதைகளும் இல்லை என்று மெத்தனமாக இருந்துவிடக் கூடாது. வயதான காலத்தில் எந்த நொடியிலும் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. அதனால், நாள்தோறும் உடற்பயிற்சி செய்து உடலையும், மனதையும் புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ளுங்கள்

மருத்துவ பரிசோதனை

ஏற்கனவே கூறியதுபோல் வயதான காலத்தில் எப்போது வேண்டுமானாலும் உடலில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் பயப்பட தேவை இல்லை என்றாலும், வாரம் அல்லது மாதம் ஒருமுறையாவது மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள். மேலும், ரத்தப் பரிசோதனை, சர்க்கரை, ரத்தக் அழுத்தம் ஆகியவற்றை பரிசோதனை செய்து கொள்வது நல்லது. முன்னெச்சரிக்கையாக இருப்பது தேவையற்ற உடல் பிரச்சனைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும்.

மன நலன்

மன நலன் என்பது அனைத்து பருவத்தினருக்கும் மிக முக்கியமானது. அதனை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது அவசியம். அதாவது, மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்றால் புதிர் கணக்குகள், புதிய விளையாட்டுகள் மற்றும் உடற்பயிற்சிகள் ஆகியவற்றை செய்து மனதை திடமாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்துக் கொள்ளுங்கள். புதிய சிந்தனைகள் பிறக்கும்போது உடல் ஆரோக்கியமாகவும், பிரெஷ்ஷாகவும் இருக்கும்.

நேர்மறை சிந்தனை

மன நலன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் தேவையற்ற அழுக்குகளை மனதில் இருந்து வெளியேற்றிவிட வேண்டும். எப்போதும் நேர்மறையாக மட்டுமே சிந்திக்க வேண்டும். ஒவ்வொரு செயலில் நல்ல எண்ணத்துடன் அணுகும்போது, உடலும் மனதும் அமைதியாகவும், தெளிவாக இருக்கும். மேலும், நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள யோகா, தியானம் போன்ற பயிற்சிகளை செய்யலாம். சுவாசப் பயிற்சிகள் கூட மனதை ஒழுங்குப்படுத்த உதவியாக இருக்கும்.

ஆழ்ந்த உறக்கம்

வயதான காலத்தில் பொதுவாக பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தூக்கம். சரியான நேரத்துக்கு தூங்கி, காலையில் குறிப்பிட்ட நேரத்தில் எழுந்து விட வேண்டும். ஏறத்தாழ 8 முதல் 9 மணி நேரம் வரை வயதானவர்கள் தூங்கலாம். நிம்மதியான தூக்கத்தை எடுத்துக்கொள்ள பழகுங்கள். தூங்கச் செல்வதற்கு முன்பு மனதில் ஓடும் அனைத்து எண்ணங்களுக்கும் விடை கொடுத்துவிடுங்கள். புது மனிதனாக தூங்கி எழுங்கள். வாழ்க்கை நன்றாக இருக்கும்.

பிறருடன் உரையாடுதல்

வயதான காலத்தில் வீட்டிலேயே முடங்கி இருக்காமல் வெளியே சென்று பல்வேறு நபருடன் உரையாடுங்கள். அவ்வாறு செய்யும்போது தனிமையில் ஏற்பட்டிருக்கும் மன அழுத்தத்தில் இருந்து உங்களை விடுபடச் செய்யும். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுடன் விளையாடுங்கள். முடியாவிட்டால் அருகில் இருக்கும் பூங்காகளுக்கு சென்று அங்கு விளையாடும் குழந்தைகளை பார்த்து ரசியுங்கள். உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் மனம் விட்டு பேசுங்கள்.

உடல் எடை

நீண்ட நாள் வாழ வேண்டும் என்று விரும்பினால் உடல் எடையை சரியான அளவில் பராமரிக்க வேண்டும். உடலுக்கு தேவையான கலோரிகளை அறிந்து அதற்கேற்றார்போல் ஆரோக்கியமான காய்கறிகள், பழ வகைகளை தினசரி உணவாக எடுத்துக்கொள்ளுங்கள். ஜீரண கோளாறுகளை ஏற்படுத்தும் உணவுகளை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள். சுவைக்காக ஆரோக்கியமற்ற உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டாம்.
Published by:Sankaravadivoo G
First published: